Tuesday, May 19, 2009

நான்காம் கட்ட ஈழப்போரின் நிறைவு நாட்குறிப்புகள்

- பர்ஸான். ஏஆர்

இந்தப் பிரதி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது (18.05.2009-இரவு08:15) எனது கைப்பேசி நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு குறுந்தகவலினை அரசின் உத்தியோக பூர்வ செய்தி நிறுவனத்திலிருந்தும் மற்றும் இதர செய்தி நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல இலங்கையின் பெரும்பாலான தொலைக்காட்சிகளும் குறிப்பாய் அரச தொலைக்காட்சிகள் இன்று பகல் 01:30 தொடக்கம் இப்போது வரைக்கும் புலிகளின் கொலை வரலாற்றையே பட்டியலிட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த உணர்ச்சி கூடிய பரபரப்புக்கு மத்தியில் கொழும்பு உட்பட சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் பெருமளவில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்தியத் தொலைக்காட்சிகளுக்கும் வே.பிரபாகரன் பேசு பொருளாக மாறிவிட்டார். குறிப்பாக ஆசியன் நியூஸ் அலைவரிசையினை கூறமுடியும்.

இப்போது கிடைத்த செய்திகளின் படி அய்க்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் 22ம் திகதி இலங்கை வருகிறார். இராணுவத் தளபதிகளிற்கு மேதகு ஜனாதிபதி பதவி உயர்வுகளை வழங்கியிருக்கிறார். 22ம் திகதி கொழும்பில் படைவீரர்களிற்கு எல்லையற்ற நன்றி செலுத்தும் விழா நடை பெற இருக்கிறது. இதே போல் இன்னும் பற்பல...
இப்படியாக நீண்டு கொண்டு போகும் வெற்றி விழா வரலாற்றெழுதுகைக்கு இடையேதான் முப்பது வருடங்களுக்கு மேலாக (1984லிருந்து) இலங்கையின் உள்நாட்டுப் போராக இடம் பெற்று வந்த ஈழப்போராட்டம் யார் என்ன சொன்னாலும் மிக முக்கிய கட்டத்தினை அடைந்து விட்டது. அதாவது ஒரேயொரு ஆயுதத் தலைமையின் (வே. பிரபாகரன்) கீழான போராட்டத்தின் இறுதி நாள் கடந்த 16.05.2009 ஆகும்.

விடுதலைப் வேட்கையின் பிரதியாயும் சிங்கள அடக்கு முறைக்கெதிரான மாற்று வழிமுறையாகவும் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்று பெற்றுக்கொண்டுள்ள வடிவம் பற்றிய உரையாடல் முக்கியமானது. தமிழ் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம், பின்னர் அது எடுத்துக் கொண்ட வடிவங்கள் என்பன தொடர்பாக நிறையவே நமது சூழலில் கதைக்கப்பட்டு விட்டன (அல்லது கதைப்பவர்கள் கதையும் முடிந்து விடும் ஒன்றாய் புலிகளின் பதில்களும் இருந்து வந்தன). ஆகவே அவ்விடயத்தினைத் தவிர்த்து இன்றைய கட்டத்தில் விடுதலைப் போராட்டங்களிற்கு நடந்துள்ள கதியினைப் பற்றி ஒரு கணமேனும் வாசிப்புச் செய்து கொள்வது சிறுபான்மையின அரசியலிற்கு இனி முக்கியமான தென நினைக்கிறேன்.

