Wednesday, June 17, 2009

எதுவரை? - சிறந்த உரையாடல் சந்தர்ப்பம்

மருதமுனையில் நடந்த எதுவரை? அறிமுகக் கூட்டத்தில் நான் பேசியவை நண்பர் ஸவ்பி அவர்களின் வேண்டுகோளிற்கு பின் பதிவாகியது. அதுவே இங்கு வலையேட்டப்படுகிறது. தகவல்களை நினைவு படுத்திய நண்பர் ரபியூஸ் அவர்களிற்கு நன்றிகள்.
----------------------------------------
ஜேர்மனியின் முக்கிய படைப்பாளியாகவும் மனித நேயமுள்ளவராகவும் இறை விசுவாசியாகவும் அறியப்படுகி ன்ற வண. மார்டின் நீமோல்லர் (Rev. Martin Niemoller) பற்றி நமக்குத் தெரியும். கிட்லரிற்கு சார்பாக இருந்த போது அவர் நட்சத்திர அந்தஸ்தினை ஆட்சியாளர்களால் பெற்றிருந்தார். பின், இரண்டே வருடத்தில் தன் போக்கில் மாற்றம் ஏற்பட்டு நாசியத்தின் எதிர்ப்பாளனாக மாறி கிட்லரின் ஷாஸன்ஹஉஸின்(sachsenhausen) வதை முகாமின் கொடுமை களுக்கு அத்தாட்சி யாகிப் போனாவர். அவரின் புகழ்பெற்ற வரிகளான -

“In Germany, the Nasiz first came for the Communists,

and I did not speak up because I was not a Communist.


Then they came for the Jews,

and I did not speak up because I was not a Jew.


Then they came for the trade unionist,

and I did not speak up because I was not a trade unionist.


Then they came for the Catholics,

and I did not speak up because I was a Protest..


Then they came for me, and by that time,

there was no one left to speak up for me” என்ற வரிகள்தான் இப்போது என் நினைவிற்கு வருகின்றன. இதே வரிகளை கம்யூனிச தோழர்கள் அரசியலுக்காக, மக்களுக்காக இலக்கியம் படைக்காதவர்களை நோக்கிக் கூறியதாக ஒரு தகவலும் உண்டு.

ஆனால் இனறுள்ள சூழலில் மனித அவலத்தின் மீதுள்ள, வன்முறைகளின் மீதுள்ள நமது எதிர்ப்புக்கு கிடைக்கும் பரிசுகள் மக்கள் இலக்கியம் என்ற மனிதாபிமானப் போராட்டத்தினை ஒட்டு மொத்தமாய்ச் சிதைத்து விடுகின்றது. அதே நேரம் இந்த சிதைவிற்கு அஞ்சி நமது எழுத்தியக்கம் உட்பட நமது போராட்டங்களில் நாம் போர்த்திக் கொண்டுள்ள பெரும் மௌனங்கள் நமது வாழ்வினை உள்ளரிப்புச் செய்து கொண்டுள்ளதினையும் மறந்துவிட முடியாது. இப்படியான இரண்டும் கெட்டான் சூழுலில்தான் நாமும் நமது வாழ்வின், நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் பெரும் காவுக்குள் சிக்கித்தவிக்கிறன. நாம் நம்பிய அரசியலும் போராட்டங்களும் வெறும் உணர்ச்சிகளின் வடிவத்தினையே கொண்டிருந்தன. அவற்றினால் நமது மக்களின் தொடரான வாழ்வினை மேம்படுத்தும் எந்தவித திட்டங்களும் சக்தியும் இருக்கவில்லை என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நமது செயற்பாடுகள் இன்னமும் நம்பிக்கையளிக்கும் வழியாக வெவ்வேறு இயங்கியல்கள் ஊடாக தொடாந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கான மற்றொரு வடிவமாகத்தான் பௌசரின் எதுவரை? இதழினைப் பார்க்கிறேன்.

