Tuesday, September 29, 2009

கடந்தவைகளும் இனியுமாய் : இலங்கையில் சிறு பான்மையினங்கள்

பர்ஸான்.ஏஆர்

இலங்கையில் சிறுபன்மையினங்களின் வாழ்தல் பற்றிய உரையாடல்கள் இன்று பல்வேறு முறைமைகளின் பின்னணியில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பிரதியும் அது பற்றிய சில விடங்களை கதையாடல் தளத்திற்கு கொண்டுவர முனைகிறது. இங்கு, பலதரப்பாலும் இன்னும் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நமது மக்களின் வாழ்வின் அர்த்தமே முதன்மைக் காரணியாய் கொள்ளப்படுவதினை அவதானிக்க வேண்டும். ஏனெனில் விடுதலைப் போராட்டத்தின் இடைக்காலத்திலிருந்து மக்கள் வாழ்வின் அர்த்தத்தின் தேவையினையும் பார்க்க தேர்தல் வெற்றிக்கான உபாயமும் இயக்கங்களின் கட்டமைப்புமே நமது அரசியலில் முக்கியம் பெற்றிருந்ததினை காண்டிருக்கிறோம்.

இலங்கையில் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் பற்றிய நமது அவதானிப்பின் போதும் அவை பற்றிய செயற்பாட்டொழுங்குகளின் போதும் இதுவரை இடம்பெற்ற இனமுறுகல்களும் அவற்றின் உச்சமாய் மேற்கொள்ளப்பட்ட பரஸ்பரப் படுகொலைகள், விரட்டியடிப்புக்கள், குண்டுவெடிப்புக்கள், இடப்பெயர்வுகள் மற்றும் அனைத்து வகை அத்துமீறல்கள் என்பனவற்றின் காரணங்களது யதார்த்தப் பின்புலங்கள் மிக முக்கியமானதாய் கொள்ளப்படுதல் வேண்டும். அப்போதுதான் அனைவருக்குமான சக வாழ்வின் சாத்தியம் நோக்கி பயணப்பட முடியும்.

இன்று இலங்கைப் பிரச்சினையும் தீர்வும் பற்றி கதைப்பவர்கள் யுத்தத்தின் விளைவுகளை பிரதானப்படுத்தி மக்களிற்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகளையே முதன்மையாய் கொள்ளும் ஒரு தளம் இங்கு காணப்படுகிறது. உண்மையிலே இந்த வகை முயற்சிகள் மீளவும் இனங்களிற்கு இடையிலான முறுகல் நிலையினை தொடரானதாய் வளர்த்துவிடும் அபாயத்தினை உணர்ந்து கொள்ளவில்லை. யுத்தமும் அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புக்களும் இனங்களிற்கு இடையிலான வரலாற்று பகைமையினை வேறுகோணத்தில் உலகிற்கு காட்சிப்படுத்தி விட்டன. உண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இன விடுதலைப் போராட்டத்திற்கும், அது உருவாக்கிக் கொண்ட வன்முறை வடிவிற்கும் அதனால் ஏற்பட்ட யுத்தத்திற்கும், அளவிட முடியாத இழப்பிற்கும் பின்னால் இருந்த இனங்களிற்கு இடையிலான முறுல்களைக் களைவதன் ஊடாகவேதான் எதிர்கால இலங்கையினை வன்முறைகள் அற்றதாய்க் அமைத்துக் கொள்ளலாம்; என்பதில் முரண்கள் இல்லை.