விடுதலைப் போராட்டங்களின் தோற்றுவாய்

காலனியத்திற்கு எதிராகவும், கொண்ட கொள்கைகளிற்கு ஆதரவாகவும் வன்முறை அரசியல் போக்கினை ஒரு போரியல் வழியாக நாம் அண்மைக் காலங்களில் கண்டிருக்கிறோம். காந்தியின் அகிம்சைப் போராட்டங்களும் கூட இதே காலப் பகுதியில்தான் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. இவ்வகையான வரலாற்றுக் காலத்தில் ஒரே நாட்டுக்குள்ளே அதிகார பகிர்வுகளில் ஏற்பட்ட மிகக் கேவலமான போக்குகள் இனங்களிற்கு இடையிலான பகைமைக்கு காரணமாகியதையும் நாமறிவோம். நமது மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் போது எந்தவொருவனும் கை கட்டி வேடிக்கை பார்த்திருக்க முடியாதுதானே. அவ்வகையான புறக்கணிப்புகள் ஒரு அரசியல் எல்லைகளிற்குள்ளே பல தேசங்களின் வரலாறுகள் அபகரிக்கப்படுவதையும் அவை அழித்தொழிக்கப்படுவதையும் எதிர்த்து தம் குரலினை பதிவு செய்யத் தொடங்கின. மேலும் வாழ்வுரிமை அபகரிக்கப்படும் போதுதான் ஒரு அரசியல் எல்லைக்குள்ளே வாழும் மக்கள் தங்களிற்கான தனியான சுதந்திர நாடு பற்றிய சிந்தனையினை மிக வெளிப்படையாகவும் அதற்கான வன்முறைப் போராட்டங்களினையும் மேற்கொள்ளத் தொடங்கினர். பல்வேறு போராளிக் குழுக்கள் ஒரே இனத்திற்கான விடுதலைப் போரில் இடம் பெற்றாலும் அவைகளிற்கு இடையிலான முரண்பாடுகளின் பின்னர் எதுவோ ஒன்;று அல்லது இரண்டே அதிகாரம் கொண்ட குழுவாய் மாறும் நிலையினையும் நாம் கண்டுள்ளோம். மற்றும் பல்வேறு நாடுகளில் விடுதலை போரில் பங்கேற்கும் இயக்கங்களிற் கிடையே பரஸ்பர தொடர்புகள் ஏற்படுவதும் அவற்றிற்கிடையிலான உறவுகள் பல துறைகளினூடாய் (வியாபாரம், பயிற்சி, அரசியல், திட்ட நிறைவேற்றல்கள், மற்றும் இன்னும் பல) வலுப் பெறுவதையும் நாம் அவதானிக்கலாம். இதே போன்று ஒரு நாட்டின் உள்ளக முரண்பாடுகளில் மற்றொரு நாடு பல்வேறு காரணங்களினதும் அவையொட்டிய அரசியல் பின்ணனியுடனும் தம் ஆதிக்கத்தினை பரிசோதித்துப் பார்பதையும் நாம் கண்டிருக்கிறோம். இந்த வரலாற்றுப் பின்னணிகளும் இன்னும் பலவும் இலங்கையின் இனப் போராட்டத்தில் ஏற்படுத்திய விளைவுகளை நாம் பொருத்திப் பார்த்தல் மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் இனங்களிற்கிடையிலான முரண்பாடுகளினது வயது வெறும் முப்பதோ நாற்பதோ அல்ல. நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் இந்த சிக்கல்கள் அவற்றின் பொறிமுறைகளாக பல்வேறு மாதிரிகளை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது. ஆரிய திராவிட இன அடையாளங்களிடையே வளர்க்கப்பட்ட இந்த போராட்டத்தில் இலங்கைச் சோனகர்களும் பல்வேறு காலகட்டத்தில் பழிவாங்கப்பட்டனர். இதனால்தான் இலங்கையின் இனப்போராட்டமானது மூன்று இனங்களிற்கிடையிலானதொன்று என்ற வடிவத்தினைப் பொற்றுள்ளதினையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. இலங்கையின் சுதந்திரத்துடன் சிங்களவர்கள் பெற்றுக் கொள்ளும் அரசியல் பேரதிகாரம் இந்நீண்ட வரலாற்றுப் போராட் டத்தி;ல் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டது. காலப்போக்கில் தழிழீல விடுதலைப் போராட்டத்தின் பாசிசம் வே.பிரபாகரனின் இராணுவ அரசியலால் வழிநடாத்தப்பட்டதிலிருந்து சிறுபான்மை சமூகங்களின் அரசியல் போராட்டம் என்ற அடையாளத்தினை அது இழந்தது நின்றதினையும் நாமறிவோம். இதற்கு நமது மக்களே இன்னும் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்றனர். மேலும் காலவோட்டத்தில் தமிழ் சமூகத்தின் அரசியலில் ஏற்பட்ட பெரும் கருத்தியல் மாற்றங்களினை புலிகளின் தலைமைகள் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதுடன் புலிகள் எழுதும் விதிகளிற்கே தலையசைக்க வேண்டும் என்ற வன்கொடுமை தமிழர்கள் மீது ஏற்பட்டதும் இந்தப் போராட்டம் தமிழ் மக்களுடன் கொண்டிருந்த உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது.
பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்களுடன் தேர்தல் கூட்டிணைவு களை மேற்கொண்ட புலிகள் இயக்கம் தான் நினைத்த ஒன்றையும் சிங்களத் தலைமைகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையினையும் நாம் மறந்துவிடலாகாது. இது ஆர்.பிரமதாசா தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரை தொடராகவே நடைபெற்றமையினை நாம் கண்டுகொண்டே வந்திருக்கிறோம். (இவைகள் புலிகள் தம் நிலையினை விட்டு மாற்று வழிமுறைகளினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமைக்கு ஒரு காரணமாயும் அமைந்தன).

