Tuesday, September 29, 2009

கடந்தவைகளும் இனியுமாய் : இலங்கையில் சிறு பான்மையினங்கள்

பர்ஸான்.ஏஆர்

இலங்கையில் சிறுபன்மையினங்களின் வாழ்தல் பற்றிய உரையாடல்கள் இன்று பல்வேறு முறைமைகளின் பின்னணியில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பிரதியும் அது பற்றிய சில விடங்களை கதையாடல் தளத்திற்கு கொண்டுவர முனைகிறது. இங்கு, பலதரப்பாலும் இன்னும் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நமது மக்களின் வாழ்வின் அர்த்தமே முதன்மைக் காரணியாய் கொள்ளப்படுவதினை அவதானிக்க வேண்டும். ஏனெனில் விடுதலைப் போராட்டத்தின் இடைக்காலத்திலிருந்து மக்கள் வாழ்வின் அர்த்தத்தின் தேவையினையும் பார்க்க தேர்தல் வெற்றிக்கான உபாயமும் இயக்கங்களின் கட்டமைப்புமே நமது அரசியலில் முக்கியம் பெற்றிருந்ததினை காண்டிருக்கிறோம்.

இலங்கையில் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் பற்றிய நமது அவதானிப்பின் போதும் அவை பற்றிய செயற்பாட்டொழுங்குகளின் போதும் இதுவரை இடம்பெற்ற இனமுறுகல்களும் அவற்றின் உச்சமாய் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பரப் படுகொலைகள், விரட்டியடிப்புக்கள், குண்டுவெடிப்புக்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனைத்து வகை அத்துமீறல்கள் என்பனவற்றின் காரணங்களது யதார்த்தப் பின்புலங்கள் மிக முக்கியமானதாய் கொள்ளப்படுதல் வேண்டும். அப்போதுதான் அனைவருக்குமான சக வாழ்வின் சாத்தியம் நோக்கி பயணப்பட முடியும்.

இன்று இலங்கைப் பிரச்சினையும் தீர்வும் பற்றி கதைப்பவர்கள் யுத்தத்தின் விளைவுகளை பிரதானப்படுத்தி மக்களிற்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகளையே முதன்மையாய் கொள்ளும் ஒரு தளம் இங்கு காணப்படுகிறது. உண்மையிலே இந்த வகை முயற்சிகள் மீளவும் இனங்களிற்கு இடையிலான முறுகல் நிலையினை தொடரானதாய் வளர்த்துவிடும் அபாயத்தினை உணர்ந்து கொள்ளவில்லை. யுத்தமும் அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புக்களும் இனங்களிற்கு இடையிலான வரலாற்று பகைமையினை வேறுகோணத்தில் உலகிற்கு காட்சிப்படுத்தி விட்டன. உண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இன விடுதலைப் போராட்டத்திற்கும், அது உருவாக்கிக் கொண்ட வன்முறை வடிவிற்கும் அதனால் ஏற்பட்ட யுத்தத்திற்கும், அளவிட முடியாத இழப்பிற்கும் பின்னால் இருந்த இனங்களிற்கு இடையிலான முறுல்களைக் களைவதன் ஊடாகவேதான் எதிர்கால இலங்கையினை வன்முறைகள் அற்றதாய்க் அமைத்துக் கொள்ளலாம்; என்பதில் முரண்கள் இல்லை.

அதே நேரம் உலகில், காலவோட்டத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற கருத்தியல் மாற்றங்களின் தாக்கங்களும் நிச்சயமாக நமது வாழ்வொழுங்கில் ஏற்படுத்தும் திருப்பங்கள் முக்கியமாகதாகும். இந்தக் கருத்தினை விளங்கிக் கொள்ள நமது கண்முன்னே நடந்த வரலாறு சாட்சியாய் அமையும் என நம்புகிறேன். இலங்கையில் உருவான விடுதலைப் போராட்டங்களிற்கு கண்கண்ட சாட்சியாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் நாமும் இருந்திருக்கிறோம். நமது வாழ்நாட்களிற்குள்ளே இந்தப் போராட்டங்கள் அரசியல் ரீதியானதாகவும் வன்முறை ரீதியானதாகவும் கருக்கட்டி வளர்ந்து தமது பங்காற்றலினை மேற்கொண்டன. அதே போல தமது பங்காற்றலில் உச்ச அதிகார நிலையிலும் இருந்து நமக்கு முன்னே தமது வன்முறை வழியிலே கூண்டோடு அழித்தொழிக்கப்பட்டதிற்கும் நாம்தான் வாழ்நாள் சாட்சியாளர்கள்;.

காலவோட்டத்தில் மாறாத்தன்மை கொண்ட போராட்டம்

1970களின் இறுதிக் காலகட்டங்களில் விடுதலைப் போராட்டங்கள் வன்முறையினை தமது வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட போது அவை ஷவன்முறை|கள் என அழைக்கப்படவில்லை. ஷகிளர்ச்சி| என்ற அரசியல் பதம் இந்த வகைப் போராட்டங்களின் அர்த்தமாய் வழங்கப்பட்டது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பொதுவான வழக்காகவேயிருந்தது. இந்த அரசியல் அர்த்தம் காண்பிக்கப்பட்ட ஷகிளர்ச்சிகள்| தனது இனத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு மனிதன் ஆற்றும் மிக உயர்வான வரலாற்றுப் பணியாகக் கொள்ளப்பட்டது. (இக் கிளர்ச்சிக் குழுக்களில் பெற்றுள்ள தரங்களே ஒருவரின் அந்தஸ்தாகவும் கொள்ளப்பட்டதினை நினைவு கூர்க). இந்த வகை அரசியல் பணிக்காக தம்மை அர்ப்பணிப்பதாய் உருவகித்துக் கொண்ட கிளர்ச்சிக் குழுக்கள் தம் அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொள்ள வன்முறை சார்ந்த பயங்கரவாதச் செயற்பாடுகளினை மேற்கொண்டன. அமைப்பாக்கத்தில் இந்த வன்முறைகள் தமது அமைப்பை காத்துக் கொள்ளும் ஒன்றாய் இன்னமும் இருப்பதனால் இப் பயங்கரவாத வெறிச் செயல் கொடூரத்தின் தரத்தில் நோக்கப்படுவதில்லை.

இவ்வாறு தொடர்ந்த இலங்கையின் வன்முறைப் போராட்டத்தில் இருந்து அமைப்பாக்க நலனுக்காக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் ஒழித்துக் கட்டப்பட்டன. மிகுதியாகவிருந்த ஒரு சில குழுக்கள் தம்மைக் காத்துக் கொள்ள தேர்தல் அரசியலையும் வால் பிடிக்கும் கொந்தராத்தையும் தேர்ந்தெடுத்தன. இதே போல கிளர்ச்சிக் குழுக்களாகவிருந்து வன்முறை வழிகளில் நம்பிக்கை வைத்த போராட்டக் குழுக்களினைப் போல, மக்களின் ஆட்சி என்ற பெயரில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் இதே வன்முறைகளினை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற கோதாவில் எவ்வித தாட்சண்யமும் இல்லாமல் தன் நாட்டுப் பிரஜைகள் மீதே நடித்தி முடித்ததிற்கும் நாமும் நமது மக்களும் வரலாற்று சாட்சிகளாய் இருக்கிறோம்.

காலவோட்டத்தில் விடுதலைப் போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறி, எந்த மக்களின் விடுதலைக்காக தம்மை வெளிப்படுத்தியதோ அந்த மக்களின் முதல் எதிரியாக மாறிய போது உலகின் கருத்து நிலைகளும் பெருமளவில் மாற்றம் கண்டிருந்தன. குறிப்பாக, செப்டெம்பர் 11 தாக்குதலிற்குப் பின் போராட்டக்குழுக்களின் மீதும், தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த நாடுகள் மீதும் அமெரிக்கா மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கை முக்கியமானதாகும். தனக்குச் சார்பான அரச நிறுவனங்களின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு களத்தில் நின்ற அமெரிக்க அதிகாரம் எவ்வித ஈவு இரக்கமுமின்றி ஷபயங்கரவாதத்திற்கு எதிரான போர்| என்ற வகையில் தனது திட்டத்தினைச் சாதித்து முடித்தது. பயங்கரவாதக் குழுக்கள் மட்டுமல்ல, குறிப்பிட்ட நாடுகளில் இருந்த அரசாங்கங்களையே இராணுவப் பலப்பிரயோகம் மூலம் கவிழ்த்து தனது அதிகாரத்தின் நிழலினை முற்றாக அரங்கில் கொண்டு வந்தது அமெரிக்கா. இதே நேரம் லிபியா போன்ற சர்வதிகார நாடுகள் தங்களின் அரசியல், வர்த்தக நிலைகளில் பெரு மாற்றங்களுடன் நேர்எதிர் நாடுகளிடையே சரணடையும் கேவளமும் நடந்தேறியது.

இந்த கால கட்டத்தினை சரியாகக் கணித்துக் கொண்ட பல போராட்டக்குழுக்கள் தங்களின் அழிவினைத் தடுத்துக் கொள்ளும் வழியாகவும் மக்கள் அரசியலில் நேரடியாகப் பங்கேற்கும் முகமாகவும் அரசியல் களத்தில் இறங்கின. ஆனால், மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக பல இராணுவ வெற்றிகளின் ஊடாக தமது இராஜ்ஜிய பலத்துடன் (அந்த காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அதாவது புலிகள் குறிப்பிட்ட தமிழீழ நிலப்பகுதியில் கிட்டத்தட்ட 70மூ புலிகளிடம் இருந்தன) இருந்த விடுதலைப் புலிகள் இந்த மாற்றங்களினை உள்வாங்கிக் கொள்ள மறுத்தனர். தமது இராணுவப் பலத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அபரிமித நம்பிக்கை இதற்கான பலமாகக் கருதப்பட்டது. (ஆட்பலத்தினை விட போர்த்தளபாடப் பலம் புலிகளிடம் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தமை இப்போது நிரூபணமாகியிருப்பதினையும் அவதானித்தல் வேண்டும்).