அதுவும் பௌசர் காக்காவின் இயங்கியலை இது வரை இங்கிருந்து பார்த்திருக்கிறோம். அவரிற்குள்ள பரந்த தொடர்பும் நமக்குத் தெரியும். அதே போல அவரின் மீதுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் நாம் அறிந்தவைகள்தான். அவைகளை முன்நிறுத்திக் கொண்டு இந்த இதழினை வாசிப்புச் செய்வது பொருத்தமான பகுப்பு முறையென்று சொல்லமாட்டேன். அந்த வகையில் பௌசரின் பின்னணியிலிருந்து எதுவரை?யினைப் பார்க்காமல் இலங்கையிலிருந்து மிக அண்மையில் வெளியேறிய ஒரு இயங்கியலாளரின் புலம் பெயர் செயற்பாடாகத்தான் இதனை அவதானித்தல் நமது வாசிப்புக்கு குறுக்கீடுகள் அற்றதாய் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

2000மாம் ஆண்டுகள் புலம் பெயர் வெளியீடுகளின் முக்கிய குவியமாக இருந்தன. அதிகமான இதழ்கள் பன்மைக் கதையாடல்களுடன் வெளிவந்தன. அதே போல சரிநிகரின் வீச்சும் அதிகமாகவிருந்த காலம் இதுவாகும். அந்தத்தன்மை கீழிரங்கி இதழ்களின் தொடர்ச்சியினை கண்டு கொள்வதே கடினமாகிவிட்டது. எப்போதாவது இருந்து கொண்டு பிரான்சிலிருந்து ''உயிர்நிழல்'' (கிடைக்கிறது), நோர்வேயிலிருந்து ''உயிர்மெய்'' (கிடைப்பதில்லை), கனடாவிலிருந்து ''வானமே எல்லை'' (கிடைப்பதில்லை) என்பனவும் இங்கிருந்து எங்களின் ''பெருவெளி''யும் இப்போது தொடராக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிதி நெருக்கடி மிக முக்கியமான பிரச்சினை. இவை தவிர இணைய இதழ்கள் ஏராளமாய் நம்மிடையே கிடைக்கின்றன. அவ்வாறுதான் சுயமான இணையங்களும் வலைப்பூக்களையும் இன்றைய நாட்களில் காணக்கிடைக்கிறது. இந்த வரிசையில் ''மூன்றாவது மனிதனு''க்குப் பின் எதுவரை? நம்மமிடையே வெளிவந்துள்ளது. அனைத்தையும் தாண்டி ஒரு புதிய போக்குடன் மற்றொரு இதழ் வெளிவந்திருப்பதினை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

சரி இனி இதழுக்குள் வருவோம், இங்குள்ள பலரும் இந்த சஞ்சிகை பற்றி கதைக்கவிருப்பதனால் மிகச் சுருக்கமாக நான் சில பிரதிகளை மட்டும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்வது நல்லதென்று நம்புகிறேன். இதில் தோழர் ஜமால், ஷோபா சக்தி ஆகியோரின் பிரதிகளை ஏற்கனவே நான் வாசித்திருந்தேன். அது தவிர 'புலிகளுக்குப் பிறகு' - அ.மார்க்ஸ், 'சிறுபான்மையினரின் ஒருமைப்பாடு'-நிர்மலா போன்ற பிரதிகள் இலங்கையின் அரசியலுடன் முன்நிறுத்தப்பட்டுள்ள முக்கிய பிரதியாகக் கொள்ளலாம். இலங்கையில் வசித்துக் கொண்டு இங்குள்ள அழிவுகளிற்கு சாட்சியாகவிருக்கிறோம் என்ற வகையில் நிர்மலாவின் பிரதி பல போதாமைகளோடு இருப்பதாகப்படுகிறது. ஏனெனில் இது மேலோட்டப் பிரதி. ஒன்று கூடுவோம், இணைந்து செயற்படுவோம், அனைவரையும் ஏற்றுக் கொள்வோம், என்பனவற்றினை எத்தனை நாளுக்கு இப்படியே எழுதியும் பேசியும் வரப்போகிறோம் என்பது தெரியவில்லை. இதைத்தாண்டி ஒன்றையும் நாம் செய்யவில்லை. கூடி கலைவதே பெரியதொரு விடயமாக நம் முன் இருக்கிறது. நமது மக்களின் வாழ்வு பற்றிய எந்தத் தீர்வும் நம் தலைமைகளிடம் இல்லை. குறிப்பாக எடுத்துக் கொள்ளுங்களேன். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தேவைப்பாடு பற்றிய எந்தவொரு ஆவணமாவது நம் தலைமைகளிடம் இருக்கின்றதா? அல்லது நாமாவது அதனை தயாரித்துள்ளோமா? சிலர் முக்கிய ஆய்வினை செய்து விற்பனைக்கு கொடுக்கத்தான் தயாராகவிருக்கின்றனர். இன்றுள்ள மிக முக்கிய செயற்பாடு சர்வதிகாரத்திற்குள் சிக்கித் தவிக்கின்ற இலங்கையினை மீட்பதுதான். சில விடயங்களை வெளிப்படையாக என்னால் கதைக்க முடியாது என்பதற்காக நானே இவ்விடத்தில் வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.

முப்பெரும் ஆட்சியின் விளைவு இன்று நம்மைச் சூழ்ந்துள்ளது. இந்த சதிவலை பல்வேறு மாயாஜாலங்களினால் காட்சியளிக்கிறது. உக்கிரம் அடைந்துள்ள புலிகளுடனான போரும் அது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற வெற்றி விழாக்களும் இந்த மாயாஜாலத்தின் அகோரத்தின் கொடும்வன்முறையினை மறைத்துக் கொண்டிருப்பாதினை நாம் அனுபவிக்கிறோம். புலிகள் விட்ட பல்வேறு அரசியல் பிழைகள் இன்றைய முப்பெரும் ஆட்சியின் பலமாகிவிட்டன. இந்தப் பலத்தின் முன் நமது தலைமைகளாக இருந்து கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் ராசாக்களின் கதையும் கிளைமேக்ஸ் கட்டத்திற்குள் வந்துள்ளதினை நாம் காண்கிறோம். முப்பெரும் ராஜாக்களினைத் தவிர வேறு எவர்களிற்கும் இவர்களின் செவிப்பறை மென்சவ்வுகள் உணர்திறன் கொண்டவைகளாக இருக்க முடியாது. ஆக, இந்த இடத்தில் சர்வதிகாரத்திலிருந்து இலங்கையைக் மீட்பது எவ்வளவோ முக்கியத்துவம் பெறுவதைப் போல நம் மக்களின் அரசியல் விளிப்பை மேம்படுத்தலும் பெரும் முக்கியமாய்ப்படுகிறது. மக்கள் போராட்டங்கள் மட்டும்தான் இனி சாத்தியப்படுபவையாகும். போலியான முலாம் கொண்ட போராட்டங்களின் வடுக்களினை நாம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என்ற வகையில் இதனைச் சொல்கிறேன். வீதிக்கு மக்களைக் கொண்டு வருவது பற்றிய தேவைக்கு முன் இந்த விளிப்புணர்வின் அவசியம் முக்கியமல்லவா?

பேராசிரியர் அ.மார்க்ஸ் கூறுவது போல 'வீங்கிப் போன ஒரு அதிகார வர்க்கம், ஊதிப் போன ஒரு அமைச்சரவை(106 பேர்!), ஒப்பிட்டுச் சொல்ல இயலாத ஊழல், குடும்ப ஆட்சி, இராணுவத்தின் ஆட்சியுடன் வெளிப்படையாக இயங்கும் கொலைப்படைகள், ஆள் கடத்தல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள்.. இதுதான் ஸ்ரீலங்கா'. எனும் போது நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன இருக்கிறது என விட்டுவிடமுடியவில்லை. ''கொலைகளின் தேசத்தில் பிறந்தேன்'' என நான் எழுதிய கவிதையின் தலைப்புதான் நினைவிற்கு வருகின்றது. போராசிரியர் அ.மார்க்ஸின் இந்தக் கட்டுரையானது நமக்கு முன் பல செய்திகளை தேடித்தந்திருக்கின்றது . அவரே தொலைபேசியில் கூறியது போல 'புலிகளை விமர்சித்தால் மஹிந்தவின் ஏஜென்டுகள் என்று தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் கருதுகின்றனா';. ஏனெனில் தமிழகத்தின் தேர்தல் கூத்துக்களும் தழுவல்களும் இன்று அவர்களின் அரசியல் பாதையினைப் பற்றிய பெரும் சந்தர்ப்பவாத கேவலத்தினை அரங்கேற்றிவிட்டதை நாமெல்லாம் கண்டோமல்லவா. அதே போல்தான் அரசை விமர்சித்தால் நாம் புலிகளாகிறோம். புலிகளை எதிர்ப்பதால் அரச எடுபிடிகளாகிறோம். இந்த திரிசங்கு நிலைக்குள்ளால் நமது இலக்கியங்கள் முன் பெரும் வரலாற்றுத் தேவை இருப்பதினை எப்படி மறுத்தொதுக்க முடியும்.

ஷோபா சக்தியின் ''எம்.ஜி.ஆர். கொலைவழக்கு'' ஈழப் போராட்டத்தில் உருவாகியிருந்த பெரும் அறியாமையின் பங்கினை சொல்கின்றதாய் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிஸம் எவ்வாறான வாழ்வொழுங்கில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புக்கள் இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்போது எம்.ஜி.ஆர் இல்லாவிட்டாலும் தமிழ் நாட்டு சினிமாவின் கூலாங்குப்பைகளெல்லாம் இலங்கையிலும் வாழ்ந்து கொண்டேயிருப்பதை அன்றாடம் பார்க்கிறோம். மற்றும் இயக்கங்களிற்கு இடையிலான பெரும் கருத்து மோதல்களை ஷோபாசக்தியின் கதைகளில் நன்கு காணலாம். ஒரு ஈழப் போராளியின் வாழ்வின் சில பகுதிகளை நமக்குச் சொன்ன 'கொரில்லா'விலிருந்து இன்று வரை அவர் இந்த மாதிரியான வரலாற்றுப் பதிவுகளை ஷோபா நமக்குத் தந்து கொண்டேயிருக்கிறார். மேலும் இவரின் கதைகளின் சட்டம் கவனிப்புக்குரியது. பிரஞ்சில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றல் கொண்ட ஷோபாவின் பிரதிகளில் இந்தப் பண்பினை நாம் காணக்கூடியதாய் இருக்கும். அவரின் ரமழான் கதையும் இவ்வாறான புதிய கதைசொல்லும் பாங்கினையே வெளிப்படுத்தியிருந்தது. இதே போன்ற தன்மையினை ரமேஷ்;-பிரேம், சாரு நிவேதிதாவின் கதைகளிலும் காணலாம். ஏன் நமது மிஹாத், றியாஸ் குரானா, அப்துல் றசாக் போன்றோரின் கதைகளும் இந்த வகையினத்திற்குளேதான் காணப்படுகின்றன.

மற்றொரு விடயம் ஷோபாவின் இக்கதையில் முக்கியமானது. கதையை நமது பௌசர் காக்காவிற்கே சொல்லுவது. அதிலும் கதை ஆரம்பிக்கும் வரிகள் அலாதியாக இருக்கின்றன. ''கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இக்கதையை நீங்கள் நம்பலாம். அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை..'' புலம் பெயர்வும் இன்னும் அழிந்து போய்விடாத இழப்பின் வடுவும் நமது கழிவிரக்கத்தினை அசைபோட்டுக் கொண்டுதானேயிருக்கின்றன. ஆனால் டொனாஸ்தான் என்ன செய்ய முடியும். அவனுக்கு எம்.ஜி.ஆர் கூட சரியாக அறிமுகமாகாமலே அவனை இயக்கம் வளர்ந்த்துவிட்டதே. நானும் எம்.ஜி.ஆரும் மிக அண்மையில் அதிகமாக நட்புக் கொண்டிருந்தோம். உங்களுக்கு இதை நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். இந்தியத் தேர்தல் காலம் தானே. மீளவும் மக்கள் திலகத்தின் படங்களையும் பாடல்களையும் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜெயா தொலைக்காட்சி இதைத்தானே செய்து கொண்டிருக்கிறது. "ஷோபா சக்தி மாமா, எம்.ஜி.ஆர். உண்மையில் நல்ல ஆள்!" என்றாலும் உங்களின் பதிலில் எனக்கு உவப்புத்தான்.

நேரம் அதிகமாகச் சென்று கொண்டிருப்பதனால் மீதமான வாசிப்புக்களைச் சுருக்கிக் கொள்கிறேன். குறிப்பாய் தோழர் ஜமாலனின் 'தமிமீழமும் தமிழர்களும் உலகமய-காலனீயத்தின் சோதனை விளையாட்டுகள்' என்ற பிரதி சிங்கள மயமாக்களின் கொடூரத்திற்கு சிறந்த வரலாற்று எழுதுகையாகும். என்றாலும் ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வரும் தமிழர் வரலாற்றிலிருந்துதான் ஜமாலன் கூட தன் பிரதிக்கான பின்னணியை எடுத்துக் கொள்கிறார். இலங்கை வரலாற்றுடன் நீண்ட கால அரசியல் மற்றும் வாழ்வுத் தொடர்புகளைக் கொண்ட சமூகமான முஸ்லிம்கள் இலங்கை மைய சமூகவோட்டத்துடன் இணைக்கப்படுவது எவ்வாறு திட்டமிட்டு களவாடப்பட்டுள்ளமையை நாம் நன்கறிவோம். இந்தத் திருட்டுத்தனமான வரலாற்றின் கொடூமைதான் இனப்பிரச்சினையில் நம்மை கடுமையாகப் பாதித்துள்ளது. முஸ்லிம் தேசத்தின் அடையாளம் இஸ்லாத்துடன் தொடர்பு கொண்டுள்ளதினைப் போலதான் சோனகர்களின் வரலாறு நமது இனத்தின் அடியாக எழுவதினை இன்று காண்கிறோம். இந்த ஆய்வுகளில் முனைப்புடன் உள்ள முஹ்சீன், ஏ.பீ.எம். இத்ரீஸ் போன்றவர்கள் தம் பங்காற்றலினை வெளிப்படுத்த வேண்டிய தேவை இன்று முக்கியமாகும். அப்போதுதான் தமிழ் தேசிய உணர்வுடனும் சிங்களப் பெரும் தேசிய மகிழ்வுடனும் தோண்டியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசியங்களின் முன் நீண்ட பின்னணியுடன் இருக்கும் சோனக தேசத்தின் அடையாளத்தினையும் கதையாட முடியும் என்று நம்புகிறேன். இதனால் தேசியத்தின் சாக்கடை அரசியலை மீளவும் நியாயப்படுத்த முனைகிறேன் என்பதல்ல பொருள். பின்னப்படும் வரலாறு ஒரு தலைப்பட்சமாக அமைந்து விடுவதில் உள்ள வன்முறையில்தான் பன்மையான கதையாடல்களின் தேவையினை வேண்டிநிற்கிறேன்.

மேலும், 'சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார்' பற்றியும் ரஊபின் திறனாய்வு பற்றியும் கொஞ்சம் கதைக்கலாம். ஆனால் ரஊப் இல்லாத இந்த இடத்தில் அது பற்றி பேசுவதைத் தவிர்த்ணதுக் கொள்வது நல்லது என்ற நிலையுடன் அதை விட்டு விடுகிறேன்.

ஒரு விடயத்தினைக் கூறி எனது வாசிப்பின் பகிர்வினை முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். முன்னரைப் போல் புலம் பெயர் இதழ்களில் பெரியதொரு கருத்தியல் தளத்தினைக் காணக் கிடைக்க வில்லை. அதே போல பல புலம் பெயர் பிரதியாளர்களும் காணாமல் போய்விட்டனர்.

இறுதியாய், பதிப்புத் துறையென்பது மிகுதியான சுமையும் அதிகரித்த பலமும் வேண்டிநிற்கின்ற ஒன்று. இலங்கையில் இருந்த போது எம்.பௌசர் அதிகமான பதிப்பக செயற்பாடுகளில் தன்னை இணைத்திருந்தவர். காலச்சுவடு போன்ற பெரும் வணிக இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்ட போதும் அவரிடம் ஒருவகை முஸ்லிம் தேச அரசியல் போக்கு உள்ளிருந்து தூண்டிக் கொண்டிருந்தது. நமது இயங்கியலாளர்கள் பலரின் பங்களிப்புடன் கொண்டுவரப்பட்ட சுயம், முஸ்லிம் குரல் என்பன இந்த தூண்டலின் வெளிப்பாடுகளே. இங்கு முரண்பாடுகளினைத்தாண்டி நாமெல்லாம் இணைவது வெறிபிடித்த அதிகாரத்திற்கு எதிரானவர்களாகவும் மனித நேயமுள்ளவர்களாகவுமே. எதுவரை? அறிமுகக் கூட்டத்தில் ஷோபா சக்தி கூறியது போல 'எழுதுவோம், பதிப்பிக்கும் வேலைகளுக்கு பௌசர் இருக்கிறார்' என்பது இயங்கியலாளர்களிற்கு நிறைந்த நம்பிக்கைதான். ஒரு இதழினை அதுவும் பெரும் வணிக போக்கின்றி காத்திரமான சிற்றிதழ்களை நடாத்துவது எவ்வளவு கஷ்டம் நிறைந்த பணியென்பதினை விபரிக்க வேண்டியதில்லை.

ஆனால் நமது எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ போர் இன்னமும் எழுதுகிறார்கள். என்றாலும் அவர்களின் எழுத்துலகம் வளர்ந்ததாக காணமுடியவில்லை. வாசிப்பதும் இல்லை. மிக மந்தகரமான இந்த சூழல் அபாயகரமானதும் கூட என்பதை நாம் மறந்துவிடுகிறோம். தொடராக பெருவெளியினைக் கொண்டுவருவதில் இந்த அபாயத்தின் எல்லையை தரிசிக்க முடிகிறது. முன்பிருந்த ஆரோக்கிய சுழலினை வேண்டியவனாக எனது வாசிப்பனுபத்தினை முடித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள்.