Friday, April 3, 2009

சுயநிர்ணயத்துக்கான பன்மை இயங்குதளங்கள் : இலங்கை முஸ்லிம் தேசம்

ஏற்கனவே நாம் நமக்கென வரையறுத்துக் கொண்டுள்ள அனைத்து மதிப்பீட்டுத் தளங்களின் அதிகாரங்கள் இப்பிரதியை வாசிப்புச் செய்யும் போது நிச்சயமாக குறுக்கீடு செய்து கொண்டே இருக்கும். அவ்வதிகாரங்கள் வழங்கிய செய்திகளை சட்டென்று ஒதுக்கிவிடுவதும் கஷ்டமான ஒன்றே. ஆனால் மிக நியாயமான செயற்பாடுகளினை உணர்வுகளிற்குள் முழுமையாக புதைத்து விடாமல் அகன்ற பார்வையுடன் தொடர்வதற்கு அதிகாரங்களின் மதிப்பீட்டுச் செய்திகளை ஒரு பக்கமாய் வைத்துவிட்டு பிரதிகளினை வாசிப்புச் செய்வதே சமநிலைத் தன்மையென கருதமுடியும்.

ஒற்றைக் கதையாடலின் போக்கிலே அனைத்தையும் கற்று, பார்த்து, புரிந்து, செயற்பட்டுக் கொண்டிருக்கும் நம்மிடையே பன்மைத் தன்மைகளை ஆகக் குறைந்தது நம்முன்னே வைத்துப்பார்ப்பதும் கூட மிகுந்த இறுக்கமானதாகவே இன்னும் இருக்கின்றது. ஒட்டுமொத்த சமுகத்தின் குரல், அனைவரும் ஒன்றாகுதல், ஏக பிரதிநிதித் தத்துவ விளக்கங்கள், பொதுமைப்படுத்தல்கள், நாம் கூறுகின்ற கருத்துக்களிற்கு மாத்திரமே மதத்தில் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன, மற்றைய அனைத்தும் இட்டுக் கட்டப்பட்டவைகளே, அவர்கள் புதியதை மதத்திற்குள் கொண்டுவர எந்த அங்கிகாரமும் இல்லை, மத்ஹப்பினை பின்பற்ற வேண்டியதில்லை, மத்ஹப்பினை மறுப்பது, அறிஞர்களின் கருத்துக்களை எதிர்ப்பது மிகத் தவறானது என்பன போன்றவையும் இன்னும் அதிகமான இவ்வகையான கதையாடல்களையும் நாம் அன்றாடம் இந்தச் சூழலில் கேட்கவும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளவும் கூடிய ஒன்றாய் காண்கிறோம். என்றாலும் மதத்தின் அதிகார உருவங்களிற்கு முன் கேள்விகளுக்கு இணைவான கருத்துக்களையேனும் முன்வைக்க தயக்கம் காட்டும் நமது இயங்கியலில் நியாயமான மாற்றத்தின், சிறுபான்மைக் கதையாடலின் அவசியம் வேண்டி இவ்விடயத்தினை முன்வைக்கிறோம். ஒற்றைக் கதையாடலினுடைய சர்வதிகார முகத்தினை புறமொதுக்கி அனைத்து உள்ளகக் குழுக்களினதும் பல்வேறு வகையான கலாசார, பண்பாட்டு, மொழி, நம்பிக்கை இன்னும் அனைத்து கூறுகளினையும் பரஸ்பரமாக நேசித்து வரலாற்றினூடான இத்தேசத்தின் இயங்கு தன்மையினை கண்டு கொள்ளவும் அது பற்றிய உரையாடல்களிற்காகவும் செயற்பட வேண்டிய வரலாற்று தேவையின் அவசியம் இன்று முஸ்லிம் தேசத்தின் இயங்கியலாளர்கள் முன் இருப்பதினை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், பன்மைக் கலாசார மாதிரிகளைக் கூட முஸ்லிம் தேசத்தின் உள்ளே அங்கீகரிக்க மறுக்கும் வரட்டு சிந்தனைத் தளங்கள் முஸ்லிம் புத்துயிர்ப்பு இயக்கங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த வகை வாசிப்பின் அவசியத்தை நாம் முக்கியத்துவமிக்கதாய் கருதுகிறோம்.

இன முரண்பாடுகளின் மையப் போராட்டங்கள் இலங்கையின் சூழலில் ஏற்படுத்திய சொல்லொண்னா வடுக்களின் பின்னரே குறிப்பாய் முஸ்லிம் தேசம் பற்றிய கதையாடல் பல்வேறு தரப்பினரால் மிக உறுதியான கருத்தியல் வாதமாக அல்லது மறுத்தொதுக்க முடியாத வரலாற்று நியாயத்தின் மிக முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது. இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னமிருந்தே முஸ்லிம் தேசத்தின் மீதான வன்முறைகளும் இதர அதிகார மேலாண்மைகளும் சிங்கள மற்றும் தமிழ் பேரினவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அந்த தருணங்களில் இன்றுள்ள முஸ்லிம் தேசத்தின் இருப்பின் பலமான கதையாடல்கள் கூர்மைப்படுத்தப்பட்ட இயங்கு தளங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. இது முஸ்லிம் தேசத்தின் அரசியல் வரலாற்றினை பின்தள்ளி விட்ட ஒரு அபாயகர வரலாற்றுத் தேக்க நிகழ்வுகளில் ஒன்றாகுமென் பதில் வாதப்பிரதிவாதங்கள் குறைவாகும்.