விடுதலைப் போராட்டங்களிற்கு ஏற்பட்ட மாற்றுப் பார்வைகள்


அமெரிக்கா மீதான செப்டொம்பர் 11றின் தாக்குதலானது இன்னொரு வரலாறி னை உலகிற்கு வாசிப்புச் செய்யக் காரணமாகிவிடும் என்பதினை யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை. அந்த புதிய போக்கானது அதிகாரம் கொண்ட அரசுகளை விடுதலைப் போராட்டங்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று திரண்டுவதில் வெற்றி கண்டன. மத அடிப்பமைத் தன்மையுடனான போராட்டங் களினையும், இன விடுதலைப் போராட்டங்களினையும் உலகப் பொது அமைதிக்கு எதிரான தாக இந்த தாக்குதல் வடிவமைத்தது. அதே போல வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலை இயக்கங்களின் ஆயுளையும் தீர்மானிக்கும் நிலையினை இத்தாக்குதல் சம்பவம் தன் கையில் எடுத்துக் கொண்டது. இத்துடன் நின்று விடாமல் இதனை சாக்கு வைத்து அமெரிக்க நேச நாடுகள் தங்களின் பாதுகாப்பினை மீளவும் ஒரு தடவை உறுதி செய்து கொண்டன.

அதே காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க மேற்கத்தய நாடுகளின் கைகளிற் குள் அகப்பட்டு ஜரோப்பாவின் அஜந்தாவினை அப்படியே இலங்கை அமுல் படுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். இது கட்சி அரசியலினால் பிளவு பட்டிருந்த சிங்கள சுதேசிகளின் இணைவிற்கு பலமான காரணியாக மாறியதி னையும் கவனங் கொள்ள வேண்டும். புலிகளை அரசியல் ரீதியாகப் பலவீனப் படுத்தி அவர்களின் கருத்தியல்களினை உடைத்து கோரிக்கைகளை சுருக்குவ தன் ஊடாக புலிகளினையும் தென்னிலங்கையினையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கணக்குப் போட்ட ரணிலுக்கு புலிகளின் ஊடாகவே அக்கனவினை அழித்தனர் சிங்கள கடும் போக்குவாதிகள். இவற்றின் பின்னணி யில்தான் நான்காம் கட்ட ஈழப்போராட்டம் ஆரம்பிக்கின்றது. புலிகளைப் பொறுத்தமட்டில் கருணா - ரணில் சதியினால் நான்காம் கட்ட ஈழப் போராட்டத் தினை அதிகரித்த பலவீனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட் டது. இதே போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வகையில் உலகின் கவனக் குவிப்பினை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி கண்டார். குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் என்பன நேரடியாக யுத்த களத்திலும் சீனா மற்றும் ரஷ்யா அய்க்கிய நாடுகள் சபையிலும் இலங்கைக்கு பெரும் உதவி யாகவிருந்தன. (மேலதீக தகவல்: "இந்தியப் பிரதமர் 100கோடி ரூபாய் பணமும் தமிழ் நாட்டரசின் குறிப்பிடும் படியான உதவிகளுமே இப்போராட்டத்தில் வெற்றி பெற துணை புரிந்தன" இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர், மக்கள் தொலைக் காட்சி செய்திகள், 18.05.2009).