புலிகள் தமது அமைப்பாக்க ரீதியில் மாற்றமடைய மறுத்த அதே கால கட்டத்தில் தமிழ் மக்களினைப் பொறுத்தவரையில் உலக அளவில் அவர்களின் கருத்தும் அரசியல் நிலைப்பாடுகளும் பெரு மாற்றங்களிற்கு உள்ளாகியிருந்தது. புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான போர் எவ்வித திட்டமிடல்களும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருந்தமை, தமிழ் மக்களின் வாழ்வில் தொடராக சூழ்ந்து கொண்டிருந்த பாசிசத்தின் அதிகாரம், மனிதாபிமான பெரு அழிவுகள் இந்த கருத்தியல் மாற்றத்திற்கு மிக முக்கிய காரணியாகக் கொள்ளத்தக்கன. புலிகள் இயக்கத்தின் பெரும் பிளவும் அவர்கள் நேரடி அரசியலில் இணைந்து கொண்டதும் இதன் வெளிப்பாடே (அவர்களில் சிலரது கேவலமான அரசியல் வியாபாரம் பற்றிய கதைகள் வேறு விடயம்). இந்த மாற்றங்கள்தான் புலிகளின் போராட்டங்களிற்கான தார்மீக ஆதரவினை வழமையினை விடக் குறைவான அளவில் வெளிப்படுத்தும் தன்மை புலம் பெயர் தமிழர்களிடம் கூட ஏற்படுத்தியது. புலம் பெயர் நாடுகளில் மேற்கிளம்பிய மனிதாபிமானத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளினை கண்ணுக்குத் தெரியாத புலிச் சக்திகள் தமக்கு சாதகமாகக்கிக் கொள்ளும் பாரிய நிகழ்ச்சித் திட்டத்தினை அரங்கேற்றி அதில் ஓரளவு வெற்றி பெற்றதும் நடந்து முடிந்த சம்பவங்கள். அதே போல, தமிழ் நாட்டு அரசியல் அங்காடிகள் தமது கனவுகளிற்கு புலிகளின் ஆதரவு அல்லது ஈழ ராஜ்ஜிய உருவாக்கம் என்ற கூத்துக்களை அரங்கேற்றி வசைபாடினார்களே தவிர நியாயமான பங்காற்றலினை மேற்கொண்டார்கள் என்று கூறவே முடியாது. ஆனால், புலிகளின் அழிவுக்குப் பின் புலிசார்பு போராட்டங்கள் எந்தளவு வீச்சுடன் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் இங்கு இணைத்துக் கவனத்தில் கொள்ளல் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வழிகோலும். புலிகளின் சிறு சிறு இழப்புகளிற்கே ஹர்த்தால், கடையடைப்பு என்று தம் எதிர்ப்புக்களை தமிழ் மக்களின் பிரதேசங்களில் இதற்கு முன் பல தடவை கண்டிருக்கிறோம். ஆனால் மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில்; புலிகளின் தலைமை கொத்திக் கொலை செய்யப்பட்ட போதும், போர் விதிகளிற்கு அப்பால் யுத்தக் கைதிகள் பற்றிய எந்த விதி முறைகளும் கவனத்தில் கொள்ளாது புலிகளின் உறுப்பினர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், ஏன் சாதாரண அப்பாவித் தமிழர்கள் மனித குலத்தின் ஒட்டு மொத்த அச்சத்தின் பிடியில் பல்வேறு வுழிகளில் பலிக்கடாவாக்கப்பட்ட போதிலும் இம்முறை தமிழர் பிரதேசங்கள் மௌனங்களாகவே இருந்தன.

மக்கள் வாழ்வு பற்றிய நிலைப்பாடும் அரசியல் களமும்

இப்போது நமக்கு முன் இருப்பது, இலங்கையில் நமது மக்களிற்கான வாழ்வுரிமையினை எந்த வகையில் மீட்டெடுக்கப் போகிறோம்? என்ற இருள் சூழ்ந்த கேள்விகள்தான். பல்லாண்டு காலப் பெரும் போர் நமது மக்களின் வாழ்வினை முழுமையாய் மாற்றிவிட்டது. ''விடுதலை'', ''போராட்டம்'' என்ற சொற்கள் அச்சம் தரும் வலிகளையும் வாழ்வில் கவிழ்ந்த துயரங்களையும் அனாதரவினையுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தின் கோரப்பிடிக்குள் இறுதிக்கட்டம் வரை அகப்பட்டுக் கொண்ட மக்களின் மனோ நிலை மிகவும் சீரழிந்து போயிருப்பதை வார்த்தைகள் விபரிப்பிற்காய் தாங்கிக் கொள்ளாது. அந்த மக்களின் மனம் நிம்மதியான வாழ்வொன்றினை பெற்றுக் கொள்வதையே இப்போது எதிர்பார்த்துக் கிடக்கின்றன. இந்த நிலையில் சிறுபான்மையினங்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் கூட இதனையே விரும்புகின்றனர்.

புலிகளின் புதிய அணியினர் தாம் வன்முறை வழிகளைக் கைவிட்டுவிட்டோம் என கூறினாலும் தமிழீழ நிர்மாணத்திற்கான மாற்று திட்டத்துடன் களத்தில் செயற்படப்போவதாய் அறிவித்துள்ளனர். இவர்கள் குறிப்பிடும் Transnational Tamil eelam எனப்படும் நாடு கடந்த தமிழீழம் இலங்கை இனப்பிரச்சினைக்கு பிரிவினையே வழி என்ற கொள்கையைத்தான் தொடர்ந்து கையேற்றுள்ளது. இந்த நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியம் பற்றிய உரையாடல்கள் எந்தளவு நமது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் ஒன்றாய் இருக்கும் என்று யாராலும் கூறமுடியாது. ''வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை'' என்பதாய் புலிகள் காட்டிக்கொள்ளும் இந்த தந்திரங்கள் பிணாமிச் சொத்துக்களை அணுபவிக்கவும் மிச்ச சொச்ச காலத்தினையும் வெளிநாடுகளில் செலவிட்டுக் கொள்ளத்தான்|| என்றார் வன்னி முகாமிலிருந்த ஒரு இளைஞர். (Transnational Tamil eelam பற்றி தனியாகக் கதைப்பதற்கு புலிகளின் புதிய அரசியல் திட்டங்கள் வாய்ப்பு ஏற்படுத்தும் என்பதனால் இப்போதைக்கு இது பற்றிய கதையாடல்களை இந்த இடத்தில் எழுப்புவது அர்த்தமல்லை.)

Transnational Tamil eelam இலங்கையின் யாப்பிற்குள்ளால் தமிழ் மக்களிற்கான அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என்று கூறுகின்றது. ஆனால், மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் ஆதரவுடன் இலங்கை தன்மீதுள்ள கொலைப்பழியினை தீர்துக் கொள்ள சமர்பித்த திட்ட வரைவு, ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் என்பவற்றில் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~யும் 13வது அரசியல் சீர்திருத்திற்கு மேலாகவும் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது பற்றி அண்மையில் ராம் அவர்களிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இங்கு சிங்கள இனவாதக் குழுக்களான ஹெலய உறுமய, மக்கள் விடுதலை முன்னனி, தேசிய சுதந்திர முன்னனி மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றவை 13வது அரசியல் சீர்தருத்த திட்டத்தினைக் கூட ஏற்க முடியாது என காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருக்கின்றனர். இதே போல புலிகளின் புதிய அரசியல் திட்ட வரைவாளர்கள் தமது இயக்கத்தின் தனிநாட்டுக் கொள்கையிலே தொடர்ந்து இயங்கப்; போவதாகக் கூறியுள்ளனர். ஜக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்பவற்றில் உள்ள புலி எதிர்பு நிலைகள் சிறுபான்மையினங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது தனிநாட்டு கோரிக்கைக்கு சமாந்தரமானது என்ற அறிவீனத்துடன் இருக்கின்றன. ஆனால், 13வது சீர்திருத்தம் இப்பிரச்சினையின் முடிவுக்கு போதியன்று, இதனையும் தாண்டியே அரசியல் அதிகாரத்தின் பகிர்வு இருக்க வேண்டும் என்ற கருத்து தமிழர், முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர்களிடமும் இன்று ஏற்பட்டுள்ளது ஒரு குவியமையமாக நோக்கப்பட வேண்டிய நிலையாகும். இந்த நிலையினை இன்னும் வலுப்படுத்த வேண்டியதன் அரசியல் பணி பற்றிய தேவை சகலராலும் முன்னெடுக்கப்பட வேண்டியது.

போரியல் அழிவிற்குள் ஒவ்வொரு இலங்கையனும் ஏதேனும் ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருந்தான் என்ற வகையில் இந்தப் போர்க் கொடூரத்தில் இருந்து மீண்டு இனியும் இதனை அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கிறான். இதுதான் அதிகாரங்களை நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பகிர்ந்து கொடுத்தல் என்ற உயர் பண்பின் அடையாளமாக் கொள்ளப்படுகிறது. (இலங்கையரசு தற்போது செய்து வருகின்ற மொழிக் கொள்கை உண்மையில் ஆரம்ப கட்டத்தில் சிங்கள இனவாத அரசுகள் மேற்கொண்ட மொழியாதிக்கத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தமிழ் சிங்கள மொழிகளை கட்டாயம் கற்றிருக்க வேண்டும், அரச போக்குவரத்து வாகனங்களில் தமிழ் மொழியும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பனவற்றினை அடையாளப்படுத்தலாம்).

இப்போது ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு எடுக்கும் முயல்வுகளில் நமது மக்களின் பங்காற்றல் முக்கியம் என நினைக்கிறேன். தனிநாட்டுக் கோரிக்கை எந்தவித பிரதிபலனுமில்லாமல் பல அழிவுகளையே தந்துள்ள நிலையிலும் கொழும்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள எத்தனிப்பதும் இலங்கையின் யாப்பிற்குள்ளால் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் பற்றி நிலைப்பாடுகளை முன்னெடுக்க ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளது என்று கருத முடியும். எனவே இங்கு 13வது அரசியல் சீர்திருத்தத்தின் போதாமையுடன் மேலதீகமாக ஏற்படுத்த வேண்டிய தீர்வுகளையும் நோக்குதல் பொருத்தம்.

சிறுபான்மையினங்களிற்கான அதிகாரப் பகிர்வும் வாழ்வும்

14-11-1987ல் 13வது அரசியல் சீர்திருத்தம் யாப்பில் ஊர்ஜீதம் செய்யப்படுகிறது. யாப்பின் 18, 138, 154ம் சரத்துக்களை திருத்துவதன் ஊடாக மாகாணசபை முறைமையினூடாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் ஒன்றாய் இச்சீர்திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.