இந்த வரலாற்றுப் பின்னடைவினை ஒரு அநாதரவான நிலைக்கும் அங்கீகாரமற்ற தன்மைக்கும் இணைவாகப் பார்த்து சக சிறுபான்மையாய் இருந்து கொண்டு மிலேச்சதிகாரத்தினை தமிழ் ஆயுதக் குழுக்களும் அவர்களின் பக்கவாத்தியங்களான தீவிர பாசிச முகம் கொண்ட தமிழ்வாத, புத்திஜீவித்துவ தலைமைகளும் மேற்கொண்டன. இந்த வேளையிலேதான் முஸ்லிம் தேசம் தன் இருப்பின் மீதான சுய ஆளுகை பற்றிய அரசியல் கதையாடலினை முன்நகர்த்தத் தொடங்கியது. தன்னைத் தனியான இனமாக கொள்வதற்குரிய அனைத்து புறவய மற்றும் உள்ளார்ந்த காரணிகளை முஸ்லிம் தேசத்தினைச் சேர்ந்த பலரும் பல்வேறு தளங்களில் முன்வைத்தனர். ஒரு உப குழு, இனக் குழுமம் என்ற அரசியல் உள்நோக்கங்களுடன் முன்வைக்கப்பட்ட அனைத்து பதப்பிரயோகங்களையும் நிராகரித்த முஸ்லிம் தேச இயங்கியலாளர்கள், மக்கள் தங்களினை இலங்கையில் தனியான தேசமாக கருதி அதற்கான தள செயற்பாடுகளை முன்வைத்தனர். இந்த மிக முக்கிய சமூக இயங்கியலானது அல்லது வரலாற்றுத் தேவையானது இலங்கை வரலாற்றில் முஸ்லிம் தேசத்திற்கென்ற தனித்துவமான நீண்ட பல்வேறு வரலாற்று பார்வையினையும் அதன் பின்னான பல்தள இயங்கியலையும் வெளிப்படுத்தத் துவங்கியது.

இதனுடன் இணைந்தது போல 2002ல் ரணில் - பிரபாகரன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாய் ஒன்று சேர்ந்து கொண்ட வன்முறையாளர்களின் கூட்டமும் அதன் பின்னான தொடர் சிஙகள இனவாதக் கூக்குரல்களின் தீவிர அரசியல் மேலாதிக்கங்கள்; இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படுத்திய பாதிப்புக்களை இங்கு நோக்குதல் வேண்டும். இது முஸ்லிம் தேசத்தின் அரசியல் இயங்கு தளத்தின் செல்நெறியில் பல்வேறு புதிய போக்குகளின் தேவையினை உணரச் செய்தமையினை நாம் அண்மைக் காலங்களின் அரசியலில் கண்டு கொள்ள முடியும். (மிக முக்கிய குறிப்பு: முஸ்லிம் அரசியல்வாதிகளின் சுயநல அரசியல், தேர்தல் செயற்பாடுகளினை முஸ்லிம் தேச அரசியல் போக்காக கருத முடியாது). இவற்றின் கூர்மைப்பட்ட அங்கமொன்றாய் தென்கிழக்கு பல்கலைக் கழக சமூகத்தின் ஒலுவில் முஸ்லிம் தேசப் பிரகடனம் அமையப்பெற்றது. பல்கலைக் கழக மாணவர்களும் முஸ்லிம் தேச மக்களினதும் வெளிப்படையான இத்தேசப் பிரகடனம் முஸ்லிம் அரசியல் வரலாற்றின் மிக முக்கிய அடைவாகும்.

மிதவாத சிங்கள அரசியலின் பங்கு பற்றல் தேசிய அரசியலில் பெற்றுக் கொண்ட பின்னடைவுகள் இலங்கையின் போர், முரண்பாட்டு மையங்களை வீங்கிப் பெருக்க வைத்ததே ஒழிய நேச தேசங்களிற்கான முரணினைவு, சகோதரத்துவப் போக்கினை எதிர்காலத்தில் கண்டு கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் தூரமாக்கியே வைத்துள்ளது. மக்கள் கருத்துக்களை விட ஆட்சியாளர்களின் சுய சிந்தனைகளை மட்டுமே பின்பற்ற வைக்கும் அரசியல் வங்குரோத்து இந்த சமூகங்களின் பல் துறைகளிலும் வெறுப்பேற்படும் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதனை நன்கு அவதானிக் முடியும்;. சிங்கள மேலாதிக்கத்தின் தீவிர பல்தள ஆக்கிரமிப்பானது அரசின் முழுமையான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் சூழலில் முஸ்லிம் தேசத்தின் இருப்பானது இந்தத் தீவின் மண்னோடும், பண்பாட்டோடும், மொழி வழக்கோடும், நீண்ட வரலாற்றுப் பாரம் பரியத்தின் அடியாகவும் உள்ளமையினை வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை முஸ்லிம் தேசத்திற்கு இருப்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில் நாம் மேலே பார்த்த பல்வேறு தளங்களினூடாக முஸ்லிம் தேசத்தின் இருப்பியலின் உறுதிப்பாட்டினை கண்டு கொள்ள முடியும்.