ஆக, நான்காம் கட்ட ஈழப்போராட்டத்தின் பின்னடைவுகளையும் வெற்றி களையும் நாம் கண்டு கொண்டிருந்தோம் என்ற வகையில் அது பற்றிய முன் வைப்புக்களை இங்கு பேசவில்லை. ஆயுதங்களை கைவிட தாம் தயார் என வே.பிரபாகரன் இறுதியாக தன்னிடம் கூறியதாய் புலிகளின் அனைத்துலக தொடர்பாளர் செ.பத்பநாபன் பிரித்தானிய தொலைக்காட்சியான Chennal4ற்குத் தெரிவித்திருந்த போதும் அரசு தன் பாதுகாப்பு வலையத்தினை சுருக்கிக் கொண்டே போனமை இந்த வேண்டுகோள் கவனங்கொள்ளத்தக்கதாய் மாற்றம் பெறவில்லை. அதே நேரம் புலிகளை முற்றாக அழித்து விடுவதுதான் ஒரே வழியென்று அரசு களத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தமையும் இந்த குரல் கவனத்தில் கொள்ளும் ஒன்றாய் அமையாமல் போனதற்கு காரணமாயிற்று. இறுதிக்கட்ட சரணடைவுகள் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமலும் யுத்தக் குற்றங்களின் பேரெண்ணிக்கையோடும் இந்தக் கட்ட ஈழப்போர் நிறை வை நோக்கி நகர்ந்தது. இருப்பினும் 16.05.2009 பிற்பகல் விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் 360 பேருடன் சுருங்கிய பாதுகாப்பு வலையத்தினை விட்டு வெளியேற முடியாது என்று கருதிய வே.பிரபாகரன் பாரிய குண்டொன் றை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாய் செய்திகள் இலங்கை பூராகவும் பரவியது. என்றாலும் எந்த தரப்பும் இதனை உறுதிப்படுத்தவில்லை. பின்னர் ஜனாதிபதி ஜி11 மகாநாட்டினை கைவிட்டு இடைநடுவில் நாடு திரும்பி யது இந்தச் செய்தியை உண்மைப்படுத்தும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் அமைந்தது. இறுதியாய் இன்று 18.05.2009 பிற்பகல் 12.30க்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்தன. என்றாலும் சைனட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட புலிகளின் தலைவர்களையும் குண்டு வெடிப்பின் மூலம் தம்மை வீரச்சாவிற்கு உள்ளாக்கிக் கொண்ட தலைவர்களையும் தாமே கொன்றதாக அரசாங்கத்தின் செய்திக் குறிப்புக்கள் கூறிக் கொண்டேயிருக்கின்றன.

25000ற்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கியும் 10000-15000 தமிழர்களை பலிகொடுத்தும் ஏராளமான மனிதப்பேரவலம் ஏற்படக்காரணமாகிய நான்காம் கட்ட ஈழப் போராட்டம் 18.05.2009 உடன் நிறைவு பெற்றதாகக் கொள்ளலாம் (என்றாலும் பல தமிழ் தோழர்கள் வே.பிரபாகரனின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாது, அது பொய்ப் பிரச்சாரம் என்றுதான் நம்புகிறார்கள். அஷ்ரஃப் அவர்களின் கொலையைக் கூட நாம் அவ்வாறுதான் நம்ப மறுத்தோம் என்பதுவே நினைவில் வருகின்றது). இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது நான்காம் கட்ட ஈழப் போராட்டம் எதைச் சாதித்தது?.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்பேரவலத்தினை தடு;த்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கூட இராணுவத்தீர்வில் கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கைகள் ஒரு இனத்தின் வாழ்வினை சீரழித்து நிம்மதியற்றதாக்கி விட்டது. நம்பிக்கையீனங்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட இந்தப் போராட்டம் மக்களை வளப்படுத்துவதில் பின்தங்கி விட்டதினை நாம் நினைவிற் கொள்ளல் முக்கியமாகும். சக துரோகமிழைப்புக்கள் ஒரு இனத்தின் பெரும் போராட்டத் தினை பேரவலங்களின் மடியிலும் நந்திக்கடல் இரத்தத்திலுமே முடித்து வைத் துள்ளன.

இனி ஜந்தாம் கட்ட ஈழப் போராட்டமா?

பல்வேறு காலகட்டங்களில் பல தலைவர்களிற்கு எதிராக தொடங்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் ஆயுதத் தரப்பின் தளபதியாக ஒருவரே இருந்து வந்தார். இந்த இடத்தில் பிடல்கஸ்ரோ கூறிய ஒரு வார்த்தை நினைவிற்கு வருகிறது. "நான் பல அமெரிக்க ஜனாதிபதிகளைக் கண்டுள்ளேன். ஆனால் அவர்கள் ஒரு கஸ்ரோவையே கண்டுள்ளனர்" என்பதாகும். வே.பிரபாகரன் இலங்கையின் பல தலைவர்களை கண்டுள்ள போதும் அவர்கள் மரணிக்கும் வரையும் ஒரே ஒரு பிரபாகரனையே கண்டனர்.

நமது மக்களிடையே குறிப்பாக தமிழ் தோழர்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்ட தினை உணர்ந்து கொள்ள முடிந்தது. இனி நமக்கு ஏற்படும் இழப்புக்களை யார் தட்டிக் கேட்கப் போகிறார்? என்பதாகும். இந்த கூற்றானது எனது தமிழ் தோழி யொருவர் என்னிடம் தொலைபேசியில் கேட்டதே. நமது மக்களின் மன உணர்வு கள் கூட வன்முறைக்கே தலைசாய்ப்பதை இது காட்டுகிறது. இந்த இடத்திலி ருந்துதான் ஜந்தாவது போராட்டம் வெளிக்கிளம்புவதாக கொள்ள முடியும்.

இப்போது ஜனாதிபதிக்கும் இலங்கை மக்களிற்கும் புறமொதுக்கி விட முடியாத ஒரு கால கட்டமும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கிறது. புறையோடிப் போன இந்த அவலங்களிலிருந்து மீண்டு ஜனாதிபதியே சொல்வது போல அனை வரும் இலங்கையர் என்ற அந்தஸ்தைப் பெறுவதே இச்சந்தர்ப்பத்தின் முக்கிய குவிமையச் செயற்பாடாக இருக்க வேண்டும். நான் நினைக்கிறேன் இலங்கை யின் உள்நாட்டு, இனங்களிற்கு இடையிலான முரண்பாடுகளை இனியும் வளரா மல் அனைத்து மக்களும் கௌரவத்துடன் வாழ முடியும் என்பதற்கான அதியுச்ச சந்தர்ப்பம் இதுவாகும். அதிகாரங்களைப் பகிர்ந்து சிறுபான்மை மக்களின் வாழ்வு ரிமையினை உத்தரவாதப்படுத்திக் கொள்ள இதனை அரசாங்கம் பயன் படுத்த வேண்டும். வட மாகாணத்திலிருந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந் தும் விரட்டியடிக்கப்பட்ட மற்றும் புலம் பெயர்ந்த மக்களினை மீள தங்களின் இடங்களில் குடியேற்றுவதன் மூலமும் சிங்கள நாடு பிடிக்கும் பாசிசத்தினை கை விடுவதன் மூலமு; மீளவும் இந்த குட்டித் தீவினை வளப்படுத்தி மக்களினை இலங்கையன் என்ற பாசத்தினை உணரச் செய்ய வைப்பதும் மிக முக்கியமான தாகும்.

அய்க்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்தளிக்க கொழும்பு முயலுமாக விருந்தால் ஜந்தாம் கட்ட ஈழப் போர் நம் மக்களின் மேம்பாட்டுக்காய் உருப் பெறும். இது தமிழர்களிற்குப் பொருந்துவது போலவேதான் முஸ்லிம்களிற்கும் பொருந்தும். மாறாக மக்களினை ஏமாற்றி அரசியல் நடத்தி கோடி கோடியாக சொந்த வங்கிக் கணக்கினை நிரப்பிக் கொள்ள அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்ளத் துவங்கும் போதும், தென்னிலங்கையின் சிங்கள கடும் போக்காளர் களை ஆரத்தழுவிக் கொண்டு ஒற்றையாட்சியின் அகோரத்திற்கு தொடர்ந்தும் தாளம் போட்டுக் கொண்டிருந்தால் ஐந்தாம் கட்ட ஈழப் போராட்டம் மீளவும் கரை படிந்த துயரங்களின் தொடராகவே மாறிவிடும். இதனையே நாம் வரலாறு நெடு கிலும் கண்டு வந்திருக்கிறோம்.

தமிழில் பேசுவதில் ஜனாதிபதி காட்டுகின்ற சிரத்தை அதிகாரங்களினை பகிர் தளிப்பதிலும் நிலையான வாழ்வுரிமையினை வழங்குவதிலும் இனி காட்டப் படுமாயின் மனிதப் பேரவலங்கள் முடிந்து விட்டதாய் கொள்ளலாம். ஆனால் நமக்கானவர்கள் என காட்டிக் கொள்ளும் நமது சொறனை கெட்ட அரசியல் தலைமைகளிடம் நமது மக்களின் வாழ்வுரிமை பற்றிய கேள்விகளை நெஞ்சை நிமிர்த்திக் கேட்காவிடில் சூறையாடப்பட்டவர்களாகவே மாறிவிடுவோம்.

No comments: