Wednesday, December 10, 2008

நன்றி மீள்பார்வை

கடைந்தெடுக்க முயற்ச்சிக்கப்படும் திகாமடுல்ல வரலாற்று

அநியாய ஆதிக்கம் 2008

- முஹம்மட் உவைஸ்

திகாமடுல்ல கலாசார விழா 2008 என்ற பெயரில் அண்மையில் ஒரு ஆதிக்க நிகழ்ச்சி அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பல்கழைக்கழக ஆக்கிரமிப்பு, துறைமுக அபிவிருத்தியென்ற கோதாவில் மறைமுகமாகவே அரங்கேரிக் கொண்டிருக்கும் செயற்பாடுகள், தீகவாபி வீதி விஸ்தரிப்பிற்காக பறிக்கப்படப்போகும் ஒலுவில் முஸ்லிம்களின் ஜீவனோபாய வயல் நிலங்கள், முஸ்லிம் சுயாட்சிக் கோரிக்கையினை முடக்கி விடுவதற்காய் ஒலுவிலைப் பிரித்து தீகவாபி பிரதேச பிரிவினை உருவாக்கி விடுதல் என்ற சிறுபான்மையினங்களிற்கு குறிப்பாய் முஸ்லிம்களிற்கு எதிரான நிகழ்வுகள் அரங்கேரிவருவதினை நாம் நன்கறிவோம். அதன் மற்றொரு விழாவாய் சிங்களப் பேரினவாதம் தன்னை இஸ்திரப்படுத்திக் கொள்ளும் மெகா நிகழ்ச்சி நிரலிற்கான ஒரு புள்ளியினை பெருமையுடன் தாண்டிய நிகழ்வின் பின் மிக ஆறுதலாக இந்தப் பத்தியினை எழுதுகிறேன்.

 

பல்துறை சார்ந்த முயற்ச்சியாளர்களிற்கு கௌரவிப்பு, மாதிரிக் கிராமங்கள், உள்ளுர் தயாரிப்புக்கள், கலைப்பொருட்கள் கண்காட்சி என்ற அனைத்து வகை சிங்கள மயமாக்களின் ஆதிக்க வடிவங்களுடன் அழகிய அரசியல் தலைப்பில் புதைபொருள் மற்றும் தொன்ம வரலாற்றுப் படிமங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த அழகிய அரசியல் தலைப்பு திகாமடுல்ல வரலாறு. உப தலைப்பு எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத மனிதர்கள்.

 

நமது வரலாற்றின் கடந்த காலங்களினைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை ஏற்கனவே நாம் இட்டுக் கொண்டுள்ள பின்புலத்தின் பார்வைகளினூடாய் சக்தியற்றதாய் நம் சகோதரர்கள் பார்த்துக் கொண்டும் கதையளந்து கொண்டும் திரியும் இக்கால கட்டத்தில்தான் இப்படியான அரசியல் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. நான்கு மதங்களினைப் பின்பற்றும் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தினை கபளிகரம் செய்வதில் பேரின திட்டமிடல் முனைப்புக் கொண்டுள்ளமை மிக வெளிப்படையான செய்திதான். ஆனால், அது இந்த கபளிகரத்திற்காய் கையாளும் திட்டமிடல்கள் மட்டும் வெளிப்படையானவையல்ல என்பதினை நாம் புரிதல் முக்கியத்துவம் பெறுகிறது. மிக நுண்னிய ஆக்கிரமிப்பு வழிகளினை இந்த ஆதிக்க சக்திகள் கையாள்வதினை அடையாளம் கண்டு கொள்ளும் போதுதான் அதிகாரத்தின் அனைத்து மட்டங்களின் செல்வாக்கும் இதற்குள் இருப்பது வெளிச்சத்திற்கு வருகின்றது.