அடுத்து, முஸ்லிம் தேசத்தின் இயங்கியல் தளத்தின் உள்ளே இஸ்லாமிய சிந்தனைகளின் பன்முகப் பார்வைகள் என்பன மிக முக்கிய இடத்தினைக் கொண்டிருக்கிறன. ஏனெனில் ஏனைய மதப்பிரிவுகளை எடுத்து நோக்கும் போது அவர்களின் போதனையில் அரசியல் இயக்கமொன்றின் வழிகாட்டலினைக் கண்டு கொள்வது க~;டமாகும். அன்று வாழ்ந்த அரசுகளுடன் சமரசமென்ற போக்கினையே ஏனைய மதப் பிரிவுகள் பெரும்பாலும் கொண்டிருந்தன. ஆனால் இஸ்லாமிய சமூகத்திற்கான சமூக நியதிகளை, ஒழுங்குகளை, பண்பாடுகளை மற்றும் இதர சமூக அங்கங்களின் செயற்பாட்டுத் தளத்தினை நாம் எடுத்துப் பார்க்கும் போது, இஸ்லாம் ஒரு இறைவழிபாட்டினால் பல்வேறு சமூக ஒழுங்கினையும் அரசியல் அடையாளத்தினையும் அர்த்தப்படுத்தும் தன்மையினைக் கொண்டிருப்பதினை மிக வெளிப்படையாக கண்டு கொள்ள முடியும். இதனால்தான் இஸ்லாம் மிக இறுக்கமான சமூக ஓழுங்கினை கொண்ட மார்க்கம் என்ற கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. அதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளிற்கு ஏற்ற நெகிழ்வான அரசியல் தன்மையினையும் பல்கலாசாரக் கூறுகளையும் இஸ்லாமிய அரசுகளிலும் இஸ்லாமிய போதனாசியர்களிடமும் அவர்கள் தத்தெடுத்துக் கொண்ட இஸ்லாமிய இயக்கங்களிடமும் காணப்படுவதில்லை என்பது பெரும்பாலான சமூக செயற்பாடுகளில் இருந்து கண்டுகொள்ளலாம். இஸ்லாம் அடையாளப்படுத்திய பன்மைத்தன்மை காலப்போக்கில் மாற்று உருவம் கொண்டதினையே இது குறிக்கின்றது. உண்மையிலேயே இஸ்லாமாகவும் அதன் உருவமாகவும் இன்று நம்மிடையே புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் நவீனத்துவத்தின் அறிவியல் மடத்தனங்களினால் உருவாக்கப்பட்டு ஒரு நீண்ட நெடிய பலமான வரலாறாக காட்சிபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விடயம் நீண்ட கலந்துரையாடலுக்குரியதாயினும் எமக்கு தேவைப்படும் விடயங்கள் பற்றிய குறிப்புக்களை இங்கு எடுத்தாள்வோம்.

இஸ்லாம் தேசியம் தொடர்பில் எப்படியான பார்வைகளை முன்வைக்கிறது என்ற வாதம் வெறும் காற்று வழி ஓலங்களாக அல்லது தொலைபேசி உரையாடலாக ஒரு சில இஸ்லாமியவாதிகளால் முன் வைக்கப்படுவதினை நாம் இன்று சந்தித்து வருகிறோம். தேசியம் இஸ்லாமிய உம்மாவிற்கு அல்லது முஸ்லிம் சமூகத்தின் பலத்திற்கு எதிர் நிலை கொண்டதென்றும் இஸ்லாம் இந்த குறுகிய அரசியல் தன்மைகளிற்கு அப்பாட்பட்ட சமூகமென்ற கருத்தினையும் இவர்கள் கூறுகின்றனர். சர்வதேச இஸ்லாமிய கிலாபத் என்பதுதான் நபிகளாரின் தூதுத்துவத்தின் அடிப்படை என்பதினை சுட்டிக்காட்டும் இவர்களின் நிலையானது முஸ்லிம் சமூகத்தினை பிரித்து கூறுபோடும் மேற்கின் கொள்கைளில் ஒன்றே தேசியம் என வாதிடுவதினையும் காணமுடிகிறது. இவற்றினை கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு மேலான பின்னோக்கிய இஸ்லாமிய வாதிகளின் கருத்தோட்டங்களாகவே கொள்ள முடிகிறதே தவிர இஸ்லாமிய அரசியல் போக்காய் கருதவியலாது. அதாவது முஸ்லிம் சிறுபான்மையினருக்கான அரசியல் போராட்ட ஒழுங்குகள் என்ற எந்த அரசியல் தன்மைகளும் அற்ற வெறும் சடங்கு ரீதியான, அறாபிய நிலப்பரப்பின் அரசியலை இஸ்லாமிய அரசியல் போராட்ட ஒழுங்காக பார்ப்பதன் அல்லது படித்துக் கொண்டதன் நிலைப்பாடாகத்தான் இந்த பின்நோக்கிய இஸ்லாமியவாதிகளின் கருத்துரைகளை பார்க்க முடிகிறது.

தேசியம் பற்றிய வரலாற்று வியாக்கியானங்களினைத் தாண்டி தேசியம் என்ற கருத்து நிலையின் உருவம் வௌ;வேறு மாற்று வடிவங்களினை கொண்டிருந்ததினை நாம் உலக அரசியல் போக்குகளில் கண்டிருக்கிறோம். ஒரு இடத்தில் தேசியம் அதிகாரத்தின், அடக்குமுறையின், வரலாற்று ஆதிக்கத்தின் கருவியாகவும் இன்னொரு இடத்தில் அதே தேசியம் வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமானதாகவும், வெகுளித்தனமான வரலாற்று எழுதுகையினை நிராகரிக்கும் ஒன்றாகவும் தனது உருவத்தினை மாற்றி மாற்றி எடுத்துள்ளது. பொதுவான ஒரு சில விடயங்களினால் இணையும் குழுக்களை தேசியமாக அல்லது தேசமாகக் கொள்ளலாம் என்பது பரவலான தேசியம் பற்றிய பார்வையயாகும். வரலாற்றினூடாய் தேசியத்தினை முன்வைக்கும் பார்வையும் பெரும்பாலான விடங்களில் இணைந்து செயற்படும் குழுவும் அரசியல் பின்னணியுடன் தேசியத்துக்கான தளமாக தம்மை அடையாளப் படுத்துகின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட இனக் குழுமம் தன்னைத் தேசமாகக் கருதுவதற்கான கூறுகளைக் கொண்டிருக்கும் போது அக்குழுமம் ஒரு தேசமாக உருப்பெறுவதினையும் நாம் கண்டு கொள்;ள முடியும். இங்கு ஒரு குழுமம் அகரீதியாக தனக்குள்ளே கொண்டிருக்கும் இனம், மதம், மொழி, பிரதேசம், நிறம், பண்பாடுகள், கலாசாரம், ஒத்த அரசியல் தேவைப்பாடுகள் என நீண்டு செல்லும் காரணிகள் தேசமொன்றின் ஒன்றிணைவுக்கான பின்னிணைப்புக்களாக கொள்ளப்படுகிறது. ஆனால் வரையறுக்கப்பட்ட தேசியத்தின் கூறுகளினை இன்னும் தங்களுடன் ஒட்டிக்கொண்டுள்ள மாக்சிச அரசியல் சித்தாந்த குழப்பங்களுக்குள்ளால் பார்க்கப் பழகிக் கொண்ட சில புத்திஜீவித்துவ அரசியல் தலைமைகள் ஸ்டாலின் போன்றவர்களின் கருத்தோட்டங்களில் இருந்து விடுபடமுடியாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது (தங்களின் அரசியல், செயற்பாட்டு நிலையானது மார்க்சிசத் தின் அடியொட்டியது என்பதினை இவர்கள் ஒரு நாளும் வெளிப்படுத்தித் திரிபவர்கள் அல்ல என்பது இங்கு கவனிக்கத் தக்கது). காலங்கடந்த மஞ்சள் புத்தகங்களின் அல்லது பழைய வாசிப்பாளர்களின் உரைகளிற்குள்ளேயே இன்னமும் உலகிற் கான வரையறைகளையும் நியதிகளையும் குறுக்கிக்கொண்ட இவ்வாசிப்பானது சிறுபான்மையினதும் விளிம்பு நிலை மக் களினதும் போராட்டத்தின் சாத்தியமான ஒழுங்குகளினை பரிசீலிப்பதினைக் கூட ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் இல்லை.

இந்த இடத்தில் மார்க்சியமும் நவீன அறிவியல் கட்டமைப் புக்களும் தமக்கு வசதியான ஒன்றிரண்டையே தேசியத்துக்கான கூறுகளாகக் கொண்டிருப்பதினை பின்நவீன போக்கு தூக்கியெறிந்து இணைவுக்கான கூறுகளை அந்தந்த மக்களின் அரசியல் பின்னனியுடன் பார்ப்பதினை நாம் கண்டு கொள்ளலாம். பின்நவீனத்துவ பார்வைகள், பின்நவீனத்துவ விளக்கங்களுக்கான தளம் என்பன மேற்கின் தத்துவ வரலாற்றியலுடன் தொடர்புபடுத்தியே விளங்கப்படுத்தப்படும் மிக மோசமான சூழலிலே இங்குள்ள இயங்கியலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பின்நவீனத்துவம் என்பதினை முடிச்சு போடப்பட்ட பொட்டலமாக பார்க்கின்ற அறியாமைத்தனத்தின் பக்கவாதம் இவ்வகையான அணுகுமுறைகளினை கொண்டி ருக்கிறது. உதாரணமாக ஜெயமோகன் எழுதிய “பின்நவீனத்துவக் கட்டுரை எழுதுவது எப்படி?” என்ற பிரதியின் பின்னிருப்பதும் இவ்வகையான பொட்டலப் பார்வைகளே. இது நவீனத்தின் அறிதல் முறைமைகளினால் வளர்க்கப்பட்ட மிக மோசமான விளைவுகளில் ஒன்றாகும். பின்நவீனத்துவம் மேற்கில் மதங்களின் அரசியலினை நிராகரிக்கும் போது பெருவெளியினர் தங்களின் கட்டமைக்கப்பட்ட முஸ்லிம் தேசியத்தின் எழுதுகைக்கு பின்நவீனத்தை அழைப்பதன் வேடிக்கைபற்றி யதீந்திராவின் ஒரு “நேர்காணலும் சில மனப்பதிவுகளும்” என்ற அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டப் பட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அதே போல் பின்நவீனத் துவம் என்பது மேற்கின் கருத்தியல் வாதம். அதனைக் கொண்டுவந்து இஸ்லாமிய நிலைக்களனுடன் இணைத்துப் பார்ப்பது மிகமோசமான, ஒத்துவராத போக்கு என முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய முகாம்களின்; எழுத்தா ளர்களினதும் காற்று வாதங்களினையும் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

காலம், வரலாறு, மக்களின் அரசியல் தேவைப்பாடு பற்றிய பின்நவீனத்துவத்தின் அணுகுமுறையென்பது இங்கு நமது மக்களின் செல்நெறி சார்ந்து முன்னெடுக்கப்படவில்லை யென்றே நாம் கருதுகிறோம். காலம், வரலாறுகள் என்பன முடிந்து போய்விட்ட ஒன்றல்ல. எமக்கு கிடைத்துள்ள அனைத்து அறிதல்களும் அவற்றின்; பின்னணிகளும் உண்மையில் இவ்வாறுதான் நடைபெற்றதல்ல என்பதினை பின்நவீனத்துவம் குறிப்பிடுகிறது. இப்புள்ளியில் பின் நவீனத்துவத்தின் பார்வையானது இங்கிருக்கின்ற வரலாற்று வாக்குமூலங்களின் போக்கினை திரும்பிப் பார்க்கவும் முடிந்து விட்டதாய் கூறப்படும் வரலாற்றில் முஸ்லிம், சக சிறுபான்மையினங்களுக்கு இருக்கின்ற பங்குபற்றலினை தேடிச்செல்லவும் துணையாகவிருக்கின்றது. நம்மிடமிருக்கும் பாடப் புத்தகங்கள் வாயிலான கடந்த காலமென்பது அறியாமையோடும் வெகுளித்தனத்தோடும் அணுகப்பட்ட சரித்திரமாகுமென்பதினை பின்நவீனத்துவம் எவ்வித ஒளிவு மறைவுகளுமின்றி உரக்கக் கூறுகிறது. அடக்கபபட்டவர்களா கவும், வரலாறற்றவர்களாகவும், வந்தேறு குடிகளாகவும் தம் சொந்த நாட்டிலே வடிவமைக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு தேவைப்படும் அரசியல் அணுகு முறைமைகளில் பின் நவீனத்துவ அரசியல் ஒழுங்கானது இன்றுள்ள செயற்தளங் களில் மிக முக்கியமானதாகும். ஒற்றை ஓவியத்தினைவிட சேர்க்கை ஓவியங்களான கொலாஜில் அதிகமான ஈர்ப்புத் தன் மையினை நாம் அனுபவிப்பது போலதான் ஒற்றை ஓவியமாக வரலாறும் இன்னபிறவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த தேசத் தில் பின்நவீனத்துவ அணுகல்முறை கொலாஜின் சந்தோச மான வரலாற்று படிநிலைகளினை அடையாளமிடுகிறது. இந்த வகைமைகளின் பின்னணியில்தான் இலங்கையின் வரலாற்றினையும் பின்நவீனத்துவ வரலாற்றுப் பார்வையினூடாய் பல் சமூகங்களின் தேசமாக அணுகுதல் மிக முக்கியம் என நினைக்கிறோம். அதே போல் அந்தப் பன்மைத் தளத்தினை எமது உள்ளக முஸ்லிம் தேசத்திற்குமுள்ளே கண்டு அதனைக் கொண்டும் ஒரு முடிந்து விடாத நீண்ட பார்வையினையும் பன்மைத் தன்மையினையும் பேச வேண்டிய தேவை நமக்கு முன்னே இருக்கின்றது. அதாவது ஒடுக்குமுறைக்குள்ளான அல்லது விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட முஸ்லிம் தேசத்தின் வரலாற்றுத் தேவையின் நிமிர்த்தம் அதன் வரலாற்று பன்மைத் தன்மையினுள்ளே அது இதர தேசங் களில் இருந்து வேறுபட்டு நிற்கும் கூறுகளினையும், முரணிணைவுகளையும் விN~டமாக இலங்கை முஸ்லிம் தேசத்தின் தனிக்கூறு களினையும் பற்றிய பார்வை - சோனக தேசத்தின் நீட்சியாய் உருப்பெறும் இலங்கை முஸ்லிம் தேசம் - நமக்கு மிக முக்கியமானதாக இன்று இருக்கின்றது.

இப்போது முளைத்துக் கொண்டு கிளை பரப்பித்திரியும் பல்வேறு இஸ்லாமிய புத்துயிர்ப்பு இயக்கங்களாக தங்களினை அடையாளம் காட்டிக் கொள்பவைகளின் அரசியல் அணுகு முறைமைகள் இங்கு கவனிக்கத்தக்கவை. இவற்றின் இஸ்லாமிய சமூகம் பற்றிய பல்வேறு போக்குகளில் பெரும்பாலானவைகள்; இந்த மண் சார்ந்த அணுகுதல்களாக இல்லாமல் அவற்றிற்கு மாற்றமாக இருப்பதினை நாம் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. அறாபிய தீபகற்பம், இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டங்களில் இஸ்லாத்துடன் தம்மை இணைத்துக் கொண்ட நிலங்கள் சார்ந்தும் அந்த நிலத்தின் மக்களது பண்பாடுகளுடன் பிணைந்திருக்கும் பல்வேறு வகையான விடயங்கள் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் கலாசார, பண்பாட்டுக் கோலங்களாகவும் இஸ்லாத்தின் முறைமைகளாகவும் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இவை பற்றி பல்வேறு கருத்துகளை நாங்கள் கொண்டிருந்தாலும் இவற்றிற்கு முன்னே எமது எதிர்க் கதையாடலினை நிகழ்த் தாமல் இருப்பது கூட ஒரு வகையில் நவீனத்தின் அறிவியல் அடக்குமுறையே ஒழிய வேறொன்றுமில்லை. இங்கு மத பீடங்கள் என்ன கூறினாலும் அது சாதாரண மனித புத்திக்கு எட்டாவிட்டாலும் கூட அவற்றிற்கு முன்னேயும் சில இடங்களில் எதேச்சதிகாரத்துடன் மதம் நடாத்தும் மதத்தின் தலைமை களுக்கு முன்னேயும் நியாயத்தினையும் இஸ்லாத்தின் உளவியல் முறைமைகளினையும் இஸ்லாம் எடுத்துக் கூறியும் நடைமுறைப்படுத்தப்படாமல் விடுபட்டுக் கொண்டிருக்கும் சமூக ஒழுங்குகளினையும் முன்வைக்க நாம் பாரிய தயக்கம் காட்டி வருகின்றோம். இந்த பின்வாங்கல் தன்மை யானது அல்லது எதிர்க்கதையாடல் அற்ற தன்மையானது நமக்கான முஸ்லிம் தேசத்தின் அனைத்துப் பாகங்களிலும் வரலாறற்றவர்களாகவும் கலாசார, பண்பாட்டு வறுமைகளுட னும் மொழிக் கடனாளிகளாகவும், தளமற்ற சமூகமாகவும் நம்மை நாம் இணங்காட்டிக் கொள்ள சந்தர்ப்பங்களினை வெகுவாக வழங்குகிறது.

மனித இயல்புடனும் நடைமுறை சூழல் சார்ந்தும் பார்க்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்களை மதத்தின் பெயரால் எமக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ள கோட்பாட்டு வியாக்கியானங்களின் ஒரு வழிப்பார்வையினை மாத்திரம் வைத்து முடிவுகளை நிறுவுகின்ற போக்கு நம்மிடையே இருக்கின்றது. இந்த செல்நெறியின் வரலாற்று அச்சத்தின் கூறுகளினைப் பற்றி இங்கு நாம் கவனம் கொள்வது மிக முக்கிய விடயமாகும். நாம் இன்று வரிந்து கட்டிக் கொண்டிருக் கின்ற பல்வேறு வகையான விடயங்களினை மதத்தின் கோட்பாடுகளுடன் ஃ மூலாதாரங்களுடன் இணைத்து பார்த்து ஒருமைப்பட்ட முடிவுகளினைப் பெற்றுக்கொள்ளும் ஒரு தன்மை நமது மரபு தொட்டு நம்மிடையே இருந்து வருகின் றது. கோட்பாடுகள் என்பன மதத்தின் பெயரால் ஃ மதத்தின் தளத்தில் மாத்திரம் தோற்றம் பெறும் ஒன்றல்ல. மதத்தை மறுத்த பல கோட்பாடுகளும் போக்குகளும் மக்களிடையே செல்வாக்கினைப் பெற்றிருப்பதினையும் நாம் மறந்து விடலாகாது. ஆனால் நிச்சயமற்ற மனித வாழ்விற்கு மதத்தின் கோட்பாடுகள் வாழ்வின் பற்றுதல்களை வழங்குவதினை மனிதன் முக்கியத்துவமிக்கதாக அல்லது புனிதமாகக் கருதுகிறான். இக்கோட்பாடுகள்தான் ஒரு துறைக்கான பாதுகாப்பு, நிச்சயத்தன்மை போன்ற உணர்வுகளை வழங்கி விரிந்த கதையாடலினை மேற்கொள்ள வழியேற்படுத்தும் கதவுக ளாகும்.