அதே நேரம் உலகில், காலவோட்டத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற கருத்தியல் மாற்றங்களின் தாக்கங்களும் நிச்சயமாக நமது வாழ்வொழுங்கில் ஏற்படுத்தும் திருப்பங்கள் முக்கியமாகதாகும். இந்தக் கருத்தினை விளங்கிக் கொள்ள நமது கண்முன்னே நடந்த வரலாறு சாட்சியாய் அமையும் என நம்புகிறேன். இலங்கையில் உருவான விடுதலைப் போராட்டங்களிற்கு கண்கண்ட சாட்சியாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் நாமும் இருந்திருக்கிறோம். நமது வாழ்நாட்களிற்குள்ளே இந்தப் போராட்டங்கள் அரசியல் ரீதியானதாகவும் வன்முறை ரீதியானதாகவும் கருக்கட்டி வளர்ந்து தமது பங்காற்றலினை மேற்கொண்டன. அதே போல தமது பங்காற்றலில் உச்ச அதிகார நிலையிலும் இருந்து நமக்கு முன்னே தமது வன்முறை வழியிலே கூண்டோடு அழித்தொழிக்கப்பட்டதிற்கும் நாம்தான் வாழ்நாள் சாட்சியாளர்கள்;.

காலவோட்டத்தில் மாறாத்தன்மை கொண்ட போராட்டம்

1970களின் இறுதிக் காலகட்டங்களில் விடுதலைப் போராட்டங்கள் வன்முறையினை தமது வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட போது அவை ஷவன்முறை|கள் என அழைக்கப்படவில்லை. ஷகிளர்ச்சி| என்ற அரசியல் பதம் இந்த வகைப் போராட்டங்களின் அர்த்தமாய் வழங்கப்பட்டது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பொதுவான வழக்காகவேயிருந்தது. இந்த அரசியல் அர்த்தம் காண்பிக்கப்பட்ட ஷகிளர்ச்சிகள்| தனது இனத்திற்கும் சமூகத்திற்கும் ஒரு மனிதன் ஆற்றும் மிக உயர்வான வரலாற்றுப் பணியாகக் கொள்ளப்பட்டது. (இக் கிளர்ச்சிக் குழுக்களில் பெற்றுள்ள தரங்களே ஒருவரின் அந்தஸ்தாகவும் கொள்ளப்பட்டதினை நினைவு கூர்க). இந்த வகை அரசியல் பணிக்காக தம்மை அர்ப்பணிப்பதாய் உருவகித்துக் கொண்ட கிளர்ச்சிக் குழுக்கள் தம் அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொள்ள வன்முறை சார்ந்த பயங்கரவாதச் செயற்பாடுகளினை மேற்கொண்டன. அமைப்பாக்கத்தில் இந்த வன்முறைகள் தமது அமைப்பை காத்துக் கொள்ளும் ஒன்றாய் இன்னமும் இருப்பதனால் இப் பயங்கரவாத வெறிச் செயல் கொடூரத்தின் தரத்தில் நோக்கப்படுவதில்லை.

இவ்வாறு தொடர்ந்த இலங்கையின் வன்முறைப் போராட்டத்தில் இருந்து அமைப்பாக்க நலனுக்காக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் ஒழித்துக் கட்டப்பட்டன. மிகுதியாகவிருந்த ஒரு சில குழுக்கள் தம்மைக் காத்துக் கொள்ள தேர்தல் அரசியலையும் வால் பிடிக்கும் கொந்தராத்தையும் தேர்ந்தெடுத்தன. இதே போல கிளர்ச்சிக் குழுக்களாகவிருந்து வன்முறை வழிகளில் நம்பிக்கை வைத்த போராட்டக் குழுக்களினைப் போல, மக்களின் ஆட்சி என்ற பெயரில் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் இதே வன்முறைகளினை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற கோதாவில் எவ்வித தாட்சண்யமும் இல்லாமல் தன் நாட்டுப் பிரஜைகள் மீதே நடித்தி முடித்ததிற்கும் நாமும் நமது மக்களும் வரலாற்று சாட்சிகளாய் இருக்கிறோம்.