ஆனால், மாகாண சபைகளின் ஊடாக மத்திய அரசின் அதிகாரங்கள் சிலவற்றைக் கை மாற்றுவதற்கான முன்மொழிவுகளை 1931ல் டொனமூர் குழுவினர் சிபாரிசு செய்தனர். என்றாலும் இது இவ்வாலோசனை நடைமுறைப் படுத்தப்படவில்லை. பின்னர், 1955ல் சொக்ஸி ஆணைக்குழு பிரதேச குழுக்கள் அல்லது சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றது. பின், 1957ல் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் பிரதேச சபைகள் அமைத்தல் என்ற சரத்தும் இருந்தது. அதேபோல், 1965ல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தில் மாவட்ட சபைகள் அமைப்பது என்று கூறப்பட்டது. என்றாலும் இந்த சரத்துக்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. 1980ல் ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்கினாலும் இவற்றிற்கான நிதி, அதிகாரங்கள் என்பன போதியளவு வழங்கப்படாமை இதன் செயற்பாடு மந்தமாகக் காரணமாயிற்று. இவ்வளவு திருத்த வரைவுகளின் தோல்விகளிற்குப் பின்தான் இந்தியாவின் அரசியல் முறைமைகளினை அடியொட்டி 1987ல் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. இம்மாகாண சபை முறைமையில் அதிகாரப் பகிர்வு இடம் பெற்றிருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அதிகாரப் பகிர்வு - ஒரு உயர் அரசியல் அதிகாரத்திலிருந்து அதிகாரங்கள், கடமைகள் என்பனவற்றை ஒரு அதிகார சபைக்கு கையளித்தலைக் குறிக்கும். சிங்கள அரசிடமிருந்த அதிகாரங்களில் சிறியதொரு பகுதி பலம் குன்றிய மாகாண சபைகளிற்கு வழங்கப்பட்ட போது கூட சிங்கள இனவாதிகள் அதனை எதிர்க்கவே செய்தனர். அதே போல் புலிகள் கூட அதன் போதாமையினை கூறி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிருந்த அரசியல், மக்கள் மனோ நிலைகள் இப்போது பெரும் மாற்றம் கண்டுள்ளது. அதே போல மாகாண சபை ஓரளவு இயங்கு நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. பொலீஸ் அதிகாரங்கள் தனக்கு வேண்டும் என மாகாண சபை முதலமைச்சர் வேண்டு கோள் விடுக்கின்ற அளவு மாகாணசபை அமர்வுகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.

இப்படியான ஒரு கட்டத்தில் யாப்பின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்நது கொள்ளும் திட்டத்தினை சிறுபான்மையினங்கள் மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். உச்ச பட்ச அதிகாரப் பகிர்வுகள் அனைத்து மக்களிற்கும் கிடைக்கும் பட்சத்தில் தனியரசுக் கோரிக்கையின் அவசியம் வலுவிழந்து விடும். அதே போல் மாகாணசபை ஆளுனரின் அதிகாரக் குறைப்பும் சிறுபான்மை சமூகங்களில் இருந்து உப ஜனாதிபதிகளை தேர்தலின் ஊடாக கொண்டுவர இடமளிப்பதும் இன்னும் ஜனநாயக சக்தியினை மக்களிடம் வழங்கும் ஒரு மகத்தான திட்டமாக இருப்பதினை மனங்கொள்ளலாம். இதே போல, ஆணைக்குழு மற்றும் மாகாண நீதிமன்ற உருவாக்கங்கள் என்பன அதிகாரம் ஒரு சில அமைச்சர்களிடமும் ஜனாதிபதியிடமும் மேலதிகமாக் குவிவதைத் தடுக்கும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நீண்ட விவாதங்களிற்கு உரியது என்பதால் இந்த இடத்தில் அதனை முழுமையாக விவாதிக்கவும் விபரிக்கவும் இயலாது உள்ளது.

ஆக, இந்தவகையான அதிகாரப் பகிர்வில் இலங்கையின் மத்திய அரசு இறங்காத போது பலமிழக்கப்பட்ட இயக்கங்களும் அவற்றின் ஒரு தலைப்பட்ச கருத்துக்களும் மீளவும் மக்களிடம் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் வாய்ப்புக்களை மறுதலிக்க முடியாது. அரசின் சீர்திருத்தங்களிலும் ஆட்சியிலிலும் வெகு மக்கள் போராட்டங்களே பெரும் அழுத்த சக்தி என்ற வரலாற்று ஓட்டத்தினை மறுத்தொதுக்காமல் இந்த விடயத்தினை அணுகலாம். அதற்கான ஜனநாயகப் போராட்ட வழிகளினூடாக மக்கள் ஆட்சிப் பங்கேற்பும் அதன் வலுவும் ஆராயப்பட வேண்டும். மக்கள் தங்கள் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் ஜனநாயக வழிகளில் களத்திற்கு வரும் போதுதான் இலங்கையின் சிறுபான்மையினங்களனின் எதிர்காலம் நம்பிக்கையளிப்பதாய் இருக்கும். இல்லாத பட்சத்தில் நமது மௌனங்களும் சேர்ந்து மீளவும் அழிவிற்கான பெரும் உதவியையே செய்யும் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.

நன்றி உயிர்நிழல் - 31

Monday, July 27, 2009

நாம் இலங்கையர்கள் தானே

சற்று ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன் முகம் தெரியாத நண்பர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பின்வரும் மின்னஞ்சலும் அதன் இணைப்புப் பிரதியும் எனக்குக் கிடைத்தது. சில வேளை இந்த மின்னஞ்சல் உங்களிற்கும் வந்திருக்கலாம். தனிப் பட்ட மற்றும் சில கள செயற்பாடுகளிற்காக இலங்கையின் பிற இடங்களில் தொடர் பிரயாணத்தில் இருந்த மையால் இதுபற்றிய கவனயீர்ப்பினை மேம்படுத்த முடியவில்லை. காலம் கடந்து விட்டதாயி னும் இவ்விடயத்தினை இங்கு வலையேற்றம் செய்கிறேன். முடியுமானவர்கள் இதுபற்றிய உரையாடலினைத் தொடரலாம். ஆனால் நம்மீது கவிழ்ந்திருக் கும் ஒரு அலட்சியம்தான் வெறுமனே வாசிப்பது.

அன்புடன்,
பர்ஸான்.ஏஆர்
________________

முகம் தெரிந்த, தெரியாத அனைத்து உள்ளங்களையும் இம் மடலின் ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி,

அதிசயமாக இருக்கலாம். யார் இவ்வாறான ஒரு ஆரம்பத்துடன் என்னை அழைக்கின்றனர் என்று,!

நிச்சயமாக நாமும் அப்படித்தான். சில விடயங்களை கதைக்க வேண்டிய தேவையிருப்பதன் காரணமாக இந்த மின்னஞ்சலின் ஊடாக சந்திக்க வேண்டியதாகிற்று.

உங்களின் பரபரப்பு நிறைந்த சூழலிற்குள் சற்று நேரம் ஒதுக்கி, நமதும் நம்மக்களினதும் வாழ்க்கை பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் செயலாற்ற வேண்டிய தேவையிருப்பதை நீங்கள் புறமொதுக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை நிறையவுண்டு.

இந்த நோக்கத்துடன் மிகத் திறந்த உரையாடலினு}டாய் நம் மக்களின் வாழ்விற்கு நாம் பங்காற்ற வேண்டிய தேவை இன்று நம்முன் பெருங்கேள்விகளுடன் எழுந்து நிற்கின்றது. போர் போர் என்ற கூச்சல்கள் ஓய்ந்து விட்டன. இனியும் இந்த போர்ப் பேய் நம்மைத் தொற்றாமல் இருக்கட்டும்.

இந்த வகையில் உள்நாட்டு அல்லது இனப் போருக்குப் பின்னைய இலங்கையின் நிலவரங்களில் நமது பங்காற்றலை வலுப்படுத்தும் நோக்குடன் இங்கு உரையாடல் ஒன்றினை ஆரம்பித்து வைக்கிறோம். தயவு செய்து இலங்கையில் இ;ன்னுமொரு போர் ஏற்படாமல் இருக்க மக்கள் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கும் நமது இந்த முயற்சிக்கு உங்களின் கருத்துக்களுடன் கூடிய பங்களிப்பினை நிச்சயமாக வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு.

மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த மின்னஞ்சலினை பரவலாக்கியும் இது பற்றிய உரையாடலினை வளப்படுத்தவமும் நீங்கள் எடுக்கும் முயற்சி நமது மக்களின் நிம்மதியான வாழ்விற்கு நிச்சயமாக பெரும் உதவியாகவிருக்கும்.

தனிப்பிரதியாக நீங்கள் கூறும் கருத்துக்களை தயவு செய்து அனைவருக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்.

எந்த அமைப்போ கட்சியோ சாராமல் நாம் எடுக்கும் இந்த முயற்சி எதிர்கால இலங்கையன் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது என்பதில் இரு கருத்துகள் கிடையாது.

இலங்கையின் அமைதியையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்க இலங்கையர்களாகிய நம்மால்தான் முடியும். நாம் அனைவரும் இணைந்துதான் நம் மக்கள். நம் மக்களின் வாழ்வினை நாமன்றி வேறு யார் பேசமுடியும்.

அந்த மகத்தான நம்பிக்கைகளுடன்,
புதிய இலங்கையர்கள்.

நாம் இலங்கையர்கள் தானே

நமது பாசத்துக்குரிய பிறந்த மண்ணான இலங்கையில் அரேங்கேறிக்கொண்டிருக்கும் அனைத்து அரசியல் நாடகங்களையும் நீங்கள் எங்களைப் போல அல்லது அதைவிடக் கூடுதலாக அறிந்து கொண்டிருப்பீர்கள். நமது இலங்கையினுள் இருக்கும் தோழர்கள் ஒவ்வொரு கணமும் இந்த நாடகங்களின் போலியை, திறந்த வெளிச் சிறையை அனுபவத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இதன் கொடூரம் என்னவெனில் நம் நாட்டிலிருந்து நமக்கான அரசியல் பற்றிய நியாயமான பார்வைகளை முன்வைத்துக் கொண்டிருந்த பல நண்பர்கள் இன்று மௌனிகளாகி விட்டனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு அங்குள்ள கள நிலைமைகளை கேட்கின்ற போது அவர்களிடமிருந்து எந்த காத்திரமான பதில்களோ முயற்சிகளோ வெளிவரவேயில்லை. இந்த தேக்க நிலையினையினையும் அதன் வலிகளினையும் நாம் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறோம்.

இதற்கு இன்று அங்குள்ள சூழலும் அரசு ஏற்படுத்தியிருக்கிற பயங்கரவாதத்தின் கொடூரம் நிறைந்த அச்சமுமே காரணமாகும். எதையும் வெளிப்படையாக கதைக்கவோ எழுதவோ முடியாத மிக மோசமான வன்முறை மறைமுக வடிவில் பல குழுக்களால் இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறன.

புலிகளில் மற்றும் தமிழ் அரசியல் தலைமைகளில் அறவே நம்பிக்கையிழந்த பலர் நம்மிடையே இருக்கிறோம், இருக்கின்றனர். ஆனால் புலியின் துப்பாக்கியினாலும் அல்லது இதர தமிழ் அரசியல் கட்சிகளாக தம்மைக் காட்டிக்கொண்டு மக்களிடம் கப்பம் அது இது என வன்முறையில் ஈடுபட்டுத் திரியும் குமபல்களின் துப்பாக்கினாலும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வன்முறை எதையும் கதைக்காமலே இருந்து விட பெரும் பங்காற்றிற்று. புலிகளின் இராணுவ ரீதியான வீழ்ச்சிக்குப் பிறகும் இந்த மௌனம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதினை மறைத்துக் கொண்டு நம் அரசியலினை கதைக்க முடியாது.

இதே போல, நமது முஸ்லிம் மக்களின் நிலையும் இருட்டுக்குள் கருப்பு மணியைத் தேடுவதாகவேயுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தம் கேவலமான சுய நலத்திற்காய் மஹிந்தவினதும் ரணிலினதும் காலடியில் எழும்புகளை நக்கிக் கொண்டு கிடக்கின்றன. மக்கள் அரசியலின் எந்தவொரு போராட்ட வழிமுறைகளும் அற்ற இந்த எழும்பு நக்கிகளின் அரசியல் வாழ்வின் பெரும் பகுதி எங்கு பத்து ரூபாய் கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து வாய் கூசும் நடவடிக்கைகளை எவ்வித அசிங்கமும் இல்லாமல் அரசியல் சாயத்துடன் செய்து கொண்டே வருகின்றனர். அஷ்ரப் அரசியலை மூலதனமாக்கிக் கொண்டு எழும்பு நக்கும் அனைத்து அரசியல் நுட்பங்களை யும் நன்றாக கற்றுத் தேர்ந்த இந்தக் கும்பலும் பேரினவாதத்தின் வருடிகளாகவே வாழ்ந்து மடிந்து கொண்டிருக் கும் மற்றொரு குழுவும் தம் ஆதிக்கத்தினை இன்னமும் முஸ்லிம் அரசியலில் பலமாகவே வைத்துள்ளனர்.

இந்த ஆரோக்கியமற்ற போக்கிற்குள் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமலே நமது மக்களின் பெரும்பாலான வாழ்க்கை நிறைவடைந்து கொண்டிருக்கிறது. நாம் நம்பியிருந்த அரசோ, இயக்கங்களோ, கட்சிகளோ தலைமைகளோ சக்தியும் அறிவும் அற்றவையென்பதுதான் இறுதியில் புரிந்து கொள்ளப்பட்ட உண்மை. நம்மிடம் இருக்கும் அரசியல் யதார்த்தினை புரிந்து கொள்ள மறுக்கும் தலைமைகளும் மக்களிடம் சென்று அரசியல் சமுகவியலை எடுத்துச் சொல்ல பலமற்ற குழுக்களுமாகவே நம் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மிக அபுர்வமாக அரசியல் சமுகவியலின் பின்ணனியோடு நேரடி அரசியலுக்குள் ஒரு சிலர் வந்தாலும் குறுகிய காலத்தினுள்ளே அவர்களையும் அரசியல் கேவலத்தின் கரங்கள் மிக லாவகமாகப் பற்றிக் கொள்கின் றன. இவ்hவறு நீண்டுகொண்டே செல்கின்ற நம் கேடுகெட்ட அரசியலின் போக்கினை இன்னும் விபரித்துக் கொண்டிருப்பது நம்மீதான பொறுப்புக்களை மேற்கொள்வதில் பின்னடைவுகளையே ஏற்படுத்திக் கொண்டிருக் கும்.

ஆக, நம் முன் இருப்பது நம் மக்களிற்கான அரசியலை மிக வெளிப்படையாக உரையாடுவதே. நம்மை ஆட்கொண்டிருக்கும் அச்சத்தின் விளைவாக பல விடயங்களை நாம் கதைக்காமலே இருந்து கொண்டிருக்கி றோம். இந்த இடைவெளியை நாம் விட்டுக் கொண்டிருப்பதால் நன்மையடைவர்கள் யார் என்பதும் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். ஆம் அவர்கள்தான் நம் கேவலமான அரசியல் தலைமைகள். வன்முறைக்கும் அநாகாPகத்திற்கும் பயந்து நாம் விடும் இந்த இடைவெளியை நிறப்பும் இந்த வன்முறையாளர்கள் அவர்களின் போக்கிலே நமது மக்களையும் நமது மகத்தான வாழ்வினையும் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்படி யென்றால் இந்த சூறையாடல்களிற்கு நாமும் காரணம்தானே. நமது மக்களின் வாழ்வினையும் அவர்களின் அமைதியினையும் நமது பிறந்த மண்ணில் இன்னமும் இரத்தம் சிந்துவதற்கும் நாமும் ஒரு காரணகர்த்தாக்களாக இருக்கிறோமல்லவா??

எனவேதான், நமது மக்களின் பெயரால் இந்த வேண்டுகோளினை இங்கு முன்வைக்கிறோம். நமக்கான அரசியலை நாம் விவாதிப்போம். நமது நீண்ட விவாதங்கள் நமது இலங்கையில் புதிய அழகிய வாழ்வை உருவாக்கக் கூடியது என்ற நம்பிக்கைகளுடன் உரையாடுவோம்.

இலங்கையில் இருந்து கொண்டு கதைக்க முடியாத விடயங்களை வெளிநாட்டில் இருந்து கதைக்க முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது. நாம் யாருக்காக கதைக்கிறோம். நம் நாட்டுக்காகவும் நமது மகத்தான மக்களுக்காக வுமே. அனைவரும் கூடி நமக்கான அரசியல் தேவையினையும் நமது மக்கள் இன்று பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளையும் கொடுமைகளையும் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சொல்லொன்னா வலிகளையும் இந்தத் தளத்தில் வெளிச்சத்துக் கொண்டுவருவோம்.

மனித உரிமைப் பேரவையில் தன்னைக் காப்பாற்றி;க் கொள்ள சிங்கள அரசு தீர்விற்கான நகல் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால் என்ன வகையான நகல் தாக்கல் செய்யப்பட்டது என்ற விடயம் யாருக்குமே தெரியாது. இக்கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இ;ந்த நிமிடம் வரை அது பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை. 17 பந்திகளைக் கொண்ட இந்த தீர்வுத் திட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அவை 21 பந்திகளாக மாற்றப்பட்டதாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. அப்படியாயின் தன்னை போரியல் குற்றங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள சிங்கள இனவாத கொடுங்கோள் அரசு எதனை தீர்வாக முன்வைக்கப்போகின்றது என்ற அச்சம் மீளவும் நம்மை ஆட்கொள்கிறதல்லவா?.

இன்னும், மணிக்பாப் முகாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலியல் உட்பட அனைத்து வகை வன்முறைகளிற்கும் எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இது மட்டுமன்றி யுத்தத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட மற்றும் புலிகளினால் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இனச் சுத்திகரிப்பிற்குள் ளான முஸ்லிம் மக்களினை கௌரவமாக மீளவும் குடிNயுற்ற வேண்டிய வரலாற்றுத் தேவையின் காலம் நம் முன் நிற்கிறது. இது பற்றிய நீண்ட உலையாடல்கள் அவசியமாகின்றன. மீளவும் சொந்த மண்னில் குடியேற்றும் விடயத்தில் மிகவும் முனைப்பாக நாமனைவரும் இருக்காதவிடத்து துரத்தப்படட்ட நமது மக்களினை மீளவும் அழிவுக்குள்ளாக்கும், அரசியல் சுதந்திரத்தினை காவு கொள்ளும் செயற்பாட்டையே நாம் செய்தவர்களாக மாறிவிடுவோம்.

இவ்வாறு நீண்டு செல்லும் நமது வாழ்க்கை பற்றிய உரையாடலினை நாமாக இணைந்து விவாதிக்கவும் அதிலிருந்து பல அழுத்தங்களை அதிகாரத் தரப்பிடம் முன்வைக்கவும் வேண்டிய காலகட்டம் இது என்று கருதுகிறோம். ஆகவே, இந்த வெளிப்படையான உரையாடலில் இணைந்து கொண்டு யதார்த்தமான வழிமுறைகளினு}டாய் நமது மக்களின் வாழ்வினையும் நமது இலங்கையின் அரசியலினையும் கொண்டுசெல்ல உங்களின் மகத்தான பங்களிப்புக்களை வெளிக்கெணருமாறு வஞ்சிக்கப்பட்ட மக்களின் அழுகுரல்களின் சார்பாய் வேண்டுகிறோம்.

நமது மக்களின் மனிதாபிமான விடயங்களில் இலங்கையரல்லாத பலர் உளத்து}ய்மையுடன் இயங்கியது நமக்கு நன்றாகத் தெரியும். அந்த உள்ளங்களும் இந்த உரையாடலில் பங்கெடுக்க வேண்டும் என்று வினயமாகக் கேட்டுக் கொள்கிறோம். அநீதி இழைக்கப்பட்டவர்களிற்காய் கதைப்பதும் வாழ்வதும் மிகப் பெரிய தர்மம் மட்டுமல்ல மனித வாழ்வின் இன்பமும் அதுதானே.

நம்பிக்கைகளுடன்
புதிய இலங்கையர்கள்.

Wednesday, June 17, 2009

எதுவரை? - சிறந்த உரையாடல் சந்தர்ப்பம்

மருதமுனையில் நடந்த எதுவரை? அறிமுகக் கூட்டத்தில் நான் பேசியவை நண்பர் ஸவ்பி அவர்களின் வேண்டுகோளிற்கு பின் பதிவாகியது. அதுவே இங்கு வலையேட்டப்படுகிறது. தகவல்களை நினைவு படுத்திய நண்பர் ரபியூஸ் அவர்களிற்கு நன்றிகள்.
----------------------------------------
ஜேர்மனியின் முக்கிய படைப்பாளியாகவும் மனித நேயமுள்ளவராகவும் இறை விசுவாசியாகவும் அறியப்படுகி ன்ற வண. மார்டின் நீமோல்லர் (Rev. Martin Niemoller) பற்றி நமக்குத் தெரியும். கிட்லரிற்கு சார்பாக இருந்த போது அவர் நட்சத்திர அந்தஸ்தினை ஆட்சியாளர்களால் பெற்றிருந்தார். பின், இரண்டே வருடத்தில் தன் போக்கில் மாற்றம் ஏற்பட்டு நாசியத்தின் எதிர்ப்பாளனாக மாறி கிட்லரின் ஷாஸன்ஹஉஸின்(sachsenhausen) வதை முகாமின் கொடுமை களுக்கு அத்தாட்சி யாகிப் போனாவர். அவரின் புகழ்பெற்ற வரிகளான -

“In Germany, the Nasiz first came for the Communists,

and I did not speak up because I was not a Communist.


Then they came for the Jews,

and I did not speak up because I was not a Jew.


Then they came for the trade unionist,

and I did not speak up because I was not a trade unionist.


Then they came for the Catholics,

and I did not speak up because I was a Protest..


Then they came for me, and by that time,

there was no one left to speak up for me” என்ற வரிகள்தான் இப்போது என் நினைவிற்கு வருகின்றன. இதே வரிகளை கம்யூனிச தோழர்கள் அரசியலுக்காக, மக்களுக்காக இலக்கியம் படைக்காதவர்களை நோக்கிக் கூறியதாக ஒரு தகவலும் உண்டு.

ஆனால் இனறுள்ள சூழலில் மனித அவலத்தின் மீதுள்ள, வன்முறைகளின் மீதுள்ள நமது எதிர்ப்புக்கு கிடைக்கும் பரிசுகள் மக்கள் இலக்கியம் என்ற மனிதாபிமானப் போராட்டத்தினை ஒட்டு மொத்தமாய்ச் சிதைத்து விடுகின்றது. அதே நேரம் இந்த சிதைவிற்கு அஞ்சி நமது எழுத்தியக்கம் உட்பட நமது போராட்டங்களில் நாம் போர்த்திக் கொண்டுள்ள பெரும் மௌனங்கள் நமது வாழ்வினை உள்ளரிப்புச் செய்து கொண்டுள்ளதினையும் மறந்துவிட முடியாது. இப்படியான இரண்டும் கெட்டான் சூழுலில்தான் நாமும் நமது வாழ்வின், நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் பெரும் காவுக்குள் சிக்கித்தவிக்கிறன. நாம் நம்பிய அரசியலும் போராட்டங்களும் வெறும் உணர்ச்சிகளின் வடிவத்தினையே கொண்டிருந்தன. அவற்றினால் நமது மக்களின் தொடரான வாழ்வினை மேம்படுத்தும் எந்தவித திட்டங்களும் சக்தியும் இருக்கவில்லை என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் நமது செயற்பாடுகள் இன்னமும் நம்பிக்கையளிக்கும் வழியாக வெவ்வேறு இயங்கியல்கள் ஊடாக தொடாந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கான மற்றொரு வடிவமாகத்தான் பௌசரின் எதுவரை? இதழினைப் பார்க்கிறேன்.

அதுவும் பௌசர் காக்காவின் இயங்கியலை இது வரை இங்கிருந்து பார்த்திருக்கிறோம். அவரிற்குள்ள பரந்த தொடர்பும் நமக்குத் தெரியும். அதே போல அவரின் மீதுள்ள விமர்சனங்களும் பார்வைகளும் நாம் அறிந்தவைகள்தான். அவைகளை முன்நிறுத்திக் கொண்டு இந்த இதழினை வாசிப்புச் செய்வது பொருத்தமான பகுப்பு முறையென்று சொல்லமாட்டேன். அந்த வகையில் பௌசரின் பின்னணியிலிருந்து எதுவரை?யினைப் பார்க்காமல் இலங்கையிலிருந்து மிக அண்மையில் வெளியேறிய ஒரு இயங்கியலாளரின் புலம் பெயர் செயற்பாடாகத்தான் இதனை அவதானித்தல் நமது வாசிப்புக்கு குறுக்கீடுகள் அற்றதாய் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

2000மாம் ஆண்டுகள் புலம் பெயர் வெளியீடுகளின் முக்கிய குவியமாக இருந்தன. அதிகமான இதழ்கள் பன்மைக் கதையாடல்களுடன் வெளிவந்தன. அதே போல சரிநிகரின் வீச்சும் அதிகமாகவிருந்த காலம் இதுவாகும். அந்தத்தன்மை கீழிரங்கி இதழ்களின் தொடர்ச்சியினை கண்டு கொள்வதே கடினமாகிவிட்டது. எப்போதாவது இருந்து கொண்டு பிரான்சிலிருந்து ''உயிர்நிழல்'' (கிடைக்கிறது), நோர்வேயிலிருந்து ''உயிர்மெய்'' (கிடைப்பதில்லை), கனடாவிலிருந்து ''வானமே எல்லை'' (கிடைப்பதில்லை) என்பனவும் இங்கிருந்து எங்களின் ''பெருவெளி''யும் இப்போது தொடராக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிதி நெருக்கடி மிக முக்கியமான பிரச்சினை. இவை தவிர இணைய இதழ்கள் ஏராளமாய் நம்மிடையே கிடைக்கின்றன. அவ்வாறுதான் சுயமான இணையங்களும் வலைப்பூக்களையும் இன்றைய நாட்களில் காணக்கிடைக்கிறது. இந்த வரிசையில் ''மூன்றாவது மனிதனு''க்குப் பின் எதுவரை? நம்மமிடையே வெளிவந்துள்ளது. அனைத்தையும் தாண்டி ஒரு புதிய போக்குடன் மற்றொரு இதழ் வெளிவந்திருப்பதினை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

சரி இனி இதழுக்குள் வருவோம், இங்குள்ள பலரும் இந்த சஞ்சிகை பற்றி கதைக்கவிருப்பதனால் மிகச் சுருக்கமாக நான் சில பிரதிகளை மட்டும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்வது நல்லதென்று நம்புகிறேன். இதில் தோழர் ஜமால், ஷோபா சக்தி ஆகியோரின் பிரதிகளை ஏற்கனவே நான் வாசித்திருந்தேன். அது தவிர 'புலிகளுக்குப் பிறகு' - அ.மார்க்ஸ், 'சிறுபான்மையினரின் ஒருமைப்பாடு'-நிர்மலா போன்ற பிரதிகள் இலங்கையின் அரசியலுடன் முன்நிறுத்தப்பட்டுள்ள முக்கிய பிரதியாகக் கொள்ளலாம். இலங்கையில் வசித்துக் கொண்டு இங்குள்ள அழிவுகளிற்கு சாட்சியாகவிருக்கிறோம் என்ற வகையில் நிர்மலாவின் பிரதி பல போதாமைகளோடு இருப்பதாகப்படுகிறது. ஏனெனில் இது மேலோட்டப் பிரதி. ஒன்று கூடுவோம், இணைந்து செயற்படுவோம், அனைவரையும் ஏற்றுக் கொள்வோம், என்பனவற்றினை எத்தனை நாளுக்கு இப்படியே எழுதியும் பேசியும் வரப்போகிறோம் என்பது தெரியவில்லை. இதைத்தாண்டி ஒன்றையும் நாம் செய்யவில்லை. கூடி கலைவதே பெரியதொரு விடயமாக நம் முன் இருக்கிறது. நமது மக்களின் வாழ்வு பற்றிய எந்தத் தீர்வும் நம் தலைமைகளிடம் இல்லை. குறிப்பாக எடுத்துக் கொள்ளுங்களேன். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தேவைப்பாடு பற்றிய எந்தவொரு ஆவணமாவது நம் தலைமைகளிடம் இருக்கின்றதா? அல்லது நாமாவது அதனை தயாரித்துள்ளோமா? சிலர் முக்கிய ஆய்வினை செய்து விற்பனைக்கு கொடுக்கத்தான் தயாராகவிருக்கின்றனர். இன்றுள்ள மிக முக்கிய செயற்பாடு சர்வதிகாரத்திற்குள் சிக்கித் தவிக்கின்ற இலங்கையினை மீட்பதுதான். சில விடயங்களை வெளிப்படையாக என்னால் கதைக்க முடியாது என்பதற்காக நானே இவ்விடத்தில் வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.

முப்பெரும் ஆட்சியின் விளைவு இன்று நம்மைச் சூழ்ந்துள்ளது. இந்த சதிவலை பல்வேறு மாயாஜாலங்களினால் காட்சியளிக்கிறது. உக்கிரம் அடைந்துள்ள புலிகளுடனான போரும் அது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற வெற்றி விழாக்களும் இந்த மாயாஜாலத்தின் அகோரத்தின் கொடும்வன்முறையினை மறைத்துக் கொண்டிருப்பாதினை நாம் அனுபவிக்கிறோம். புலிகள் விட்ட பல்வேறு அரசியல் பிழைகள் இன்றைய முப்பெரும் ஆட்சியின் பலமாகிவிட்டன. இந்தப் பலத்தின் முன் நமது தலைமைகளாக இருந்து கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் ராசாக்களின் கதையும் கிளைமேக்ஸ் கட்டத்திற்குள் வந்துள்ளதினை நாம் காண்கிறோம். முப்பெரும் ராஜாக்களினைத் தவிர வேறு எவர்களிற்கும் இவர்களின் செவிப்பறை மென்சவ்வுகள் உணர்திறன் கொண்டவைகளாக இருக்க முடியாது. ஆக, இந்த இடத்தில் சர்வதிகாரத்திலிருந்து இலங்கையைக் மீட்பது எவ்வளவோ முக்கியத்துவம் பெறுவதைப் போல நம் மக்களின் அரசியல் விளிப்பை மேம்படுத்தலும் பெரும் முக்கியமாய்ப்படுகிறது. மக்கள் போராட்டங்கள் மட்டும்தான் இனி சாத்தியப்படுபவையாகும். போலியான முலாம் கொண்ட போராட்டங்களின் வடுக்களினை நாம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் என்ற வகையில் இதனைச் சொல்கிறேன். வீதிக்கு மக்களைக் கொண்டு வருவது பற்றிய தேவைக்கு முன் இந்த விளிப்புணர்வின் அவசியம் முக்கியமல்லவா?

பேராசிரியர் அ.மார்க்ஸ் கூறுவது போல 'வீங்கிப் போன ஒரு அதிகார வர்க்கம், ஊதிப் போன ஒரு அமைச்சரவை(106 பேர்!), ஒப்பிட்டுச் சொல்ல இயலாத ஊழல், குடும்ப ஆட்சி, இராணுவத்தின் ஆட்சியுடன் வெளிப்படையாக இயங்கும் கொலைப்படைகள், ஆள் கடத்தல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள்.. இதுதான் ஸ்ரீலங்கா'. எனும் போது நம்மை நாமே நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன இருக்கிறது என விட்டுவிடமுடியவில்லை. ''கொலைகளின் தேசத்தில் பிறந்தேன்'' என நான் எழுதிய கவிதையின் தலைப்புதான் நினைவிற்கு வருகின்றது. போராசிரியர் அ.மார்க்ஸின் இந்தக் கட்டுரையானது நமக்கு முன் பல செய்திகளை தேடித்தந்திருக்கின்றது . அவரே தொலைபேசியில் கூறியது போல 'புலிகளை விமர்சித்தால் மஹிந்தவின் ஏஜென்டுகள் என்று தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்கள் கருதுகின்றனா';. ஏனெனில் தமிழகத்தின் தேர்தல் கூத்துக்களும் தழுவல்களும் இன்று அவர்களின் அரசியல் பாதையினைப் பற்றிய பெரும் சந்தர்ப்பவாத கேவலத்தினை அரங்கேற்றிவிட்டதை நாமெல்லாம் கண்டோமல்லவா. அதே போல்தான் அரசை விமர்சித்தால் நாம் புலிகளாகிறோம். புலிகளை எதிர்ப்பதால் அரச எடுபிடிகளாகிறோம். இந்த திரிசங்கு நிலைக்குள்ளால் நமது இலக்கியங்கள் முன் பெரும் வரலாற்றுத் தேவை இருப்பதினை எப்படி மறுத்தொதுக்க முடியும்.

ஷோபா சக்தியின் ''எம்.ஜி.ஆர். கொலைவழக்கு'' ஈழப் போராட்டத்தில் உருவாகியிருந்த பெரும் அறியாமையின் பங்கினை சொல்கின்றதாய் நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் என்ற ஹீரோயிஸம் எவ்வாறான வாழ்வொழுங்கில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புக்கள் இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இப்போது எம்.ஜி.ஆர் இல்லாவிட்டாலும் தமிழ் நாட்டு சினிமாவின் கூலாங்குப்பைகளெல்லாம் இலங்கையிலும் வாழ்ந்து கொண்டேயிருப்பதை அன்றாடம் பார்க்கிறோம். மற்றும் இயக்கங்களிற்கு இடையிலான பெரும் கருத்து மோதல்களை ஷோபாசக்தியின் கதைகளில் நன்கு காணலாம். ஒரு ஈழப் போராளியின் வாழ்வின் சில பகுதிகளை நமக்குச் சொன்ன 'கொரில்லா'விலிருந்து இன்று வரை அவர் இந்த மாதிரியான வரலாற்றுப் பதிவுகளை ஷோபா நமக்குத் தந்து கொண்டேயிருக்கிறார். மேலும் இவரின் கதைகளின் சட்டம் கவனிப்புக்குரியது. பிரஞ்சில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றல் கொண்ட ஷோபாவின் பிரதிகளில் இந்தப் பண்பினை நாம் காணக்கூடியதாய் இருக்கும். அவரின் ரமழான் கதையும் இவ்வாறான புதிய கதைசொல்லும் பாங்கினையே வெளிப்படுத்தியிருந்தது. இதே போன்ற தன்மையினை ரமேஷ்;-பிரேம், சாரு நிவேதிதாவின் கதைகளிலும் காணலாம். ஏன் நமது மிஹாத், றியாஸ் குரானா, அப்துல் றசாக் போன்றோரின் கதைகளும் இந்த வகையினத்திற்குளேதான் காணப்படுகின்றன.

மற்றொரு விடயம் ஷோபாவின் இக்கதையில் முக்கியமானது. கதையை நமது பௌசர் காக்காவிற்கே சொல்லுவது. அதிலும் கதை ஆரம்பிக்கும் வரிகள் அலாதியாக இருக்கின்றன. ''கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இக்கதையை நீங்கள் நம்பலாம். அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை..'' புலம் பெயர்வும் இன்னும் அழிந்து போய்விடாத இழப்பின் வடுவும் நமது கழிவிரக்கத்தினை அசைபோட்டுக் கொண்டுதானேயிருக்கின்றன. ஆனால் டொனாஸ்தான் என்ன செய்ய முடியும். அவனுக்கு எம்.ஜி.ஆர் கூட சரியாக அறிமுகமாகாமலே அவனை இயக்கம் வளர்ந்த்துவிட்டதே. நானும் எம்.ஜி.ஆரும் மிக அண்மையில் அதிகமாக நட்புக் கொண்டிருந்தோம். உங்களுக்கு இதை நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும். இந்தியத் தேர்தல் காலம் தானே. மீளவும் மக்கள் திலகத்தின் படங்களையும் பாடல்களையும் பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஜெயா தொலைக்காட்சி இதைத்தானே செய்து கொண்டிருக்கிறது. "ஷோபா சக்தி மாமா, எம்.ஜி.ஆர். உண்மையில் நல்ல ஆள்!" என்றாலும் உங்களின் பதிலில் எனக்கு உவப்புத்தான்.

நேரம் அதிகமாகச் சென்று கொண்டிருப்பதனால் மீதமான வாசிப்புக்களைச் சுருக்கிக் கொள்கிறேன். குறிப்பாய் தோழர் ஜமாலனின் 'தமிமீழமும் தமிழர்களும் உலகமய-காலனீயத்தின் சோதனை விளையாட்டுகள்' என்ற பிரதி சிங்கள மயமாக்களின் கொடூரத்திற்கு சிறந்த வரலாற்று எழுதுகையாகும். என்றாலும் ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வரும் தமிழர் வரலாற்றிலிருந்துதான் ஜமாலன் கூட தன் பிரதிக்கான பின்னணியை எடுத்துக் கொள்கிறார். இலங்கை வரலாற்றுடன் நீண்ட கால அரசியல் மற்றும் வாழ்வுத் தொடர்புகளைக் கொண்ட சமூகமான முஸ்லிம்கள் இலங்கை மைய சமூகவோட்டத்துடன் இணைக்கப்படுவது எவ்வாறு திட்டமிட்டு களவாடப்பட்டுள்ளமையை நாம் நன்கறிவோம். இந்தத் திருட்டுத்தனமான வரலாற்றின் கொடூமைதான் இனப்பிரச்சினையில் நம்மை கடுமையாகப் பாதித்துள்ளது. முஸ்லிம் தேசத்தின் அடையாளம் இஸ்லாத்துடன் தொடர்பு கொண்டுள்ளதினைப் போலதான் சோனகர்களின் வரலாறு நமது இனத்தின் அடியாக எழுவதினை இன்று காண்கிறோம். இந்த ஆய்வுகளில் முனைப்புடன் உள்ள முஹ்சீன், ஏ.பீ.எம். இத்ரீஸ் போன்றவர்கள் தம் பங்காற்றலினை வெளிப்படுத்த வேண்டிய தேவை இன்று முக்கியமாகும். அப்போதுதான் தமிழ் தேசிய உணர்வுடனும் சிங்களப் பெரும் தேசிய மகிழ்வுடனும் தோண்டியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசியங்களின் முன் நீண்ட பின்னணியுடன் இருக்கும் சோனக தேசத்தின் அடையாளத்தினையும் கதையாட முடியும் என்று நம்புகிறேன். இதனால் தேசியத்தின் சாக்கடை அரசியலை மீளவும் நியாயப்படுத்த முனைகிறேன் என்பதல்ல பொருள். பின்னப்படும் வரலாறு ஒரு தலைப்பட்சமாக அமைந்து விடுவதில் உள்ள வன்முறையில்தான் பன்மையான கதையாடல்களின் தேவையினை வேண்டிநிற்கிறேன்.

மேலும், 'சின்ன மரைக்கார் பெரிய மரைக்கார்' பற்றியும் ரஊபின் திறனாய்வு பற்றியும் கொஞ்சம் கதைக்கலாம். ஆனால் ரஊப் இல்லாத இந்த இடத்தில் அது பற்றி பேசுவதைத் தவிர்த்ணதுக் கொள்வது நல்லது என்ற நிலையுடன் அதை விட்டு விடுகிறேன்.

ஒரு விடயத்தினைக் கூறி எனது வாசிப்பின் பகிர்வினை முடித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். முன்னரைப் போல் புலம் பெயர் இதழ்களில் பெரியதொரு கருத்தியல் தளத்தினைக் காணக் கிடைக்க வில்லை. அதே போல பல புலம் பெயர் பிரதியாளர்களும் காணாமல் போய்விட்டனர்.

இறுதியாய், பதிப்புத் துறையென்பது மிகுதியான சுமையும் அதிகரித்த பலமும் வேண்டிநிற்கின்ற ஒன்று. இலங்கையில் இருந்த போது எம்.பௌசர் அதிகமான பதிப்பக செயற்பாடுகளில் தன்னை இணைத்திருந்தவர். காலச்சுவடு போன்ற பெரும் வணிக இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்ட போதும் அவரிடம் ஒருவகை முஸ்லிம் தேச அரசியல் போக்கு உள்ளிருந்து தூண்டிக் கொண்டிருந்தது. நமது இயங்கியலாளர்கள் பலரின் பங்களிப்புடன் கொண்டுவரப்பட்ட சுயம், முஸ்லிம் குரல் என்பன இந்த தூண்டலின் வெளிப்பாடுகளே. இங்கு முரண்பாடுகளினைத்தாண்டி நாமெல்லாம் இணைவது வெறிபிடித்த அதிகாரத்திற்கு எதிரானவர்களாகவும் மனித நேயமுள்ளவர்களாகவுமே. எதுவரை? அறிமுகக் கூட்டத்தில் ஷோபா சக்தி கூறியது போல 'எழுதுவோம், பதிப்பிக்கும் வேலைகளுக்கு பௌசர் இருக்கிறார்' என்பது இயங்கியலாளர்களிற்கு நிறைந்த நம்பிக்கைதான். ஒரு இதழினை அதுவும் பெரும் வணிக போக்கின்றி காத்திரமான சிற்றிதழ்களை நடாத்துவது எவ்வளவு கஷ்டம் நிறைந்த பணியென்பதினை விபரிக்க வேண்டியதில்லை.

ஆனால் நமது எழுத்துலகில் இருக்கும் எத்தனையோ போர் இன்னமும் எழுதுகிறார்கள். என்றாலும் அவர்களின் எழுத்துலகம் வளர்ந்ததாக காணமுடியவில்லை. வாசிப்பதும் இல்லை. மிக மந்தகரமான இந்த சூழல் அபாயகரமானதும் கூட என்பதை நாம் மறந்துவிடுகிறோம். தொடராக பெருவெளியினைக் கொண்டுவருவதில் இந்த அபாயத்தின் எல்லையை தரிசிக்க முடிகிறது. முன்பிருந்த ஆரோக்கிய சுழலினை வேண்டியவனாக எனது வாசிப்பனுபத்தினை முடித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றிகள்.