ஆனால் இந்தக் கோட்பாடுகளிற்கு வெளியே செல்ல முடியாதவாறு இறுக்கத்தினை காலப்போக்கில் அதிகாரங்கள் உருவாக்கி விடுவதில் வெற்றி கண்டுகொள்கின்றன. இவ்வாறான நிலைகளே மூடப்படும், வளர்ச்சியற்ற சமூக ஒழுங்குகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஆனால் இந்த இறுக்கத்தினையும் அதிகாரத்தின் முகங்களையும் உடைக்கும் போதுதான் சமூகத்தின் கதையாடல் தளம் விரிவு பெறும். நிலைபெற்றிருக்கும் கோட்பாட்டு முகாங்களை கேள்விக் குட்படுத்தும் போதுதான் புதிய ஒழுங்குகள் பற்றிய பார்வையும் வளர்ச்சியும் ஏற்படும். அதன் போது சமூகம் தனதாய்க் கொண்டுள்ள பல்வேறு விடயங்களை மறுக்க வேண்டி வருமென்பதை இறைதூதின் வழியினையும் வைத்தும் நாம் கண்டுகொள்ளலாம். ஒரு நாளும் ஒரு விடயம் எல்லாக் காலத்திற்கும் ஒன்று போல இருப்பதில்லையென்ற உண்மை நிலையினை புரிந்து கொள்வதே இங்கு முக்கிமாகும். மரபுகளாக நாம் அடையாளம் கண்டு கட்டிப்பிடித்துக் கொண்டுள்ள பல விடயங்கள் கால மாற்றங்களின் சூழலுக்குள் அகப்பட்டுத்தான் இன்றுள்ள வடிவத்தினை உருவகித்துக் கொண்டுள்ளன என்பதினை நாம் மறந்தே அந்தக் கோட்பாடுகளினை அணுகுகிறோம். இன்னுமொரு காலத்தில் இந்த வழிமுறைகள் வேறு வடிவங்களைக் கொண்டிருப் பதினையும் நாம் கண்டு கொள்ளலாம்.

அதே போல்தான் மதத்தின் கூறுகளாய் நாம் இனங்கண்டு நமக்கு மேலால் போர்த்திக்கொண்டுள்ள பல்வேறு விடயங்களினையும் நோக்குதல் மிக முக்கியமாதொன்றென்று கொள்ள முடியும். கோட்பாடுகளின் முகாம்;கள் அதிகாரத்தின் வாசல்களாக எல்லா மதத்திலும் செயற்பட்டிருப்பது இஸ்லாமிற்கு மட்டும் விதிவிலக்கல்ல. இந்த அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக வடிவமைக் கப்பட்டு அவ்வதிகாரங்களினை காப்பாற்றிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளினை கேள்வி நிலைப்படுத்தும் தளங்களினை கோட்பாட்டு முகாம்கள் புனிதத்திற்கு எதிரான ஒரு கதையாட லாகப் பார்த்திருப்பதினை வழமையாக்கிக் கொள்ளும். இதனையும் தாண்டிய கதையாடல்கள்தான் காலமாற்றங் களின் அரசியல் ஒழுங்குகளை தளமாக்கி முன்னேறிச் செல்லும் சமூகப் பாதையினை பெற்றுத்தர வல்லது. இதனை, மத ரீதியான கோட்பாடுகளை சமூகத் தளத்திலிருந்து ஒதுக்கும் அரசியல் போக்கு என பொருள் கொள்ளல் மிகத் தவறான வாசிப்பாகும்.

இஸ்லாமிய வழியில் ~ரிஅத் எனக் கொள்ளப்படும் மனித செயற்பாட்டுத் தன்மை அல்லது செயற்பாட்டு ஒழுங்கானது காலம், இடம், பண்பாடு, அபிவிருத்தி, வரலாற்று வித்தியாசங்கள், மனிதர்களின் தன்மை, அரசியல் தளம் மற்றும் இன்னும் பலதினை அடியொட்டியே முன்னகர்த்தப் பட்டிருப்பதினை நாம் அவதானிப்பதிலும் அல்லது அது பற்றி அறிந்து கொள்வதில் பின்நிற்கிறோம். மேற்கூறப்பட்ட இந்தப் பல்லினத் தன்மைகளினை வைத்துதான் மதத்தின் போக்குகள் மக்களினால் இனங்காணப்படுகின்றன. சமகாலச் சூழலினை மறுக்காத இறையியல்தான் காலப் பொருத்தமான நம்பிக்கையின் வழியாக இருக்கமுடியும். அப்படியில்லா விட்டால் அன்றைய மக்களிற்கு, அறபியர்களின் சூழலிற்கு அனைத்து வகையான வழிகாட்டல்களையும் வழங்கி விட்டு இன்றைய மக்களையும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட உலகின் மற்றைய மக்கள் குழுக்களினையும் கைவிட்டு விடுவது இறையியலின் தன்மையா? இது முடியாதல்லவா? ஆகவேதான், இஸ்லாத்தினை நமது மக்களின் நிலைக்களனில் இருந்து பூரணமாய்ப் பார்க்க வேண்டிய தேவை நமக்கு இன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கான பல்வேறு காரணிகளினை நாம் இப்போது சந்தித்து வருகின்றோம். ஏற்கனவே நாம் பார்த்த விடயங்களான நமது அரசியல் பலம், நமது சமூகத்தின் பரம்பல் தொட்டு அனைத்து போக்குகளிற்கும் இஸ்லாத்தின் அரசியல் தளத்தினை நம்முடன் இணைத்து பார்க்க வேண்டிய தேவையின் நிமிர்த்தமாக இதனைக் கொள்ளலாம். ஒரு புறவயமான மதப்பார்வையினை நமது அரசியல் தன்மைகளுக்குள்ளால் எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதினையும் இதில் அவதானிக்க முடியும். நிச்சயமாக இந்தக் குறிப்புக்கள் மிக நீண்ட, விரிந்த எழுதுகையினையும் உரையாடல் தளத்தினையும் கொண்டதாகும் என்பதினை மனங்கொள்க.

இங்கு நமது பண்பாடுகள், கலாசார மற்றும் ஏனைய சமூக மாதிரிகள் பற்றிய பார்வை குவிமையமாக நோக்கப்படுதல் முதன்மை பெறுகிறது. ஒரு மக்கள் கூட்டம் தன்னை சமூகமாக இனங்கண்டு கொள்வதற்கு மிக முக்கிய காரணிகளுள் ஒன்றாக கருதுவது கலாசார பண்பாட்டுக் கோலங்களினை என்பதினைக் ஏற்கனவே கண்டோம். இஸ்லாம் என்பது வாழ்விற்கான இறையியல் வழிகாட்டலை அனைத்து மனித வகையினருக்கும் வழங்கிய ஒரு பொது நிலைப்பட்ட தளம் என்பதினை ஏற்கனவே பல்வேறு பகுதிகளினூடாய் மிக சுருக்கமாய் நோக்க முடிந்தது. இந்த இறையியல் வழிகாட்டல் என்பது தனித்துவங்கள், வித்தியாசங்களுடன் படைக்கப்பட்ட பல்வேறு மனித குழுக்களின் அன்றாட வாழ்வியல் கோலங்களுடனும் இணையும் போதே மக்கள் மயப்பாட்டினை அடையும் என்பது சாதாரண உணர்தல் கூட வெளிப்படுத்தும் உண்மையாகும். ஆனால் நம்மிடையே இருக்கும் ஒரு வகை சமூகவியல் பார்வையானது இறையியலின் வழிகாட்டலினை அறபு மக்களின் ஒட்டுமொத்த அனைத்து வகையான சமூக பின்புலத்துடனும் தொடர்புபடுத்தி மதத்தினை அறிமுகப்படுத்தி வைத்திருப்பதினையும், இவையே இஸ்லாமிய மாதிரிகள் என்ற அதிகார நிலைகளினை உறுதியாக இட்டுள்ளதினையும் நாம் கண்டு கொள்ள முடியும்;. இந்த வாசிப்புத் தன்மையின் அபத்தம் நமக்கான சிறுபான்மை அரசியல் போராட்டத்தின் ஒழுங்கினில் மிகப் பெரிய எதிர்த்தாக்கத்தினை விளைவித்திருப்பதினை பேரினவாதத்தின் அரசியல் நகர்தல்களிலிருந்து காண்கிறோம். கலாசார பண்பாடு தொடக்கம் அனைத்திலும் நமக்கான வறுமையினை நாமே ஏற்படுத்திக் கொள்ளும் துர்பாக்கியத்தினை நமது மதத் தலைமைகளின் குறைவிருத்தி செயற்பாடுகள் இருண்ட தன்மையில் வைத்து செய்து முடித்துள்ளன. இதைத்தான் மிகப் பாரிய வரலாற்று அபத்தமென இனங்காண்கிறோம். இதனை சமய, மதங்களிற்கு இடையிலான தளம் பற்றிய பார்வையில் ஏற்படுகின்ற தெளிவின்மை எனவும் அடையாளம் படுத்தலாம். ஏற்கனவே குறிப்பிட்ட பொது நிலைப்பட்ட இறையியலின் வழிகாட்டல் தளமானது மக்கள் கூட்டத்தின் வித்தியாசங் களுக்கு ஏற்ப வாசிப்பு செய்யப்பட்டு விஸ்தாரம் பெற முடியாமல் போனதாகவும் இதனை கொள்ள முடியும். மதத்தின் கற்றலுக்கும் சமூகப் போராட்டத்தின் போக்குகளிற்கும் இடையில் நீண்ட நெடுங்காலமாய் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடைவெளியின் பாதிப்பே இதுவாகும். எனவேதான் இஜ்திஹாதின் வழியில் நின்று இஸ்லாமும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மற்றும் இதர தளங்களும்; பார்க்கப் படவேண்டிய தேவைப்பாட்டின் அவசியம் பற்றிய உரையாடலினை தொடக்கி வைக்க வேண்டுமென பேசுகிறோம்.

அண்மையில் எனது மாணவ நண்பர்களுடன் வகுப்பறையில் ஒரு உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நமது மறைந்து போய்க் கொண்டிருக்கும் சில பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதையாடல் இடர்பட்டு நின்றது. அப்போது ஒரு மாணவ நண்பன் மருதாணி போட்டுக் கொள்வது தமிழர்களின் பண்பாடு என்றுதானே அறிந்துள்ளோம். அவர்களிடமிருந்துதானே நமக்கும் இது பரவியது. இஸ்லாத்தில் இதற்கு எங்கும் ஆதாரம் இல்லையே என்ற வாதத்தினை முன்வைத்தார். அதன் போது உடனிருந்த தமிழ் மாணவியொருவர் மருதாணிக் கோலம் போட்டுக் கொள்வதிலும் அதனை பல்வேறு வடிவங்களில் அமைப்ப திலும் முஸ்லிம் பெண்கள் மரபாகவே தேர்ச்சி பெற்றிருந்த தினைக் பல்வேறு உதாரணங்களுடன் முன்வைத்தார். நாம் மேலே உரையாடிக் கொண்டு வந்த விடயத்துடன் இது தொடர்புபடும் புள்ளி எனக்குள் பட்டு நின்றது. ஒரு சாதாரண சமூகத்தின் செயற்பாடு கூட மதத்தின் பெயரால் வேண்டு மென்றே உரு மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுவதினை காண முடியும். அதே போல் திருமண நிகழ்வில் காணப்படும் பல்வேறு சமூக போக்குகளிற்கு மதத்தின் பெயரினைக் கொண்டு அதில் முன்நிறுத்தப்படும் குடும்ப விழாக்களிற்கு மத அங்கீகார எல்லையிடல் பற்றியும் அந்த உரையாடல் இடம் பெற்றது.