காலவோட்டத்தில் விடுதலைப் போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறி, எந்த மக்களின் விடுதலைக்காக தம்மை வெளிப்படுத்தியதோ அந்த மக்களின் முதல் எதிரியாக மாறிய போது உலகின் கருத்து நிலைகளும் பெருமளவில் மாற்றம் கண்டிருந்தன. குறிப்பாக, செப்டெம்பர் 11 தாக்குதலிற்குப் பின் போராட்டக்குழுக்களின் மீதும், தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த நாடுகள் மீதும் அமெரிக்கா மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கை முக்கியமானதாகும். தனக்குச் சார்பான அரச நிறுவனங்களின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு களத்தில் நின்ற அமெரிக்க அதிகாரம் எவ்வித ஈவு இரக்கமுமின்றி ஷபயங்கரவாதத்திற்கு எதிரான போர்| என்ற வகையில் தனது திட்டத்தினைச் சாதித்து முடித்தது. பயங்கரவாதக் குழுக்கள் மட்டுமல்ல, குறிப்பிட்ட நாடுகளில் இருந்த அரசாங்கங்களையே இராணுவப் பலப்பிரயோகம் மூலம் கவிழ்த்து தனது அதிகாரத்தின் நிழலினை முற்றாக அரங்கில் கொண்டு வந்தது அமெரிக்கா. இதே நேரம் லிபியா போன்ற சர்வதிகார நாடுகள் தங்களின் அரசியல், வர்த்தக நிலைகளில் பெரு மாற்றங்களுடன் நேர்எதிர் நாடுகளிடையே சரணடையும் கேவளமும் நடந்தேறியது.

இந்த கால கட்டத்தினை சரியாகக் கணித்துக் கொண்ட பல போராட்டக்குழுக்கள் தங்களின் அழிவினைத் தடுத்துக் கொள்ளும் வழியாகவும் மக்கள் அரசியலில் நேரடியாகப் பங்கேற்கும் முகமாகவும் அரசியல் களத்தில் இறங்கின. ஆனால், மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக பல இராணுவ வெற்றிகளின் ஊடாக தமது இராஜ்ஜிய பலத்துடன் (அந்த காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அதாவது புலிகள் குறிப்பிட்ட தமிழீழ நிலப்பகுதியில் கிட்டத்தட்ட 70மூ புலிகளிடம் இருந்தன) இருந்த விடுதலைப் புலிகள் இந்த மாற்றங்களினை உள்வாங்கிக் கொள்ள மறுத்தனர். தமது இராணுவப் பலத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அபரிமித நம்பிக்கை இதற்கான பலமாகக் கருதப்பட்டது. (ஆட்பலத்தினை விட போர்த்தளபாடப் பலம் புலிகளிடம் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தமை இப்போது நிரூபணமாகியிருப்பதினையும் அவதானித்தல் வேண்டும்).

புலிகள் தமது அமைப்பாக்க ரீதியில் மாற்றமடைய மறுத்த அதே கால கட்டத்தில் தமிழ் மக்களினைப் பொறுத்தவரையில் உலக அளவில் அவர்களின் கருத்தும் அரசியல் நிலைப்பாடுகளும் பெரு மாற்றங்களிற்கு உள்ளாகியிருந்தது. புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கிடையிலான போர் எவ்வித திட்டமிடல்களும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருந்தமை, தமிழ் மக்களின் வாழ்வில் தொடராக சூழ்ந்து கொண்டிருந்த பாசிசத்தின் அதிகாரம், மனிதாபிமான பெரு அழிவுகள் இந்த கருத்தியல் மாற்றத்திற்கு மிக முக்கிய காரணியாகக் கொள்ளத்தக்கன. புலிகள் இயக்கத்தின் பெரும் பிளவும் அவர்கள் நேரடி அரசியலில் இணைந்து கொண்டதும் இதன் வெளிப்பாடே (அவர்களில் சிலரது கேவலமான அரசியல் வியாபாரம் பற்றிய கதைகள் வேறு விடயம்). இந்த மாற்றங்கள்தான் புலிகளின் போராட்டங்களிற்கான தார்மீக ஆதரவினை வழமையினை விடக் குறைவான அளவில் வெளிப்படுத்தும் தன்மை புலம் பெயர் தமிழர்களிடம் கூட ஏற்படுத்தியது. புலம் பெயர் நாடுகளில் மேற்கிளம்பிய மனிதாபிமானத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வுகளினை கண்ணுக்குத் தெரியாத புலிச் சக்திகள் தமக்கு சாதகமாகக்கிக் கொள்ளும் பாரிய நிகழ்ச்சித் திட்டத்தினை அரங்கேற்றி அதில் ஓரளவு வெற்றி பெற்றதும் நடந்து முடிந்த சம்பவங்கள். அதே போல, தமிழ் நாட்டு அரசியல் அங்காடிகள் தமது கனவுகளிற்கு புலிகளின் ஆதரவு அல்லது ஈழ ராஜ்ஜிய உருவாக்கம் என்ற கூத்துக்களை அரங்கேற்றி வசைபாடினார்களே தவிர நியாயமான பங்காற்றலினை மேற்கொண்டார்கள் என்று கூறவே முடியாது. ஆனால், புலிகளின் அழிவுக்குப் பின் புலிசார்பு போராட்டங்கள் எந்தளவு வீச்சுடன் மேற்கொள்ளப்பட்டன என்பதையும் இங்கு இணைத்துக் கவனத்தில் கொள்ளல் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வழிகோலும். புலிகளின் சிறு சிறு இழப்புகளிற்கே ஹர்த்தால், கடையடைப்பு என்று தம் எதிர்ப்புக்களை தமிழ் மக்களின் பிரதேசங்களில் இதற்கு முன் பல தடவை கண்டிருக்கிறோம். ஆனால் மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில்; புலிகளின் தலைமை கொத்திக் கொலை செய்யப்பட்ட போதும், போர் விதிகளிற்கு அப்பால் யுத்தக் கைதிகள் பற்றிய எந்த விதி முறைகளும் கவனத்தில் கொள்ளாது புலிகளின் உறுப்பினர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், ஏன் சாதாரண அப்பாவித் தமிழர்கள் மனித குலத்தின் ஒட்டு மொத்த அச்சத்தின் பிடியில் பல்வேறு வுழிகளில் பலிக்கடாவாக்கப்பட்ட போதிலும் இம்முறை தமிழர் பிரதேசங்கள் மௌனங்களாகவே இருந்தன.

மக்கள் வாழ்வு பற்றிய நிலைப்பாடும் அரசியல் களமும்

இப்போது நமக்கு முன் இருப்பது, இலங்கையில் நமது மக்களிற்கான வாழ்வுரிமையினை எந்த வகையில் மீட்டெடுக்கப் போகிறோம்? என்ற இருள் சூழ்ந்த கேள்விகள்தான். பல்லாண்டு காலப் பெரும் போர் நமது மக்களின் வாழ்வினை முழுமையாய் மாற்றிவிட்டது. ''விடுதலை'', ''போராட்டம்'' என்ற சொற்கள் அச்சம் தரும் வலிகளையும் வாழ்வில் கவிழ்ந்த துயரங்களையும் அனாதரவினையுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தின் கோரப்பிடிக்குள் இறுதிக்கட்டம் வரை அகப்பட்டுக் கொண்ட மக்களின் மனோ நிலை மிகவும் சீரழிந்து போயிருப்பதை வார்த்தைகள் விபரிப்பிற்காய் தாங்கிக் கொள்ளாது. அந்த மக்களின் மனம் நிம்மதியான வாழ்வொன்றினை பெற்றுக் கொள்வதையே இப்போது எதிர்பார்த்துக் கிடக்கின்றன. இந்த நிலையில் சிறுபான்மையினங்கள் மட்டுமல்ல. சிங்களவர்களும் கூட இதனையே விரும்புகின்றனர்.

புலிகளின் புதிய அணியினர் தாம் வன்முறை வழிகளைக் கைவிட்டுவிட்டோம் என கூறினாலும் தமிழீழ நிர்மாணத்திற்கான மாற்று திட்டத்துடன் களத்தில் செயற்படப்போவதாய் அறிவித்துள்ளனர். இவர்கள் குறிப்பிடும் Transnational Tamil eelam எனப்படும் நாடு கடந்த தமிழீழம் இலங்கை இனப்பிரச்சினைக்கு பிரிவினையே வழி என்ற கொள்கையைத்தான் தொடர்ந்து கையேற்றுள்ளது. இந்த நாடு கடந்த தமிழீழ ராஜ்ஜியம் பற்றிய உரையாடல்கள் எந்தளவு நமது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் ஒன்றாய் இருக்கும் என்று யாராலும் கூறமுடியாது. ''வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை'' என்பதாய் புலிகள் காட்டிக்கொள்ளும் இந்த தந்திரங்கள் பிணாமிச் சொத்துக்களை அணுபவிக்கவும் மிச்ச சொச்ச காலத்தினையும் வெளிநாடுகளில் செலவிட்டுக் கொள்ளத்தான்|| என்றார் வன்னி முகாமிலிருந்த ஒரு இளைஞர். (Transnational Tamil eelam பற்றி தனியாகக் கதைப்பதற்கு புலிகளின் புதிய அரசியல் திட்டங்கள் வாய்ப்பு ஏற்படுத்தும் என்பதனால் இப்போதைக்கு இது பற்றிய கதையாடல்களை இந்த இடத்தில் எழுப்புவது அர்த்தமல்லை.)

Transnational Tamil eelam இலங்கையின் யாப்பிற்குள்ளால் தமிழ் மக்களிற்கான அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என்று கூறுகின்றது. ஆனால், மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் ஆதரவுடன் இலங்கை தன்மீதுள்ள கொலைப்பழியினை தீர்துக் கொள்ள சமர்பித்த திட்ட வரைவு, ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் என்பவற்றில் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்து இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~யும் 13வது அரசியல் சீர்திருத்திற்கு மேலாகவும் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது பற்றி அண்மையில் ராம் அவர்களிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இங்கு சிங்கள இனவாதக் குழுக்களான ஹெலய உறுமய, மக்கள் விடுதலை முன்னனி, தேசிய சுதந்திர முன்னனி மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்றவை 13வது அரசியல் சீர்தருத்த திட்டத்தினைக் கூட ஏற்க முடியாது என காட்டுக்கத்தல் கத்திக்கொண்டிருக்கின்றனர். இதே போல புலிகளின் புதிய அரசியல் திட்ட வரைவாளர்கள் தமது இயக்கத்தின் தனிநாட்டுக் கொள்கையிலே தொடர்ந்து இயங்கப்; போவதாகக் கூறியுள்ளனர். ஜக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என்பவற்றில் உள்ள புலி எதிர்பு நிலைகள் சிறுபான்மையினங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது தனிநாட்டு கோரிக்கைக்கு சமாந்தரமானது என்ற அறிவீனத்துடன் இருக்கின்றன. ஆனால், 13வது சீர்திருத்தம் இப்பிரச்சினையின் முடிவுக்கு போதியன்று, இதனையும் தாண்டியே அரசியல் அதிகாரத்தின் பகிர்வு இருக்க வேண்டும் என்ற கருத்து தமிழர், முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர்களிடமும் இன்று ஏற்பட்டுள்ளது ஒரு குவியமையமாக நோக்கப்பட வேண்டிய நிலையாகும். இந்த நிலையினை இன்னும் வலுப்படுத்த வேண்டியதன் அரசியல் பணி பற்றிய தேவை சகலராலும் முன்னெடுக்கப்பட வேண்டியது.

போரியல் அழிவிற்குள் ஒவ்வொரு இலங்கையனும் ஏதேனும் ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருந்தான் என்ற வகையில் இந்தப் போர்க் கொடூரத்தில் இருந்து மீண்டு இனியும் இதனை அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கிறான். இதுதான் அதிகாரங்களை நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பகிர்ந்து கொடுத்தல் என்ற உயர் பண்பின் அடையாளமாக் கொள்ளப்படுகிறது. (இலங்கையரசு தற்போது செய்து வருகின்ற மொழிக் கொள்கை உண்மையில் ஆரம்ப கட்டத்தில் சிங்கள இனவாத அரசுகள் மேற்கொண்ட மொழியாதிக்கத்திற்கு எதிரானதாக இருக்கிறது. அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தமிழ் சிங்கள மொழிகளை கட்டாயம் கற்றிருக்க வேண்டும், அரச போக்குவரத்து வாகனங்களில் தமிழ் மொழியும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பனவற்றினை அடையாளப்படுத்தலாம்).

இப்போது ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு எடுக்கும் முயல்வுகளில் நமது மக்களின் பங்காற்றல் முக்கியம் என நினைக்கிறேன். தனிநாட்டுக் கோரிக்கை எந்தவித பிரதிபலனுமில்லாமல் பல அழிவுகளையே தந்துள்ள நிலையிலும் கொழும்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள எத்தனிப்பதும் இலங்கையின் யாப்பிற்குள்ளால் சிறுபான்மையினங்களின் எதிர்காலம் பற்றி நிலைப்பாடுகளை முன்னெடுக்க ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளது என்று கருத முடியும். எனவே இங்கு 13வது அரசியல் சீர்திருத்தத்தின் போதாமையுடன் மேலதீகமாக ஏற்படுத்த வேண்டிய தீர்வுகளையும் நோக்குதல் பொருத்தம்.

சிறுபான்மையினங்களிற்கான அதிகாரப் பகிர்வும் வாழ்வும்

14-11-1987ல் 13வது அரசியல் சீர்திருத்தம் யாப்பில் ஊர்ஜீதம் செய்யப்படுகிறது. யாப்பின் 18, 138, 154ம் சரத்துக்களை திருத்துவதன் ஊடாக மாகாணசபை முறைமையினூடாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் ஒன்றாய் இச்சீர்திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.

ஆனால், மாகாண சபைகளின் ஊடாக மத்திய அரசின் அதிகாரங்கள் சிலவற்றைக் கை மாற்றுவதற்கான முன்மொழிவுகளை 1931ல் டொனமூர் குழுவினர் சிபாரிசு செய்தனர். என்றாலும் இது இவ்வாலோசனை நடைமுறைப் படுத்தப்படவில்லை. பின்னர், 1955ல் சொக்ஸி ஆணைக்குழு பிரதேச குழுக்கள் அல்லது சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றது. பின், 1957ல் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் பிரதேச சபைகள் அமைத்தல் என்ற சரத்தும் இருந்தது. அதேபோல், 1965ல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தில் மாவட்ட சபைகள் அமைப்பது என்று கூறப்பட்டது. என்றாலும் இந்த சரத்துக்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை. 1980ல் ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்கினாலும் இவற்றிற்கான நிதி, அதிகாரங்கள் என்பன போதியளவு வழங்கப்படாமை இதன் செயற்பாடு மந்தமாகக் காரணமாயிற்று. இவ்வளவு திருத்த வரைவுகளின் தோல்விகளிற்குப் பின்தான் இந்தியாவின் அரசியல் முறைமைகளினை அடியொட்டி 1987ல் மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. இம்மாகாண சபை முறைமையில் அதிகாரப் பகிர்வு இடம் பெற்றிருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அதிகாரப் பகிர்வு - ஒரு உயர் அரசியல் அதிகாரத்திலிருந்து அதிகாரங்கள், கடமைகள் என்பனவற்றை ஒரு அதிகார சபைக்கு கையளித்தலைக் குறிக்கும். சிங்கள அரசிடமிருந்த அதிகாரங்களில் சிறியதொரு பகுதி பலம் குன்றிய மாகாண சபைகளிற்கு வழங்கப்பட்ட போது கூட சிங்கள இனவாதிகள் அதனை எதிர்க்கவே செய்தனர். அதே போல் புலிகள் கூட அதன் போதாமையினை கூறி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிருந்த அரசியல், மக்கள் மனோ நிலைகள் இப்போது பெரும் மாற்றம் கண்டுள்ளது. அதே போல மாகாண சபை ஓரளவு இயங்கு நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. பொலீஸ் அதிகாரங்கள் தனக்கு வேண்டும் என மாகாண சபை முதலமைச்சர் வேண்டு கோள் விடுக்கின்ற அளவு மாகாணசபை அமர்வுகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.

இப்படியான ஒரு கட்டத்தில் யாப்பின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்நது கொள்ளும் திட்டத்தினை சிறுபான்மையினங்கள் மிகக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். உச்ச பட்ச அதிகாரப் பகிர்வுகள் அனைத்து மக்களிற்கும் கிடைக்கும் பட்சத்தில் தனியரசுக் கோரிக்கையின் அவசியம் வலுவிழந்து விடும். அதே போல் மாகாணசபை ஆளுனரின் அதிகாரக் குறைப்பும் சிறுபான்மை சமூகங்களில் இருந்து உப ஜனாதிபதிகளை தேர்தலின் ஊடாக கொண்டுவர இடமளிப்பதும் இன்னும் ஜனநாயக சக்தியினை மக்களிடம் வழங்கும் ஒரு மகத்தான திட்டமாக இருப்பதினை மனங்கொள்ளலாம். இதே போல, ஆணைக்குழு மற்றும் மாகாண நீதிமன்ற உருவாக்கங்கள் என்பன அதிகாரம் ஒரு சில அமைச்சர்களிடமும் ஜனாதிபதியிடமும் மேலதிகமாக் குவிவதைத் தடுக்கும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நீண்ட விவாதங்களிற்கு உரியது என்பதால் இந்த இடத்தில் அதனை முழுமையாக விவாதிக்கவும் விபரிக்கவும் இயலாது உள்ளது.

ஆக, இந்தவகையான அதிகாரப் பகிர்வில் இலங்கையின் மத்திய அரசு இறங்காத போது பலமிழக்கப்பட்ட இயக்கங்களும் அவற்றின் ஒரு தலைப்பட்ச கருத்துக்களும் மீளவும் மக்களிடம் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பம் ஏற்படும் வாய்ப்புக்களை மறுதலிக்க முடியாது. அரசின் சீர்திருத்தங்களிலும் ஆட்சியிலிலும் வெகு மக்கள் போராட்டங்களே பெரும் அழுத்த சக்தி என்ற வரலாற்று ஓட்டத்தினை மறுத்தொதுக்காமல் இந்த விடயத்தினை அணுகலாம். அதற்கான ஜனநாயகப் போராட்ட வழிகளினூடாக மக்கள் ஆட்சிப் பங்கேற்பும் அதன் வலுவும் ஆராயப்பட வேண்டும். மக்கள் தங்கள் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் ஜனநாயக வழிகளில் களத்திற்கு வரும் போதுதான் இலங்கையின் சிறுபான்மையினங்களனின் எதிர்காலம் நம்பிக்கையளிப்பதாய் இருக்கும். இல்லாத பட்சத்தில் நமது மௌனங்களும் சேர்ந்து மீளவும் அழிவிற்கான பெரும் உதவியையே செய்யும் என்பது வெளிப்படையான ஒன்றாகும்.

நன்றி உயிர்நிழல் - 31