Tuesday, May 19, 2009

நான்காம் கட்ட ஈழப்போரின் நிறைவு நாட்குறிப்புகள்

- பர்ஸான். ஏஆர்

இந்தப் பிரதி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது (18.05.2009-இரவு08:15) எனது கைப்பேசி நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு குறுந்தகவலினை அரசின் உத்தியோக பூர்வ செய்தி நிறுவனத்திலிருந்தும் மற்றும் இதர செய்தி நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல இலங்கையின் பெரும்பாலான தொலைக்காட்சிகளும் குறிப்பாய் அரச தொலைக்காட்சிகள் இன்று பகல் 01:30 தொடக்கம் இப்போது வரைக்கும் புலிகளின் கொலை வரலாற்றையே பட்டியலிட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த உணர்ச்சி கூடிய பரபரப்புக்கு மத்தியில் கொழும்பு உட்பட சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் பெருமளவில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்தியத் தொலைக்காட்சிகளுக்கும் வே.பிரபாகரன் பேசு பொருளாக மாறிவிட்டார். குறிப்பாக ஆசியன் நியூஸ் அலைவரிசையினை கூறமுடியும்.

இப்போது கிடைத்த செய்திகளின் படி அய்க்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் 22ம் திகதி இலங்கை வருகிறார். இராணுவத் தளபதிகளிற்கு மேதகு ஜனாதிபதி பதவி உயர்வுகளை வழங்கியிருக்கிறார். 22ம் திகதி கொழும்பில் படைவீரர்களிற்கு எல்லையற்ற நன்றி செலுத்தும் விழா நடை பெற இருக்கிறது. இதே போல் இன்னும் பற்பல...
இப்படியாக நீண்டு கொண்டு போகும் வெற்றி விழா வரலாற்றெழுதுகைக்கு இடையேதான் முப்பது வருடங்களுக்கு மேலாக (1984லிருந்து) இலங்கையின் உள்நாட்டுப் போராக இடம் பெற்று வந்த ஈழப்போராட்டம் யார் என்ன சொன்னாலும் மிக முக்கிய கட்டத்தினை அடைந்து விட்டது. அதாவது ஒரேயொரு ஆயுதத் தலைமையின் (வே. பிரபாகரன்) கீழான போராட்டத்தின் இறுதி நாள் கடந்த 16.05.2009 ஆகும்.

விடுதலைப் வேட்கையின் பிரதியாயும் சிங்கள அடக்கு முறைக்கெதிரான மாற்று வழிமுறையாகவும் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்று பெற்றுக்கொண்டுள்ள வடிவம் பற்றிய உரையாடல் முக்கியமானது. தமிழ் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம், பின்னர் அது எடுத்துக் கொண்ட வடிவங்கள் என்பன தொடர்பாக நிறையவே நமது சூழலில் கதைக்கப்பட்டு விட்டன (அல்லது கதைப்பவர்கள் கதையும் முடிந்து விடும் ஒன்றாய் புலிகளின் பதில்களும் இருந்து வந்தன). ஆகவே அவ்விடயத்தினைத் தவிர்த்து இன்றைய கட்டத்தில் விடுதலைப் போராட்டங்களிற்கு நடந்துள்ள கதியினைப் பற்றி ஒரு கணமேனும் வாசிப்புச் செய்து கொள்வது சிறுபான்மையின அரசியலிற்கு இனி முக்கியமான தென நினைக்கிறேன்.

விடுதலைப் போராட்டங்களின் தோற்றுவாய்

காலனியத்திற்கு எதிராகவும், கொண்ட கொள்கைகளிற்கு ஆதரவாகவும் வன்முறை அரசியல் போக்கினை ஒரு போரியல் வழியாக நாம் அண்மைக் காலங்களில் கண்டிருக்கிறோம். காந்தியின் அகிம்சைப் போராட்டங்களும் கூட இதே காலப் பகுதியில்தான் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. இவ்வகையான வரலாற்றுக் காலத்தில் ஒரே நாட்டுக்குள்ளே அதிகார பகிர்வுகளில் ஏற்பட்ட மிகக் கேவலமான போக்குகள் இனங்களிற்கு இடையிலான பகைமைக்கு காரணமாகியதையும் நாமறிவோம். நமது மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் போது எந்தவொருவனும் கை கட்டி வேடிக்கை பார்த்திருக்க முடியாதுதானே. அவ்வகையான புறக்கணிப்புகள் ஒரு அரசியல் எல்லைகளிற்குள்ளே பல தேசங்களின் வரலாறுகள் அபகரிக்கப்படுவதையும் அவை அழித்தொழிக்கப்படுவதையும் எதிர்த்து தம் குரலினை பதிவு செய்யத் தொடங்கின. மேலும் வாழ்வுரிமை அபகரிக்கப்படும் போதுதான் ஒரு அரசியல் எல்லைக்குள்ளே வாழும் மக்கள் தங்களிற்கான தனியான சுதந்திர நாடு பற்றிய சிந்தனையினை மிக வெளிப்படையாகவும் அதற்கான வன்முறைப் போராட்டங்களினையும் மேற்கொள்ளத் தொடங்கினர். பல்வேறு போராளிக் குழுக்கள் ஒரே இனத்திற்கான விடுதலைப் போரில் இடம் பெற்றாலும் அவைகளிற்கு இடையிலான முரண்பாடுகளின் பின்னர் எதுவோ ஒன்;று அல்லது இரண்டே அதிகாரம் கொண்ட குழுவாய் மாறும் நிலையினையும் நாம் கண்டுள்ளோம். மற்றும் பல்வேறு நாடுகளில் விடுதலை போரில் பங்கேற்கும் இயக்கங்களிற் கிடையே பரஸ்பர தொடர்புகள் ஏற்படுவதும் அவற்றிற்கிடையிலான உறவுகள் பல துறைகளினூடாய் (வியாபாரம், பயிற்சி, அரசியல், திட்ட நிறைவேற்றல்கள், மற்றும் இன்னும் பல) வலுப் பெறுவதையும் நாம் அவதானிக்கலாம். இதே போன்று ஒரு நாட்டின் உள்ளக முரண்பாடுகளில் மற்றொரு நாடு பல்வேறு காரணங்களினதும் அவையொட்டிய அரசியல் பின்ணனியுடனும் தம் ஆதிக்கத்தினை பரிசோதித்துப் பார்பதையும் நாம் கண்டிருக்கிறோம். இந்த வரலாற்றுப் பின்னணிகளும் இன்னும் பலவும் இலங்கையின் இனப் போராட்டத்தில் ஏற்படுத்திய விளைவுகளை நாம் பொருத்திப் பார்த்தல் மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் இனங்களிற்கிடையிலான முரண்பாடுகளினது வயது வெறும் முப்பதோ நாற்பதோ அல்ல. நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் இந்த சிக்கல்கள் அவற்றின் பொறிமுறைகளாக பல்வேறு மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது. ஆரிய திராவிட இன அடையாளங்களிடையே வளர்க்கப்பட்ட இந்த போராட்டத்தில் இலங்கைச் சோனகர்களும் பல்வேறு காலகட்டத்தில் பழிவாங்கப்பட்டனர். இதனால்தான் இலங்கையின் இனப்போராட்டமானது மூன்று இனங்களிற்கிடையிலானதொன்று என்ற வடிவத்தினைப் பொற்றுள்ளதினையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. இலங்கையின் சுதந்திரத்துடன் சிங்களவர்கள் பெற்றுக் கொள்ளும் அரசியல் பேரதிகாரம் இந்நீண்ட வரலாற்றுப் போராட் டத்தி;ல் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டது. காலப்போக்கில் தழிழீல விடுதலைப் போராட்டத்தின் பாசிசம் வே.பிரபாகரனின் இராணுவ அரசியலால் வழிநடாத்தப்பட்டதிலிருந்து சிறுபான்மை சமூகங்களின் அரசியல் போராட்டம் என்ற அடையாளத்தினை அது இழந்தது நின்றதினையும் நாமறிவோம். இதற்கு நமது மக்களே இன்னும் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்றனர். மேலும் காலவோட்டத்தில் தமிழ் சமூகத்தின் அரசியலில் ஏற்பட்ட பெரும் கருத்தியல் மாற்றங்களினை புலிகளின் தலைமைகள் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதுடன் புலிகள் எழுதும் விதிகளிற்கே தலையசைக்க வேண்டும் என்ற வன்கொடுமை தமிழர்கள் மீது ஏற்பட்டதும் இந்தப் போராட்டம் தமிழ் மக்களுடன் கொண்டிருந்த உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது.
பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்களுடன் தேர்தல் கூட்டிணைவு களை மேற்கொண்ட புலிகள் இயக்கம் தான் நினைத்த ஒன்றையும் சிங்களத் தலைமைகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையினையும் நாம் மறந்துவிடலாகாது. இது ஆர்.பிரமதாசா தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரை தொடராகவே நடைபெற்றமையினை நாம் கண்டுகொண்டே வந்திருக்கிறோம். (இவைகள் புலிகள் தம் நிலையினை விட்டு மாற்று வழிமுறைகளினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமைக்கு ஒரு காரணமாயும் அமைந்தன).

விடுதலைப் போராட்டங்களிற்கு ஏற்பட்ட மாற்றுப் பார்வைகள்


அமெரிக்கா மீதான செப்டொம்பர் 11றின் தாக்குதலானது இன்னொரு வரலாறி னை உலகிற்கு வாசிப்புச் செய்யக் காரணமாகிவிடும் என்பதினை யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை. அந்த புதிய போக்கானது அதிகாரம் கொண்ட அரசுகளை விடுதலைப் போராட்டங்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டுவதில் வெற்றி கண்டன. மத அடிப்பமைத் தன்மையுடனான போராட்டங் களினையும், இன விடுதலைப் போராட்டங்களினையும் உலகப் பொது அமைதிக்கு எதிரான தாக இந்த தாக்குதல் வடிவமைத்தது. அதே போல வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலை இயக்கங்களின் ஆயுளையும் தீர்மானிக்கும் நிலையினை இத்தாக்குதல் சம்பவம் தன் கையில் எடுத்துக் கொண்டது. இத்துடன் நின்று விடாமல் இதனை சாக்கு வைத்து அமெரிக்க நேச நாடுகள் தங்களின் பாதுகாப்பினை மீளவும் ஒரு தடவை உறுதி செய்து கொண்டன.

அதே காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க மேற்கத்தய நாடுகளின் கைகளிற் குள் அகப்பட்டு ஜரோப்பாவின் அஜந்தாவினை அப்படியே இலங்கை அமுல் படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இது கட்சி அரசியலினால் பிளவு பட்டிருந்த சிங்கள சுதேசிகளின் இணைவிற்கு பலமான காரணியாக மாறியதி னையும் கவனங் கொள்ள வேண்டும். புலிகளை அரசியல் ரீதியாகப் பலவீனப் படுத்தி அவர்களின் கருத்தியல்களினை உடைத்து கோரிக்கைகளை சுருக்குவ தன் ஊடாக புலிகளினையும் தென்னிலங்கையினையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கணக்குப் போட்ட ரணிலுக்கு புலிகளின் ஊடாகவே அக்கனவினை அழித்தனர் சிங்கள கடும் போக்குவாதிகள். இவற்றின் பின்னணி யில்தான் நான்காம் கட்ட ஈழப்போராட்டம் ஆரம்பிக்கின்றது. புலிகளைப் பொறுத்தமட்டில் கருணா - ரணில் சதியினால் நான்காம் கட்ட ஈழப் போராட்டத் தினை அதிகரித்த பலவீனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட் டது. இதே போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வகையில் உலகின் கவனக் குவிப்பினை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி கண்டார். குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் என்பன நேரடியாக யுத்த களத்திலும் சீனா மற்றும் ரஷ்யா அய்க்கிய நாடுகள் சபையிலும் இலங்கைக்கு பெரும் உதவி யாகவிருந்தன. (மேலதீக தகவல்: "இந்தியப் பிரதமர் 100கோடி ரூபாய் பணமும் தமிழ் நாட்டரசின் குறிப்பிடும் படியான உதவிகளுமே இப்போராட்டத்தில் வெற்றி பெற துணை புரிந்தன" இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர், மக்கள் தொலைக் காட்சி செய்திகள், 18.05.2009).

ஆக, நான்காம் கட்ட ஈழப்போராட்டத்தின் பின்னடைவுகளையும் வெற்றி களையும் நாம் கண்டு கொண்டிருந்தோம் என்ற வகையில் அது பற்றிய முன் வைப்புக்களை இங்கு பேசவில்லை. ஆயுதங்களை கைவிட தாம் தயார் என வே.பிரபாகரன் இறுதியாக தன்னிடம் கூறியதாய் புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செ.பத்பநாபன் பிரித்தானிய தொலைக்காட்சியான Chennal4ற்குத் தெரிவித்திருந்த போதும் அரசு தன் பாதுகாப்பு வலையத்தினை சுருக்கிக் கொண்டே போனமை இந்த வேண்டுகோள் கவனங்கொள்ளத்தக்கதாய் மாற்றம் பெறவில்லை. அதே நேரம் புலிகளை முற்றாக அழித்து விடுவதுதான் ஒரே வழியென்று அரசு களத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தமையும் இந்த குரல் கவனத்தில் கொள்ளும் ஒன்றாய் அமையாமல் போனதற்கு காரணமாயிற்று. இறுதிக்கட்ட சரணடைவுகள் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமலும் யுத்தக் குற்றங்களின் பேரெண்ணிக்கையோடும் இந்தக் கட்ட ஈழப்போர் நிறை வை நோக்கி நகர்ந்தது. இருப்பினும் 16.05.2009 பிற்பகல் விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் 360 பேருடன் சுருங்கிய பாதுகாப்பு வலையத்தினை விட்டு வெளியேற முடியாது என்று கருதிய வே.பிரபாகரன் பாரிய குண்டொன் றை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாய் செய்திகள் இலங்கை பூராகவும் பரவியது. என்றாலும் எந்த தரப்பும் இதனை உறுதிப்படுத்தவில்லை. பின்னர் ஜனாதிபதி ஜி11 மகாநாட்டினை கைவிட்டு இடைநடுவில் நாடு திரும்பி யது இந்தச் செய்தியை உண்மைப்படுத்தும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் அமைந்தது. இறுதியாய் இன்று 18.05.2009 பிற்பகல் 12.30க்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தன. என்றாலும் சைனட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட புலிகளின் தலைவர்களையும் குண்டு வெடிப்பின் மூலம் தம்மை வீரச்சாவிற்கு உள்ளாக்கிக் கொண்ட தலைவர்களையும் தாமே கொன்றதாக அரசாங்கத்தின் செய்திக் குறிப்புக்கள் கூறிக் கொண்டேயிருக்கின்றன.

25000ற்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கியும் 10000-15000 தமிழர்களை பலிகொடுத்தும் ஏராளமான மனிதப்பேரவலம் ஏற்படக்காரணமாகிய நான்காம் கட்ட ஈழப் போராட்டம் 18.05.2009 உடன் நிறைவு பெற்றதாகக் கொள்ளலாம் (என்றாலும் பல தமிழ் தோழர்கள் வே.பிரபாகரனின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாது, அது பொய்ப் பிரச்சாரம் என்றுதான் நம்புகிறார்கள். அஷ்ரஃப் அவர்களின் கொலையைக் கூட நாம் அவ்வாறுதான் நம்ப மறுத்தோம் என்பதுவே நினைவில் வருகின்றது). இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது நான்காம் கட்ட ஈழப் போராட்டம் எதைச் சாதித்தது?.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்பேரவலத்தினை தடு;த்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கூட இராணுவத்தீர்வில் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கைகள் ஒரு இனத்தின் வாழ்வினை சீரழித்து நிம்மதியற்றதாக்கி விட்டது. நம்பிக்கையீனங்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட இந்தப் போராட்டம் மக்களை வளப்படுத்துவதில் பின்தங்கி விட்டதினை நாம் நினைவிற் கொள்ளல் முக்கியமாகும். சக துரோகமிழைப்புக்கள் ஒரு இனத்தின் பெரும் போராட்டத் தினை பேரவலங்களின் மடியிலும் நந்திக்கடல் இரத்தத்திலுமே முடித்து வைத் துள்ளன.

இனி ஜந்தாம் கட்ட ஈழப் போராட்டமா?

பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்களிற்கு எதிராக தொடங்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் ஆயுதத் தரப்பின் தளபதியாக ஒருவரே இருந்து வந்தார். இந்த இடத்தில் பிடல்கஸ்ரோ கூறிய ஒரு வார்த்தை நினைவிற்கு வருகிறது. "நான் பல அமெரிக்க ஜனாதிபதிகளைக் கண்டுள்ளேன். ஆனால் அவர்கள் ஒரு கஸ்ரோவையே கண்டுள்ளனர்" என்பதாகும். வே.பிரபாகரன் இலங்கையின் பல தலைவர்களை கண்டுள்ள போதும் அவர்கள் மரணிக்கும் வரையும் ஒரே ஒரு பிரபாகரனையே கண்டனர்.

நமது மக்களிடையே குறிப்பாக தமிழ் தோழர்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்ட தினை உணர்ந்து கொள்ள முடிந்தது. இனி நமக்கு ஏற்படும் இழப்புக்களை யார் தட்டிக் கேட்கப் போகிறார்? என்பதாகும். இந்த கூற்றானது எனது தமிழ் தோழி யொருவர் என்னிடம் தொலைபேசியில் கேட்டதே. நமது மக்களின் மன உணர்வு கள் கூட வன்முறைக்கே தலைசாய்ப்பதை இது காட்டுகிறது. இந்த இடத்திலி ருந்துதான் ஜந்தாவது போராட்டம் வெளிக்கிளம்புவதாக கொள்ள முடியும்.

இப்போது ஜனாதிபதிக்கும் இலங்கை மக்களிற்கும் புறமொதுக்கி விட முடியாத ஒரு கால கட்டமும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. புறையோடிப் போன இந்த அவலங்களிலிருந்து மீண்டு ஜனாதிபதியே சொல்வது போல அனை வரும் இலங்கையர் என்ற அந்தஸ்தைப் பெறுவதே இச்சந்தர்ப்பத்தின் முக்கிய குவிமையச் செயற்பாடாக இருக்க வேண்டும். நான் நினைக்கிறேன் இலங்கை யின் உள்நாட்டு, இனங்களிற்கு இடையிலான முரண்பாடுகளை இனியும் வளரா மல் அனைத்து மக்களும் கௌரவத்துடன் வாழ முடியும் என்பதற்கான அதியுச்ச சந்தர்ப்பம் இதுவாகும். அதிகாரங்களைப் பகிர்ந்து சிறுபான்மை மக்களின் வாழ்வு ரிமையினை உத்தரவாதப்படுத்திக் கொள்ள இதனை அரசாங்கம் பயன் படுத்த வேண்டும். வட மாகாணத்திலிருந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந் தும் விரட்டியடிக்கப்பட்ட மற்றும் புலம் பெயர்ந்த மக்களினை மீள தங்களின் இடங்களில் குடியேற்றுவதன் மூலமும் சிங்கள நாடு பிடிக்கும் பாசிசத்தினை கை விடுவதன் மூலமு; மீளவும் இந்த குட்டித் தீவினை வளப்படுத்தி மக்களினை இலங்கையன் என்ற பாசத்தினை உணரச் செய்ய வைப்பதும் மிக முக்கியமான தாகும்.

அய்க்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்தளிக்க கொழும்பு முயலுமாக விருந்தால் ஜந்தாம் கட்ட ஈழப் போர் நம் மக்களின் மேம்பாட்டுக்காய் உருப் பெறும். இது தமிழர்களிற்குப் பொருந்துவது போலவேதான் முஸ்லிம்களிற்கும் பொருந்தும். மாறாக மக்களினை ஏமாற்றி அரசியல் நடத்தி கோடி கோடியாக சொந்த வங்கிக் கணக்கினை நிரப்பிக் கொள்ள அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்ளத் துவங்கும் போதும், தென்னிலங்கையின் சிங்கள கடும் போக்காளர் களை ஆரத்தழுவிக் கொண்டு ஒற்றையாட்சியின் அகோரத்திற்கு தொடர்ந்தும் தாளம் போட்டுக் கொண்டிருந்தால் ஐந்தாம் கட்ட ஈழப் போராட்டம் மீளவும் கரை படிந்த துயரங்களின் தொடராகவே மாறிவிடும். இதனையே நாம் வரலாறு நெடு கிலும் கண்டு வந்திருக்கிறோம்.

தமிழில் பேசுவதில் ஜனாதிபதி காட்டுகின்ற சிரத்தை அதிகாரங்களினை பகிர் தளிப்பதிலும் நிலையான வாழ்வுரிமையினை வழங்குவதிலும் இனி காட்டப் படுமாயின் மனிதப் பேரவலங்கள் முடிந்து விட்டதாய் கொள்ளலாம். ஆனால் நமக்கானவர்கள் என காட்டிக் கொள்ளும் நமது சொறனை கெட்ட அரசியல் தலைமைகளிடம் நமது மக்களின் வாழ்வுரிமை பற்றிய கேள்விகளை நெஞ்சை நிமிர்த்திக் கேட்காவிடில் சூறையாடப்பட்டவர்களாகவே மாறிவிடுவோம்.