இதே போல் இன்னும் பல்வேறு விடயங்களினை நமது பன்மை இயங்கு தளங்களிற்குள்ளே நாம் கதையாட வேண்டிய தேவையிருக்கிறது. நமது வாழ்விடங்களிலும் நாம் முன்னர் வாழ்ந்து வெளியேற்றப்பட்ட பல இடங்களிலும் நமது நிலவுரிமையின் அடையாளமாக இருப்பது ஸியாரத்துக்களே. மிக நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவை இந்த ஸியாரத்கள். சிலவேளைகளில் அறபுப் பெயர் இல்லாமலும் அவையிருக்கின்றன. நமது வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடரினை சுருக்கி இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரே நமக்கும் இந்த தேசத்துக்குமான உறவினை கூறிக்கொண்டு சிலர் தங்களின் மேட்டுக்குடி ஸ்தானங்களை காப்பாற்று கின்றனர். மேலும்; இமாம் வஹாப் அவர்களின் வழிகாட் டலை இடம், காலம், சூழலின் அரசியல் சமூக நடைமுறையு டன் பொருத்திப் பார்க்காத சித்தாந்த வாதிகளும் இந்த ஸியாரத் களை அழித்தொழிக்கும் மிகப் பெரிய தவறினை செய்து வருகின்றமையினையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும் (இதற்காய் ஸியாரத் வழிபாட்டு முறையினை ஏற்றுக் கொள்ளல் என்பது பொருளல்ல. நமக்கு முன்னிருக்கும் வரலாற்றுச் சுவடுகளாக இவற்றினைப் பார்க்க வேண்டியதன் அவசியம் குறித்து மட்டுமே கதையாடுகிறோம். மாறாக சடங்குகளின் வகைமை பற்றிய மத நிலைப்பட்ட நோக்கல் இப்பிரதியின் தன்மையல்ல). அதே போல் முன்னர் பெருநாள் தினங்களில் நம்மிடையே காணப்பட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்களினை இன்று நமக்கு அங்கீகாரம் வழங்கப்படா தவையாகக் கருதி ஒதுக்கி புறம்தள்ளி விட்டோம். அதற்கு நமது மதிப்புக்குரிய மத நிறுவனங்கள் வழங்கியிருக்கும் சான்று இஸ்லாத்தில் இதற்கு எங்கும் ஆதாரங்கள் இல்லையென்ற வறட்டு மதீப்பீட்டுகளாகும். இங்கு இருக்கும் விடயமென்ன வெனில் இஸ்லாத்தின் சமூக ஒழுங்கினையும் அதன் மக்கள் பண்பாட்டினையும் நபிகளாரின் காலப்பகுதிக்குள் மாத்திரம் சுருக்கி கற்றுக் கொண்டதன் விளைவேயன்றி வேறொன்று மில்லை. பிரதான இரண்டு சட்ட மூலாதாரங்களினை வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்ற துணை சட்ட மூலாதாரங்களின் தரத்தினையும் அதன் பங்குபெறுகையினையும் புறமொதுக் கும் தன்மையே இதுவாகும். இந்த இறுகிப் போன கற்றல் முறைமையானது சிறுபான்மை முஸ்லிம் அரசியல் போராட்டத்தின் ஒழுங்குகளிற்குத் தேவைப்படும் பல்வேறு புறக்காரணிகளின் பங்கு பற்றலினை மறுதலிக்கின்ற நிலைக்களனை ஏற்படுத்தி விட்டது.

இறுகிப்போன வெகுளி அடையாள மாதிரிகளினை முன்வைத்து ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளும் தீவிர போரினவாதங்களின் முன்னே நியாயமான சுயநிர்ணயத் தினை அடையாளப்படுத்திக் கொள்ள நமக்கு இஸ்லாத்தின் பன்மைத்துவ அரசியல் போக்கு அவசியப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின்; அரசியல் போராட்டங்களினை வெகுமக்கள் போராட்டமாக வடிவமைத்து அரசியல் நகர்வுகளினை மேற்கொள்ள வேண்டியதன் தேவைப்பாடு இன்று நமது இலங்கைச் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளதினை காண்கிறோம். அரசியல் கட்சிகளின் போராட்ட ஒழுங்குகள் அடக்கப்பட்டு விட்டதன்பின் இந்த வெகு மக்கள் போராட்டங்கள்தான் நியாயத்தினையும் சுதந்திர வாழ்;வினையும் வென்றெடுக்கக் கூடியதாய் உள்ளது. இந்த முறைமையின் பின்னணியில் முஸ்லிம் தேச மக்களின் அரசியல் போராட்டங்களில் முதலில் அந்த மக்களின் பன்மைத் தன்மைகளினை அடையாளப்படுத்தி அதனூடான கலாசார மாதிரிகளையும் வடிவங்களினையும் அவதானிப்புக்குட் படுத்தல்; முக்கியம் பெறுகின்றது. இதுவே நமக்கான முஸ்லிம் சுயநிர்ணயத்தினைப் பெற்றுக் கொள்ளும் நீண்ட போராட் டத்தில் ஒரு நியாயமான பாத்திரத்தினை கொண்டுள்ளதினை குவிமையப்படுத்தல் வேண்டும். இங்கு எடுத்தாளப்பட்ட விடயங்களானது ஒரு சமூகத்தின் அரசியல் வழியினை இறுக்கி அடைத்து விடாமல் மிகத் திறந்த முறையில் அனைத்து இனக் குழுக்களினையும் சமூக தளத்தின் இயங்கியலாய் வடிவமைத்து ஒரு சிறப்பான கருத்தியல் தளத்தினை நோக்கி நகர இடமளிக்க முடியும். இது பற்றிய கதையாடல் கருதியே இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

No comments: