Wednesday, December 10, 2008

நன்றி மீள்பார்வை

கடைந்தெடுக்க முயற்ச்சிக்கப்படும் திகாமடுல்ல வரலாற்று

அநியாய ஆதிக்கம் 2008

- முஹம்மட் உவைஸ்

திகாமடுல்ல கலாசார விழா 2008 என்ற பெயரில் அண்மையில் ஒரு ஆதிக்க நிகழ்ச்சி அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பல்கழைக்கழக ஆக்கிரமிப்பு, துறைமுக அபிவிருத்தியென்ற கோதாவில் மறைமுகமாகவே அரங்கேரிக் கொண்டிருக்கும் செயற்பாடுகள், தீகவாபி வீதி விஸ்தரிப்பிற்காக பறிக்கப்படப்போகும் ஒலுவில் முஸ்லிம்களின் ஜீவனோபாய வயல் நிலங்கள், முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கையினை முடக்கி விடுவதற்காய் ஒலுவிலைப் பிரித்து தீகவாபி பிரதேச பிரிவினை உருவாக்கி விடுதல் என்ற சிறுபான்மையினங்களிற்கு குறிப்பாய் முஸ்லிம்களிற்கு எதிரான நிகழ்வுகள் அரங்கேரிவருவதினை நாம் நன்கறிவோம். அதன் மற்றொரு விழாவாய் சிங்களப் பேரினவாதம் தன்னை இஸ்திரப்படுத்திக் கொள்ளும் மெகா நிகழ்ச்சி நிரலிற்கான ஒரு புள்ளியினை பெருமையுடன் தாண்டிய நிகழ்வின் பின் மிக ஆறுதலாக இந்தப் பத்தியினை எழுதுகிறேன்.

 

பல்துறை சார்ந்த முயற்ச்சியாளர்களிற்கு கௌரவிப்பு, மாதிரிக் கிராமங்கள், உள்ளுர் தயாரிப்புக்கள், கலைப்பொருட்கள் கண்காட்சி என்ற அனைத்து வகை சிங்கள மயமாக்களின் ஆதிக்க வடிவங்களுடன் அழகிய அரசியல் தலைப்பில் புதைபொருள் மற்றும் தொன்ம வரலாற்றுப் படிமங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த அழகிய அரசியல் தலைப்பு திகாமடுல்ல வரலாறு. உப தலைப்பு எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத மனிதர்கள்.

 

நமது வரலாற்றின் கடந்த காலங்களினைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை ஏற்கனவே நாம் இட்டுக் கொண்டுள்ள பின்புலத்தின் பார்வைகளினூடாய் சக்தியற்றதாய் நம் சகோதரர்கள் பார்த்துக் கொண்டும் கதையளந்து கொண்டும் திரியும் இக்கால கட்டத்தில்தான் இப்படியான அரசியல் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. நான்கு மதங்களினைப் பின்பற்றும் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தினை கபளிகரம் செய்வதில் பேரின திட்டமிடல் முனைப்புக் கொண்டுள்ளமை மிக வெளிப்படையான செய்திதான். ஆனால், அது இந்த கபளிகரத்திற்காய் கையாளும் திட்டமிடல்கள் மட்டும் வெளிப்படையானவையல்ல என்பதினை நாம் புரிதல் முக்கியத்துவம் பெறுகிறது. மிக நுண்னிய ஆக்கிரமிப்பு வழிகளினை இந்த ஆதிக்க சக்திகள் கையாள்வதினை அடையாளம் கண்டு கொள்ளும் போதுதான் அதிகாரத்தின் அனைத்து மட்டங்களின் செல்வாக்கும் இதற்குள் இருப்பது வெளிச்சத்திற்கு வருகின்றது.

 

நடந்து முடிந்த இந்த ஆதிக்க கலாசார விழா வளாக முன்றலில் நிறுவப்பட்டிருந்த கட்டவுட் பேரினவாதத்தின் மற்றொரு செய்தியினையும் கூறிநின்றதினை அங்கு சென்ற நம்மில் பலர் அவதானித்திருப்பார்கள். நான்கு மதங்களினையும் சேர்ந்த மக்களின் கலாசார பண்பாட்டினை சித்தரிக்கும் உருவ வரைபடத்தில் ஐந்தாவது மக்கள் பிரிவாக இலங்கை இராணுவத்தினரின் உருவம் வரையப்பட்டிருந்தது. இப்போது விளங்குமென நினைக்கிறேன் பேரினவாதத்தின் அடுத்த கட்ட ஆக்கிரமிப்பானது எந்த முகத்திரையுடன் வெளியே வரப்போகிறதென்பது.

 

இந்த கலாசார ஆக்கிமிப்பு விழா 2008 அதி கூடிய முன்னுரிமையினை வழங்கியிருந்த விடயமானது திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்கான புதிய சிங்கள பௌத்த அதிகார வரலாற்றினை எழுதுவதினையாகும். திகவாபியினை மையப்படுத்தி அங்குள்ள அனைத்துப் பொருட்களினையும் ஆதி இலங்கையின் வரலாற்றுடன் பிணைத்து அந்த ஆதி இலங்கை வரலாற்றினை சிங்கள பௌத்த வரலாறாக மாற்றியமைக்கும் புனிதத்தினை நிறுவும் முயற்சிகளை அங்கு செய்தனர். நீண்ட சிங்கள வரலாற்று ஆதிக்க நிறுவுதல்களின் தொடராகவே அரசின் அனுசரனையுடன் நடக்கும் இந்த விழாக்கள் தமக்கான பங்களிப்புக்களினை நிறைவேற்றி வைப்பதினை நாம் அவதானித்தல் வேண்டும். முஸ்லிம்களின் விவசாய, குடியிருப்பு நிலமான ஆலங்குளத்தின் மலையொன்றில் காணப்படும் படிக்கட்டுக்களை சிங்கள மன்னனெருவனின் ராசதானியாக புதிய தொல்லியல் ஆய்வுகள் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பரிசாகக் கொடுத்துள்ளதினையும் இந்த ஆதிக்க விழாவில் அவதானிக்க முடிந்தது. நுரைச் சோலை, ஆலங்குளம் என்பவற்றின் பின்னால் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்கள் இருக்கின்றன. மிக அண்மையில் அங்கும் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்படும் என்பது இந்த பேரினவாதத்தின் மெகா நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியும் போல. என்றாலும் மேட்டுக் குடி சமூக சிந்தனையாளர்களினையும் கௌரவத்துக்குரிய அரசியல் தலைமைகளினையும் நம்பி காலாகாலத்திற்கும் ஏமாந்து போகும் சமூகம் என்ற வகையில் நாம் வாய்பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோமா? என்ற அச்சம் கலந்த கேள்விகளே இன்று நம்முன் மிகுதியாய் இருக்கிறன.

 

அரச அதிகாரத்தின் பின்னணியில் நம்மைச் சூழ பல சதிவலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தினில் நமது இயங்கியல்கள் நமது இருப்பினை காத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றிய பார்வைகளினை பல்வேறு செயல் ஒழுங்குகளில் மேற்கொள்ள முயலவேண்டும். அரசியல், அரசாங்க அங்கீகாரத்துடன் ஜாதிக ஹெல உறுமய (இது உறுமிக் கொண்டுதான் இருக்கும்), சிவப்பு சாயத்துடனான நிதஹாஸ் பெரமுன என்பன இன்று முன்வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் பல நமது சகோதரர்களிற்கு அச்சத்தினை ஊட்டியுள்ளது. இந்த அச்சமானது நமக்கான வரலாற்றுப் பார்வைகளிலும் இன்னும் முற்றுப் பெற்று விடாத வரலாற்றின் கடந்த கால நிகழ்வு பற்றிய மீள்வாசிப்பிலும் நம்பிக்கையற்ற செய்திகளை கிளரிவிட்டுக் கொண்டிருக்கின்றன. கலாசார, நில, வரலாற்று, அறிவியல், வாழ்தல் என்ற பல்வகை அடக்கு முறைகளுக்குள் அகப்பட்டுள்ள நாம் இவற்றின் முன் நமது நிலைக்களன்களினை நியாயமான முறைமைகளின் வழியில் மாற்றுக்களாய் முன்வைத்தேயாக வேண்டும்.

Tuesday, November 11, 2008

மீள்பார்வை இதழ் 158 கருத்துக் களம் பஸ்லான், பிஸ்தாபி ஆகியோரின் வாசிப்புக்களை முன்வைத்து...

முக்கிய குறிப்பு.. கீழே வலையேற்றப்பட்டுள்ள பதிவிலிருந்து 07பகுதிகளை நீக்கிவிட்டு மீள்பார்வை இதழ் 160 பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட பகுதிகள் இப்பதிவில் அடையாளமிடப்பட்டுள்ளன.

மீள்பார்வையின் தொடர் வாசகர்கள் இரண்டு பேரின் மிக முக்கியத்துவம் கொண்ட வாசகர் கருத்தினை முன்நிறுத்தி சில விடயங்களை கதையாட முடியும் என நினைக்கிறேன்.

மீள்பார்வை இதழ் 156யையும் அதன் வடிவமைப்பையும் முன்வைத்து பஸ்லான் என்பவர் அவரது பார்வையினை கடந்த 158வது இதழில் குறிப்பிட்டு இருந்தார்.156வது இதழ் உண்மையிலே மிக வித்தியாசமான கட்டுரைப் பிரதிகளை முன்வைத்திருந்தது. சமநிலைச் சமுதாயத்தில் மிக நீண்ட நாட்களின் முன் வெளிவந்திருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மானின் உலகின் பூர்வீகத்தின் பரம்பல் பற்றிய கட்டுரை ஒன்று. மற்றையது பிஷ்ர் - அல்ஹாபி அவர்களின் இராமாயனத்தை முன்வைத்த ஆய்வின் சிறு பகுதி. இந்த இரண்டு பிரதிகளும் நிச்சயமாக வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பான பிரதிகள்தான். இவை நண்பர் பஸ்லான் அவர்களுக்கு சலிப்பை ஊட்டியிருப்பதை நினைக்கும் போது அவர் வரிக்கு வரி மீள்பார்வையின் வாசிப்பாளன் என்பதை பறைசாட்டுவதில் இருக்கின்ற பொய்மையும் மிக மேலோட்ட மீள்பார்வை நுகர்வாளன் என்பதையும் வெளிப்படுத்துகிறது. மீள்பார்வை பத்திரிகை, இலங்கை முஸ்லிம்களின் அரசியலின் மிக முக்கிய காலகட்டத்தின் பிரதிநிதி. மீள்பர்வை இந்த முறை எதை முன்வைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுடன்தான் ஒவ்வொரு இதழ்களும் புரட்டப்படும். மீள்பார்வைக்கு இருந்த சமூக அங்கீகாரம் என்பது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பற்றிய பாதை வகுப்பில் பின்தள்ள முடியாத பிரசங்கத்துடன் தொடர்பானது. ஒரு கருத்தின் ஊடாக அபூ நதா (உஸ்தாத் மன்சூர்), ஏ.பீ.எம். இத்ரீஸ், அவதானி (சிறாஜ் மஷ்சூர்), யு.எல்.நியாஸ் மற்றும் இன்னும் பலரினதுமாய்  நீண்டு சென்ற அரசியல், கோட்பாட்டு பத்திகளின் அனைத்து போக்குகளின் பின்னிருந்த தளப்போராட்டத்தினை அறவே அறிந்திருக்காமலும் ஆகக் குறைந்த பட்சம் அவை பற்றிய எந்த வாசிப்பு முயற்சிகளும் இன்றி மீள்பார்வையின் வரலாற்றுக் களம் பற்றி அறிக்கைவிடும் கெட்டிக்கார தனத்தினை நினைத்து ஓங்காலம்தான் வருகிறது. ஒரு தசாப்தம் தாண்டிய மீள்பார்வையின் வரலாறினை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு வாசகனின் வாசிப்பாக பஸ்லானின் கருத்தினை பார்க்கிறேன். அல்லது பஸ்லான் மீள்பார்வையின் வாசிப்பாளன் ஆகிய போது மீள்பார்வை இந்தளவு முக்கியத்துவமான பிரதிகளை முன்வைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை மீள்பார்வையின் அரசியல் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞை அற்ற ஒரு வாசிப்பாகத்தான் அவரின் கருத்தினை பார்க்க முடிந்தது. முஸ்லிம் சமூகத்தின் கள நிலவரங்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கதையாடல் பற்றிய மறு பிரசுரத்தினையாவது மீள்பார்வை பிரசுரிப்பதற்கு கூட மீள்பார்வைக்கு இடம் இல்லையா? அல்லது மீள்பார்வையின் பாதையின் விஸ்தாரம் பற்றிய எவ்வித பார்வையுமின்றிய பக்கம் புரட்டும் வாசகனா மீள்பார்வைக்கு வேண்டும் என்று இந்த மேலோட்ட வாசக நெஞ்சத்திடம் கேட்கிறேன். மீள்பார்வையின் பன்மைத் தன்மை குறித்து அதனை ஒரு சிறப்பம்சமாகக் கருதும் இந்த நண்பன் மீள்பார்வை பிரசுரிக்கும் பிரதிகளை மாத்திரம் பன்மைக் கதையாடலாகப் பார்ப்பதில் இருக்கும் கோளாறைப் பற்றி என்ன சொல்வது?.

 

அடுத்தது பிஸ்தாபி - மல்வானை என்ற பெயருடன் வெளிவந்த வரலாற்றின் பல்தன்மை பற்றிய விளக்கங்களுக்கு அப்பாற்பட்டு இருந்த வாசிப்பாகும். பிஸ்தாபி ஏன் சில விடயங்களை மறைத்துக் கொண்டு தன் மதிப்புக்குரிய வாசகர் கருத்தினை முன்வைக்க வேண்டும். மிக வெளிப்படையாக பேச முடியும்தானே..? நம்மிடையே இருக்கும் ஊடகங்கள் இன்னும் தணிக்கை நிறுவனங்களை நடாத்தவில்லை. சோனக தேசம் தொடர்பாக நீண்ட காலமாக உதிரியாக நடைபெற்றுக் கொண்டிருந்த உரையாடல்களினை மரூதூர் பஷித் ஒரு கட்டத்திற்கு நகர்த்தினார். பின்னர் ஏ.பீ.எம்.இத்ரீஸ் நளீமி அது பற்றிய இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான பார்வை பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். இலங்கை முஸ்லிம் தேசத்தின் முக்கிய கதையாடல் தளம் என்ற வகையில் பெருவெளி இதழ் சோனக தேசம் பற்றிய உரையாடலினை எவ்வித ஒளிவுமறைவுமின்றி மிக வெளிப்படையான பேசு பெருளாக மாற்றியது. இதன் பின்னர் முஸ்லிம் தேசத்தின் மற்றொரு களமாக காணப்படும் மீள்பார்வை அது பற்றிய சில வரலாற்று தடயங்களை கவிக்கோ அப்துல் ரஹ்மானின் பிரதியினூடாய் முன்வைத்தது. (இதனையே தோழர் பிஸ்தாபி பெயர்களை கூறாமல் நாகரீகமாக முன்வைத்தார். ஆனால் இந்த வகை வரட்டு நாகரீகங்கள் ஆய்வுப் பகுதிகளில் ஏற்புடைய விடயமல்ல என்ற கருத்தினை கொண்டிருப்பதாலேயே அதனை வெளிப்படையாக கூறியுள்ளேன்)

 

எதிரிகள் எம் இருப்பைத் தகர்க்கவும் தவிடுபொடியாக்கவும் ஆதாரங்களை முன்வைக்கும் போது மண்ணின் மைந்தர்கள் நாம்தான் என்ற வாதத்தை உண்மைப்படுத்த எம்மிடம் நிறைய ஆதாரங்கள தேவைஎனும் பிஸ்தாபி, “பேச வேண்டும் எழுத வேண்டும் என்பதற்காக அல்லது ஆதம் நபி முஸ்லிம் என்பதற்காக மட்டும் எம்மை இந்த தேசத்தின் சொந்தக்காரர்களாக காட்ட முனைவதை பேரினவாதம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதுஎன்கிறார். மேலும் அவ்வாறே உண்மை வரலாறு நிரூபிக்கப்பட்டாலும் சிறுபான்மையாக உள்ள எமது அரசியல் நிலைப்பாடு எவ்வாறு மாறும் என்பது கூட விடுக்கென தீர்மானிக்க முடியாத ஒன்று. எனவே யதார்த்தங்களை கடந்து இலங்கையின் சமகால அரசியல் பொருளாதார செல்நெறிகளுக்கு அப்பாற்பட்டு சோனக தேசம் பற்றி பேசுவது குண்டுச் சட்டியில் குதிரை நட்டுவது போல் உள்ளது”. (Proof: குதிரை நட்டுவது அல்ல குதிரை ஓட்டுவது). மேலே நான் குறிப்பிட்ட மேற்கோள்கள் நண்பன் பிஸ்தாபியின் வாசிப்பிலிருந்து எடுத்திருக்கிறேன்.

 

பிஸ்தாபியின் இந்த மேற்கோள்களை வைத்துதான் அவரின் வாசிப்பு பிரதியின் உண்மையான ஊசலாட்டத்தின் ஆழம் பற்றிய கேள்விகள் எழுகின்றன. நான் எடுத்துக் காட்டியுள்ள முதல் மேற்கோளில் சோனக தேசம் பற்றிய ஆய்வு மிக அவதானத்துடன் பலமான வரலாற்று, சமூக, அரசியல் வகைமைகளுக்குள்ளால்  முன்னெடுக்கப்பட வேண்டும் என பிஸ்தாபி கருதுவதாய் கொள்ள முடிந்தாலும் இரண்டாவது மேற்கோளானது இவரைப்பற்றிய அச்சத்தினைத் தருகின்றது. ஏனெனில் பிஸ்தாபி பேரினவாதத்தின் ஏஜென்னடாக இந்த இடத்தில் தொழிற்படுகிறார். பேரினவாதம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்கிறார். ஒரு பேரினவாதியின் பக்கமிருந்து முஸ்லிம் சமூகத்தின் ஆய்வுப் பின்புலத்திற்கு விழுகின்ற அதிகாரத்தின் தொனியாக இது இருப்பது போல் தெரிகின்றது. பேரினவாதத்தின் போக்குகளை இவர் எவ்வாறு தன் தரப்பில் இருந்து கூற முடியும்?. மீள்பார்வை ஆசிரிய பீடம் இப்படியான பேரினவாதத்தின் முகவர்களாக மாறி முஸ்லிம் பெயர்களில் செயற்படும் இஸ்லாத்தின் மைந்தர்களைப் பற்றிய சற்று அவதானமெடுப்பது முக்கியமாகப்படுகிறது. பிஸ்தாபி சோனக தேசம் பற்றிய கதையாடல்களில் முனைப்புக் கொண்டுள்ள ஏபீஎம். இத்ரீஸ், பெருவெளியினரின் முன் குறிப்பிடும் பேச வேண்டும் எழுத வேண்டும் என்பதற்காக.. என்ற கேவலமான அறியாமைப் பதப்பிரயோகம் பிஸ்தாபி என்ற பேரினவாதத்தின் மூளைச் சலவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட முஸ்லிம் அடையாளத்தினை கொண்டவரையே நோக்கி திரும்பிவிடும் அழகினை ரசிக்க முடிகிறதல்லவா?. துப்பிய எச்சில் தன் முகத்தில் விழுவது என்ற கருத்தின் செயல்வடிவம் இது.

 

பிஸ்தாபியின் வாசிப்புப் பிரதியின் கடைசிப் பந்தி.. எந்த வித வரலாறு பற்றிய பார்வைகளையும் அறிந்திடாத ஒரு வாசிப்பாளனின் வரலாற்றுக்கான வியாக்கியானமாய் அமைந்து விடுகிறது. பேச வேண்டும் எழுத வேண்டும் என்பதற்காக சாதாரண அறிவுக்கும், சிறுபான்மை அரசியல் போக்கின் வழிமுறைகள் பற்றிய எந்தவித நோக்குகளுமின்றி நண்பரே நீங்கள் உரையாடுவது அபத்தத்தில் சென்று முடியும் வாய்ப்புள்ளதாலேயே இவ்வாறு குறிப்பிடுகிறேன். மற்றும்படி உங்களின் பேச்சு, எழுத்து முயற்சிகள் மீது உங்களிற்கு எவ்வளவு உரிமம் இருக்கிறதோ அதே போல் அதற்கு எதிரான வன்முறையை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்க்கிறேன். நான் மதிக்கும் இந்த உரிமத்திற்காக யாரினதும் எழுத்தின், பேச்சின் முன் எதிர்க்கதையாடலை நிகழ்த்துவதற்கு பின்நிற்கப் போவதுமில்லை. சிறுபான்மையாய் இருப்பதன் காரணமாய் எமது நிலைக்களனை ஏன் மறைத்தும் அது ஆதாரங்கள், உண்மையானது என்ற நிலைப்பாட்டுடனும் அடங்கிப் போக வேண்டும் என்ற கேள்வியினை எழுப்புகிறேன். சிறுபான்மையின் போராட்ட ஒழுங்குகள் என்று விடயம் தொடர்பாய் மீள்பார்வை மற்றும் இதர எழுத்தியக்கங்களின் வெளீயிடுகளினையும் நூல்களையும் வாசிப்புச் செய்ய முயன்றால் இலங்கையின் ஆக்கிரமிப்பு அரசியல் நிறுவனங்களுக்கு முன் நமது போராட்ட பக்கங்களின் வடிவமைப்பினைப் பற்றி கண்டுகொள்ளலாம் நண்பரே.

 

பிஸ்தாபி நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் மல்வானையின் பழைய ஆட்சியியலை எடுத்துப் பார்க்கவில்லையா? உங்களின் காலடியின் கீழே உள்ள எழும்பு மச்சங்களில் சோனக ஆட்சியின் ஒரு நீண்ட தொடர் புதைந்து கிடக்கிறது. களனி ஆற்றின் படுக்கைகளிலும் அந்த சேற்றின் கீழும் நமது மூத்தவாப்பாமாரின், மூத்தஉம்மாமாரின் ஒரு தொகை வரலாறு அமிழ்ந்து கிடக்கிறது. பேரினவாதத்தின் முன் உங்களின் முதலெழுத்துக்களை நீங்கள் வேண்டுமானால் மறைத்து மொட்டையாய் உங்களை குறிப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆனால் முஸ்லிம் தேசத்தின் கதையாடல்கள் எமது மூத்தவாப்பா, மூத்தஉம்மாமாரை எமக்கு மீட்டுத்தருவதாக இருக்கிறது. மேலும் சமகால அரசியல் நெறிகளை நீங்கள் ஒரு முடிந்த முடிவாகக் கருதுவதன் விளைவாகவே அதனை ஒரு பலமான வரலாறாக கருதுதிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைய உலகின் போக்கில் எதையும் முடிந்த முடிவுகளாகப் பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் போராட்டங்களில் இதன் தாக்கம் மிகப் பெரியது. சோனக தேசத்தின் ஆய்வு முயற்சியும் அது பற்றிய கதையாடல்களும் கூட ஒரு நாளும் முடிந்த முடிவுகளாகக் கொள்ளத்தக்கவையல்ல. குண்டுச் சட்டிக்குள் அல்ல உலகக் குண்டின் மீதே குதிரையோட்ட முடியும். அதிகாரம் என்பதெல்லாம் வெறும் மாயைகள் என நம்புகிறேன். தொடர்ந்தும் உரையாடுவோம்.

- பர்ஸான்.ஏஆர்.