 

நடந்து முடிந்த இந்த ஆதிக்க கலாசார விழா வளாக முன்றலில் நிறுவப்பட்டிருந்த கட்டவுட் பேரினவாதத்தின் மற்றொரு செய்தியினையும் கூறிநின்றதினை அங்கு சென்ற நம்மில் பலர் அவதானித்திருப்பார்கள். நான்கு மதங்களினையும் சேர்ந்த மக்களின் கலாசார பண்பாட்டினை சித்தரிக்கும் உருவ வரைபடத்தில் ஐந்தாவது மக்கள் பிரிவாக இலங்கை இராணுவத்தினரின் உருவம் வரையப்பட்டிருந்தது. இப்போது விளங்குமென நினைக்கிறேன் பேரினவாதத்தின் அடுத்த கட்ட ஆக்கிரமிப்பானது எந்த முகத்திரையுடன் வெளியே வரப்போகிறதென்பது.

 

இந்த கலாசார ஆக்கிமிப்பு விழா 2008 அதி கூடிய முன்னுரிமையினை வழங்கியிருந்த விடயமானது திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்கான புதிய சிங்கள பௌத்த அதிகார வரலாற்றினை எழுதுவதினையாகும். திகவாபியினை மையப்படுத்தி அங்குள்ள அனைத்துப் பொருட்களினையும் ஆதி இலங்கையின் வரலாற்றுடன் பிணைத்து அந்த ஆதி இலங்கை வரலாற்றினை சிங்கள பௌத்த வரலாறாக மாற்றியமைக்கும் புனிதத்தினை நிறுவும் முயற்சிகளை அங்கு செய்தனர். நீண்ட சிங்கள வரலாற்று ஆதிக்க நிறுவுதல்களின் தொடராகவே அரசின் அனுசரனையுடன் நடக்கும் இந்த விழாக்கள் தமக்கான பங்களிப்புக்களினை நிறைவேற்றி வைப்பதினை நாம் அவதானித்தல் வேண்டும். முஸ்லிம்களின் விவசாய, குடியிருப்பு நிலமான ஆலங்குளத்தின் மலையொன்றில் காணப்படும் படிக்கட்டுக்களை சிங்கள மன்னனெருவனின் ராசதானியாக புதிய தொல்லியல் ஆய்வுகள் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பரிசாகக் கொடுத்துள்ளதினையும் இந்த ஆதிக்க விழாவில் அவதானிக்க முடிந்தது. நுரைச் சோலை, ஆலங்குளம் என்பவற்றின் பின்னால் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்கள் இருக்கின்றன. மிக அண்மையில் அங்கும் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்படும் என்பது இந்த பேரினவாதத்தின் மெகா நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியும் போல. என்றாலும் மேட்டுக் குடி சமூக சிந்தனையாளர்களினையும் கௌரவத்துக்குரிய அரசியல் தலைமைகளினையும் நம்பி காலாகாலத்திற்கும் ஏமாந்து போகும் சமூகம் என்ற வகையில் நாம் வாய்பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோமா? என்ற அச்சம் கலந்த கேள்விகளே இன்று நம்முன் மிகுதியாய் இருக்கிறன.

 

அரச அதிகாரத்தின் பின்னணியில் நம்மைச் சூழ பல சதிவலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தினில் நமது இயங்கியல்கள் நமது இருப்பினை காத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றிய பார்வைகளினை பல்வேறு செயல் ஒழுங்குகளில் மேற்கொள்ள முயலவேண்டும். அரசியல், அரசாங்க அங்கீகாரத்துடன் ஜாதிக ஹெல உறுமய (இது உறுமிக் கொண்டுதான் இருக்கும்), சிவப்பு சாயத்துடனான நிதஹாஸ் பெரமுன என்பன இன்று முன்வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் பல நமது சகோதரர்களிற்கு அச்சத்தினை ஊட்டியுள்ளது. இந்த அச்சமானது நமக்கான வரலாற்றுப் பார்வைகளிலும் இன்னும் முற்றுப் பெற்று விடாத வரலாற்றின் கடந்த கால நிகழ்வு பற்றிய மீள்வாசிப்பிலும் நம்பிக்கையற்ற செய்திகளை கிளரிவிட்டுக் கொண்டிருக்கின்றன. கலாசார, நில, வரலாற்று, அறிவியல், வாழ்தல் என்ற பல்வகை அடக்கு முறைகளுக்குள் அகப்பட்டுள்ள நாம் இவற்றின் முன் நமது நிலைக்களன்களினை நியாயமான முறைமைகளின் வழியில் மாற்றுக்களாய் முன்வைத்தேயாக வேண்டும்.